Saturday, 7 May 2016

வாழ்க்கை வாழ்வதற்கேவண்ண மலர்த் தாமரைகள் கண்டேன் - அங்கு
   வந்து வளைந்தோடும் அலை தொட்டு விளையாட
கண்ணெதிரே  கோபுரமும் கண்டேன் - பக்கம்
   கற்கை நெறி ஓதுங் கலைக் கூடமொன்றும் கண்டேன்
விண்ணுயர்ந்த மாமலைகள் கண்டேன் - சுற்றி
   வீசிவருங் காற்றினொலி சத்தமிடக் கேட்டேன்
எண்ணமதில் இச்சை கொண்டு நின்றேன் அங்கு
  என்னை யொளி கொண்டயலில் ஏற்றமிடக் கண்டேன்
.
தண்ணிலவில் பொன்னொளித் தடாகம் - எழில்
   தன்னில் அது மின்ன அலை தென்றல் தொடஓடி
வண்ணமலர் .வாசனையும் ஏந்தி - அயல்
   வந்தெனையே தொட்டுவிட வாயடைத்து நின்றேன்
மண்ணிலிதை விட்டுமொரு வாழ்வா - என்று
    மங்கலமாய் உள்ளம்களி கொள் மயக்கம் கொண்டேன்
பண்ணி சைக்கும் ஆவலுடன் நானும்  ஒரு
  பாடும் குயிலன்ன வகை பாவம் கொண்டு நின்றேன்

உண்ணும் வகை தேனும் கனிவெல்லம் சேர்ந்து
   உள்ளதெனக் கொள்ளரிய தீஞ்சுவைப்பைக் கொண்டே
அண்ணளவாய் சொர்க்கமதை மேவும்- 0 ஒரு
   ஆற்றலுற உள்ளமதில் அழியலை போலும்
எண்ண மெழும் வேளை உயர்ந்தோடி அங்கு
   ஏற்றமிகு தோற்றமெழும் இன்பமதைக் கொண்டேன்
திண்ணம் ஒளிச்சக்தி தரும் வாழ்வில் - நானும்
   தென்றலெழும் திக்கிருந்து பாடுகிறேன் கீதம்


கண்ணருகில் தோன்றும் ஒருகாட்சி - அது
   காலமெனும் வெண்திரையில் தீட்டிதோ பார்நீ
வண்ணமெழ வானடியும் கொள்ளும் - அயல்
   வந்து மனம் பொங்கிடவே வீசும் எழில் காற்றும்
மண்ணிடையே மாண்பு கொண்டுவாழும் - மக்கள்
   மாற்றமின்றி அன்புகொண்டு வாழுகின்ற காலம்
எண்ணிலாத இன்ப வளம் சேரும் - அங்கு
    இட்டவிதி துன்பங்களை இடையிடையே தாரும்

விட்டுமதி கெட்டிடாது நாமும் - அந்த
   வேளைதனில் நம்மிடரை நாமெதிர்த்து மீண்டும்
பட்ட துயர் போக்கி வாழ்வு கொள்ளும் - ஒர்
    பக்குவத்தைப் போக்கினிலே கொண்டிருந்தால் நன்மை
சுட்ட சட்டி வல்லமை கொண்டாகும் - போல்
   சேர்ந்த துயர் தீயெரிக்க வெந்தெழுந்து வாழும்
இட்ட சக்தி தந்த வாழ்வில் தானும் - என்றும்
   எண்ணியிறை வேண்டிமனத் தீரம்கொள் நன்றாகும்

*

இருள் கொள்வதோ?

