Wednesday 20 May 2015

அக்கரை சிவப்பு



அழகென்று தமிழ் சொல்லி அரங்கேறவா - இல்லை
அழவென்று நிலை கண்ட கதை கூறவா
எழவென்று மனம்கொண்ட இசைபாடவா - இல்லை
எழுந்தோடி நிலம் வீழ்ந்த தொகை கூறவா
குழுவாகி இனம்காத்துக் குலம் ஓங்கவே - கொண்ட
குறிதன்னும்  தவறித்தோள் உரம் போனதும்
தழுவென்று மரணத்தாய் மடி தந்ததும் - அதில்
தலைவைத்து இளம் பிஞ்சு தனை ஈந்ததும்

உளம்மீதில் வடுவாகி இருந்தேகொள்ளும் - எங்கள்
உயிர் செல்லும்வரை துன்பம் இ|ணைந்தே வரும்
களவென்று வழிகண்டு கயமை கொண்டோர் - எங்கள்
கடை வாசல் வழிகண்டும் கண்மூடினோம்
வளம்கொண்ட தமிழ் மண்ணில் நிலம்கொள்ளவும் - இங்கே
வந்தேயெம் குடிமண்ணில் விசமாகவும்
நிழல் கூட எமைவிட்டுப் பிரிகின்றது - இங்கே
நிலை கெட்டு தமிழ் வாழ்வு சிதைகின்றது

வயல் தோட்டம் கை விட்டுப் போகின்றது - அதை
வரும்கூட்டம் தனதென்று சொல்கின்றது 
இதைக் கண்டே உலகமுள் சிரிக்கின்றது - இவர்
உதைவாங்கும் இனமென்று பெயர் தந்தது
கனவுக்கு நிறம் தீட்டி அழகென்றது - அதைக்
கைமீது கொள்ளென்று பொய் சொல்லுது
மனதுக்குள் வெறிகொண்ட உலகம் இது - வெறும்
மரியாதை உடைபோட்டுத் திரிகின்றது

நடந்தே நாம் செலும்பாதை இருள்கொண்டது - அதில் 
நெளிந்தோடும் விச யந்து உயிர் வாழுது
கடந்தே நாம் செல்கின்றோம் கடிக்கின்றது -கால்
கடுத்தே நம் உதிரங்கள் வழிகின்றது
கிடந்தே நாம் துடிக்கின்றோம் குரல்மங்குது - இதை
கேட்போர்க்கு இதயங்கள்  தொலைவாகுது
திடங்கொண்டு வாழ்வெண்ணி கலங்கும் நெஞ்சம் - அதி
தொலைதூரம் வரை இல்லை மனிதம் ஒன்றும்

No comments:

Post a Comment