Sunday 31 May 2015

பாரில் வாழ்வைப் பார்


பட்டு விரிவானில் விட்டே இருள் போகப்
பார் உதயக் கதிர் பார்
மொட்டு விரிந்தது மல்லிகையும் முல்லை 
முற்றத்தில் பூத்தன பார்
சிட்டுகுருவிகள் செட்டையடித்து வான்
சுற்றிப் பறப்பதைப் பார்
சுட்டுவிடும் காலைச் சூரியன் வானிலே
செக்கசிவந் தெழப் பார்
.
சட்டசட என்று செட்டைஅடித்தொரு
சேவலும் கூவுது ஏன்
வட்ட கதிரவன் வானில் எழக் கண்டே
வாழ்த்தியும் கூவுது பார்
குட்டிப் பூனை ஒன்று கட்டைச் சுவரேறிக்
கொட்ட விழிக்குது பார்
எட்டிப்பாய மனம் இங்கோ அங்கோஎன்று
ஏங்கித் தவிப்பதும் ஏன்?
.
தட்டத் தட்டச் சத்தம் ’டும்’மென் றடிக்குது
கொட்டும் முரசொலி கேள்
திட்டி குரைத் தொரு நாய் அயல் ஓடுது
தட்டும் ஒலிக் கஞ்சித்தான்
நெட்டை மரத்தினில் நீண்டகிளையொன்றில்
நின்ற பச்சைக்கிளி பார்
எட்டிபிடித்ததில் உண்ணப்பல கனி
உள்ளது ஆயினுமோர்
.
வட்டப் பழமொன்றை வெள்ளையணில் ஒன்று
வந்து ருசிப்பதைப் பார்
திட்டம் இட்டு கிளி சென்|று கலைத்ததை
தின்ன தொடங்குதுகாண்
தட்டிப் பறிப்பது தர்மமல்ல பிறர்
தன்னை வதைப்பது கீழ்
கொட்டிகிடக்குது பூமியில் ஆயிரம்
கொண்டு மகிழ்ந்தென்றும் வாழ்!

No comments:

Post a Comment