பனிமூடிப் பசும் புல்லும் பளிங்காகலாம்
பழிகூடும் அரச்சொன்று படைகாணலாம்
தனியோடும் முகில் மூடிச் சுடர் தாழலாம்
தரைமேவி இருள்மூடித் தடுமாறலாம்
கனிதேட இலைமூடும் காற்றோட நாம்
கனவோடும்  இமைமூடித் துயிலாகலாம்
இனி மூடி மனம் ஒன்று இருந்தாலுமே
இசைகொண்ட தமிழின்பம் இலையாகுமே

பணிகூடிப் பொழுதின்றிப் பகல்போகலாம்
பரிவின்றி மனைகூடிப் பலர் வாழலாம்
தணிவின்றிப் பெருஞ் சோகம் தனைவெல்லவும்
தமிழ்மீது வருந் தாகம் தலைகொள்ளவும்
மணியென்னும் இசைசந்தம்,மனமீதினில்
மறைகின்ற நிலைகொள்ள முகம் காண்பதோ
அணிகின்ற  துகில்ஆடை அழகாக்கலாம்
அகம்கொண்ட எழிலின்பம் அதை யாக்க வா

இனியில்லை எனும் எண்ணம் இடைவந்ததோ
இரவான போதில்விடி வில்லை என்பதோ
புனிதத்தை கொள்ளின்பம் பூஞ்சோலையும்
புயல் வந்து  விளையாடப் புவிசெ ய்வதென்
தனிவீழ்ந்தோம் என எண்ணல் தவறல்லவோ
தருமத்தின் செயலுக்கு அவம் அல்லவோ
குனியாது  நிலை கொள்ளக் குரலொன்று தா
குணமாக நில்லன்பைக் குறைவின்றித் தா

தமிழே சொல்லாயோ

தென்றலசைந்திடத் தேன்மொழி பேசிடும்
திங்கள் நிழலென வந்தாள் - அவள்
கன்னம் சிவந்திடக் கற்பனையால் எனைக்
கண்டு கலங்காதே என்றாள்
பொன்னை நிகர்த்திடும் மேனி யெழில் தன்னில்
பூவை இட்ட வண்ணமாக - அவள்
சின்னநடை கொண்டுவந்தவள் வந்துமுன்
சிந்தை மகிழ்ந்திட நின்றாள்

தென்னை யசைந்திடத் தேன்மலர் தூங்கிடச்
சில்லெனும் வண்டெழுந்தோட - வரும்
முன்னிலவை மறைதேகும் முகில் போலும்
மேவுங் கருங் குழலாட
புன்னகை பூத்தெனைப் கண்டுமனம்கொண்ட
பேதமை யெண்ணி வியந்தாள் - ஓர்
சின்னஞ் சிறுவனை நோக்குவதாய் என்னைச்
சொல்லெனச் சீண்டி மகிழ்ந்தாள்

அன்னையெனும் உயிர்த் தீந்தமிழே எந்தன்
ஆவிகலங்கிட நின்றேன் - இதில்
இன்னிசை தோன்றிட ஏழு மலர்களில்
என்முகம் கண்டு மகிழ்ந்தேன்
முன்னிருந்து கவிபாடும்நிலைதனும்
மீண்டும் முயிர்த்திடுமாமோ - இளங்
கன்னித்தமிழ் மகள்நீ யல்லவோ இதன்
காரணம் கூறிடவேண்டும்

மென்னிதழ் கொள்முகை கட்டு விட்டேநெகிழ்
வென்னும்  நிலைகொண்டாதாக - பழம்
தொன்மை வயதுடை கன்னித் தமிழ்மகள்
துல்லியமென் குரல்பேச்சில்,
அன்னியமல்ல உன் தன்மையிலேமனம்
எங்கலை பாய்ந்திட நின்றாய் - இந்த
இன்னல் கொண்டேங்கிட ஏது நினைந்தனை
உள்ளதியம்பிடு என்றாள்

உன்னையறிவேன் நல்உத்தமியே உனை .
இன்கவிதை கொண்டு போற்றும் - இந்தச்
சின்ன மனதினில்சேரும் புயலெழச்
சிந்தைபயம் கொண்டு நின்றேனென
மின்னல்களை அந்த மேகமதில் இட்டு
மோதுமெழில் காணும் சக்தி = உயிர்
பின்னலிலும் சிலவேடிக்கைகள் செய்து
பின்னின்று கண்டுநகைப்பாள்

என்னஇதுவென நானறியேன்  இசை
யேந்தும் முத்தமிழின் தேவி-  சுகம்
தன்னும் எழும் இசை கொள்வதினால் என்ன
இன்னல் விளைந்திடலாமோ
தின்னும் கனிதனில் வெல்லமிட்டாள் அந்த
தேன்சுவை கைப்பதுமுண்டோ -இது
என்னவகை என்று ஏளனம் செய்திசை
ஏழெனக் காட்டி மறைந்தாள்!

***நன்றி.(. இதுகற்பனை

Post title பாதைஒன்று பயணம் இரண்டு


 
காரிருள் பற்றிய கண்களிலே அந்தக் ’
  காட்சி தெரியவில்லை
நேரருள் தந்தவள் நெற்றியிலே சினம்  
   நேரும் நிலையுமில்லை
போரெனக் கீழே புரண்டெழு என்றதோர் 
   பேதமை தானுமில்லை
வாரவிழ் பூந்தளிர் போலும் மனதிலே 
   வந்ததென் தோன்றவில்லை

ஆயிரம் தந்தவள் ஆவியெனில் கொண்ட 
    அத்தனை எண்ணங்களில்
போயிருந்து செய்த போக்கினிலே என்ன 
   பூத்தது  அன்பின் வகை
வாயிருந்தும் சொல்ல வார்த்தையில்லை 
  வற்றிய தோ இலை யிலை
காயிருந்தும் கனிகொள்ள வில்லை 
   அந்தக் காரணம் சக்திநிலை

சேயெனவே நின்று காணுகிறேன் 
  எந்தத் தேசம் புதிய கலை 
தூயநிலை கொண்டு காணுகிறேன் எந்தன் 
  துன்பம் ஒழிந்த நிலை
தாயன்பு கொண்டதி னால் இதுவோ அட 
  சக்தியில் ஊற்று தனை
போயிருந்து காணப் பெற்றுவிட்டேன் எந்தன் 
   போக்கினில் சாந்தஎல்லை

மீதிகிடந்த வன் நோய்கள் கொண்ட தொல்லை 
  மாறியதாய் நிலைமை
ஏதிதில் என்மனம் கண்டது என்றுமே 
  இன்றுபோல் வந்ததில்லை
ஊதி வளரென்றே  உல்லாசத் தீயினை 
  ஓங்கிடச் செய்தவளை
யாது எனக் கண்டே வேண்டிட வந்தூற்றும் 
  மீண்டும் கவிதை மழை  

அந்தநாள்

வல்ல ஈழதேசம் அன்று வான்கதிர்க்கு நேர்நிகர்த்த
வாய்மைகொண்டு மக்கள் மண்ணைக் காக்க
சொல்லவே இனிக்கும் பேச்சு தூயநற் தமிழ்பொலிந்த
சோதியாக மின்னும் அன்பு கொண்டு
தொல்லையற்று நம்மைநாமே தோள் வலித்தவீரர்சூழ
தூக்கியகை வாளும்கொண்டு காக்க
எல்லையிட்டு நெல்வயல்கள் ஈரமுற்ற ஆழிசார்ந்த
மண்ணும் முல்லையோடு வாழ்வு கண்டோம்

நெல்வளைந்து மங்கை போலும் நீரில்தன் முகம்கணித்து
நீலவானின் செங்கதிர்க்கு நாணும்
வல்லகூச்சலிட்டும் ஓடி வானெழுந்து வட்டமிட்டு
வான்குருவி நெல்துணித்துக் காவும்
கல்லில் தெய்வரூபம் கண்டு கந்தன்வேலை முன்னிறுத்திக்
காணும் தெய்வக் கோவிலொன்று பக்கம்
இல்லை துன்பமென்று வாழ்ந்த எங்கள்தேச  மக்களன்றோ
இன்பங் கொண்டதோ மருதமாகும்

மென்னலைக்கு ஏற்ப ஆடும் மீன்பிடிக்கும் ஓடமேறி
மீண்டவர் கரையிலிட்டபோது
தன்வலைக்கு வீழ்ந்த மீன்கள் தான்துடிக்க கண்டுமாலை
தூயவள்அஞ் சும்விழிகள் நோக்கி
என்னதோ இரண்டுமீன்கள் என்னை தம்வலைக்குள்வீழ்த்தும்
ஈதொருநல் லற்புதம் என்றேங்க
வன்பகை முடிக்க வீரம் வாய்ந்த கப்பலோடும் மக்கள்
வாழ்க்கை நெய்தல் என்றதன்மை காணும்


சில்லென்றூதும் வண்டும்தேடும் செவ்விதழ்ப் பூ கானகத்தில்
சோவென்றோடி விழருவிகொட்டும்
கல்லின்மீது பட்ட நீர் தெறித்து சாரலாய் முகத்தில்
காதல் கொண்டு முத்தமிட்டே ஓடும்
எல்லைகாத்த வீரர் தூரம் இட்டசத்தம் வெற்றி கூறும்
ஏற்றதோர்  முழவின் ஓசை கேட்கும்
நல்லினித்த வாழ்வுகாணும் நாட்டுமக்கள் அச்சமின்றி
நாளுமன்று வாழ்ந்த காலம் யாவும்’

இன்றழிக்கத் தீயையிட்டு அள்ளிசாம்பல் மேட்டில் வீடு
அந்நியன் தன்சொந்தமென்று கட்டி
இன்பமென்று வாழ்ந்த வீடு எங்கள்மண்ணும் விட்டேயோடி
உண்ட நெல் விதைத்த காணி தோட்டம்.
இன்னமும் வலைபிடித்து ஏற்றவாழ்வி யைந்த மக்கள்
இல்லத்தோடு சொத்தும் சூறையாடி
கன்னமிட்ட வர்கரங்கள் காணும் ரத்தப்பூச்சு மாற்றக்
கைவிலங்கு போடும்நாளுமென்றோ

----------............

உலகம் உறவா பகையா?


 
தேனெடுக்கும் வண்டினமோ தென்றல்வர ஓடிவிடும்
  தேன்மலரில் பாசம் கொள்ளாது
தானெடுக்கும் பாதையிலே துள்ளிவரும் தென்றல் மணம்
  தந்த மலர் தன்னைக் கொள்ளாது
மீனெடுப்பில் துள்ளுமிரு மெல்லிழையார் கண்ணசைவில்
  மோகமுண்டு பொய்த்திடும் வாழ்வு
ஊனெடுக்கும் இன்பமென்றே எண்ணிவிடின் மாறித்துன்பம்
 ஏற்றமுறும் இச்சக வாழ்வு

வீடிருக்கும் வாழவிதி வெற்றிடமென் றாக்கிப் புயல்
  வீசுமதில் விளைவு பொல்லாது
கூடிருக்கும் கூட்டிலுயிர் கொண்டிருக்கும் கூடியது
  குற்றமென்றோ குளுமை பெறாது
ஆடிநிற்கும் மேனியிலே ஆணவத்தின் சாயலெழ
   ஆனந்தமோ கூடிவராது
கேடிருக்கும் செல்லும்வழி கொள்ளதுயர் மேவியின்ப
  கோட்டினைக்கால் கொள்ளவிடாது

பேடிருக்கும் பாட்டிசைக்கும் பக்கமதன் துணையிருக்கும்
   பேதமை மை யல் கொளும்வாழ்வு
ஓடி ரத்தம் சூடெழவே உள்ளிருந்து பொங்கும்வகை
   ஊற்றெடுக்கும் உறங்கவிடாது
காடிருக்கும் காட்டின்வழி கடையிருக்கும் விதியமைத்த
  காட்சிவழி மாற்றமிராது
கோடித்தனம் கொண்டிருந்தும் கொள்கைநெறி நேர்நடந்தும்
  கூற்றுவன்முன் வெல்ல விடாது

மேடிருக்கும் தாழ்விருக்கும் மின்னல்இடி கொண்டிருக்கும்
  மேதினியில் எம்மரும் வாழ்வு
கோடிருக்கும் தாண்டிமனம்  கொண்டிருக்கும் ஆவலது
  கோண்லிடும் நேர் நிமிர் வாழ்வு
நாடிருக்கும் நாட்டிற் பல நல்லவரும் கெட்டவரும்
  நண்பரெனக் கண்டிடும்போது
கூடிநிற்கும் காவலதும் குன்றித்திரிந் தாழமெனக்
  கொள்ளும் முரண் குணமிருக்காது

மூடிநிற்கும் பச்சைமரக் கூடலிலே கள்ளொழுகும்
  மென்மலர்கள் பூத்திடும் பாரு
தேடியுறை கொள்ளவென நீநடந்தால் தேளுடனே
  தீண்டும் விஷப் பாம்பு விடாது
வாடிநிற்கும் உள்மனதில் வந்ததுயர் நீங்கிடவே
  வண்ணவிரி வா ன்வெளி யாளும்
கோடியொலிப் பேரதிர்வின் கூற்றினிலே நீகலக்கும்
   கொள்கைதனைக் கைதொழு வேண்டு!


*******************

இது கேள்வி .? பதிலல்ல..!

       
 
ஆண்டஎங்கள் தேசந்தன்னை ஆளவென்று நாம் நினைக்க
அள்ளித்தீயை இட்டவரும் யாரோ
பூண்டசாமி யாரின்வேடம் போர்வைக்குள்ளே ருத்திராட்சம்
பூனையாகஎம் மிடம்வந்தாரோ
மீண்டும் எம்மை நாமே ஆள மென்னுடம்பில் வேர்த்தமேற்கு
மூண்டெழுந்த அச்சம் சேர்ந்ததாலோ
பூண்டைவேரி னோடுவெட்டிப் புற்பசுந்தரை கருக்கி
பேசும்செந் தமிழ்அழித்த பாரோ

ஆண்டியாக எம்மையாக்க ஆளுகென்றோர் வேடமிட்டு
அந்நியர் எம்மண் பறிக்கலாமோ
கூண்டினு ள்ளே போட்டடைத்துக் குற்றமற்ற மக்கள் மீது 
குண்டை வீசிக் கொல்லல்நீதி யாமோ
நீண்ட நாட்கள் பொய்யுரைத்து நேர்மையற்று வாய்மைகொன்று
நீறு கொள்ளவென்று தீ சொரிந்து
வேண்டி மண்பறித்து எம்மை வீதியிற் கிடக்க வைக்கும் 
வேந்தன்பக்கம் நூறு ஒன்று நாமோ

தோண்டியும் புயல் அழித்த தூயவர்தம் மேனி கண்டு 
தாண்டியும் பொறுத்தல் விட்டுக் கேட்க
தீண்டியும் விலங்கினத்தை  தீதினில் செய்மானம் ஒப்ப
தீந்தமிழ் அழிக்கக் கண்டும் தேசம்
சீண்டியே எழுப்பும்போதும் தோன்றிடுமாபத்தையெண்ணா
தூங்கியே கிடந்த சொந்தம் யாவும்
ஆண்டவன் எழுத்தேயென்றும் அன்னையர் துடிக்கக் கண்டும்
அந்நியம்மென் றெண்ணம்கொண்டுசோர

மாண்டவர் எழுந்திடா  ரிம் மக்கள் வீரம் குன்றவைத்து
மாபழந் தமிழ்மொழிக்குக் கேடு
வேண்டியே இழைத்த பூமி வெள்ளையில்சுண் ணாம்படித்து
விட்டதை மறைக்க ஏங்கும் போது
ஆண்டெனும் ஓர் நூறுசென்றும் ஆவதோ ஒன்ன்றில்லை யென்ற
ஆதங்கம் கொண்டின்னல் கண்டுமாள
நீண்டதோர் பொற்காலமொன்றில் நற்றமிழ் மண்கல்லுமற்ற
நேரத்தில் உண்டான தெல்லை காணும் ????

பாண்டியும் புலியென் றாடும் பாங்கினில் இபோரைக்கண்டு
பத்தினில் அறுவன் ஆங்கிலத்தை
நோண்டியுள் கலந்து பேசி நூதனப்பரிமாணத்துல்
நின்றிடில் தமிழ் சிதையக்காணும்
பூண்டினில் புல்லொடு வந்த போதிலும் காஞ்சோன்றி  எங்கள்
பொன்னெனும் இம்மேனி கொல்லப் பார்க்கும்
பாண்டியன் அச் சேரன் சோழன் பைந்தமிழ் வளர்த்துமென்ன
பாத்திருக்க வில்லும் மீன் என்செய்யும்  ???
******************