Thursday 21 May 2015

நிலா மங்கை

செவ்வானத் தில் நிலா சிரிக்கின்றதே - அதன்
சிங்காரச் செவ்வண்ணம் ஜொலிக்கின்றதே
கொவ்வைச் செவ்வாய்க்கென்ன முன்னானதோ இதழ்
கொஞ்சும் புன்னகைத் திங்கள் எனும்போதையோ
அவ்வை அங்கிருந்தாளோ நிழலாடுதே - அந்தோ
அவள்கூனல் விழிகாண முயலானதென்
இவ்வாழ்வின் எழில்பொங்கும் பொன்னூர்வலம் - இது
என்னாசைப் பெண்கொண்ட எழிலார்வதனம்

பொன்னிற் செங்கோல் கொண்ட அரசென்பதா - இங்கே
பொழியும் நல் நிலவெங்கும் நுழைகின்றதா
தன்னாட்சி பெரிதென்று தரைகொண்டதா - அது
தடுமாறா ததிகாரம் பெறுகின்றதா
மென் மாதர் தனைவெலல மலர்கொண்டதா - அதை
மதனேந்தும் வில் கொண்டு எறிகின்றதா
வன் னாண்மை தனைமுற்றம் வசங்கொண்டதா - உலா
வரும்போது திருமங்கை இதுவென்பதா

சின்னவர்நல் அமுதுண்ணக் கண்ணாடியுள் - அது
சிறைப்பட்டும் விளையாடிச் சிரிக்கின்றதா
நன்நீரின் சிறுஓடை இதன்மஞ்சமா - இவள்
நடம்செய்யக் குளிர்ப் பொய்கை எனும்மேடையா
என்னாகும் அல்லிக்குத் துணையல்லவா - எண்ணி
இரவோடு உறவாட நிலம் வந்ததா
தன்னாவல் தான்மேவி தவழ்கின்றதா - அதை
தலையோங்கும் அலைதுண்டாய் உடைக்கின்றதா

என்னாகும் இறை பாதி தலைமீதிலே - அதை
இருவென்று சொன்னாலும் வருகின்றதே
பொன்வானத் திடை நீந்தும் புது அன்னமா - நிலா
பிரபஞ்சச் சாம்ராஜ்ய இள நங்கையா
மன்னாதி மன்னர்க்கு மகளானதா - அது
மதுஏந்தும் மலர்வண்ண நிகர் கொண்டதா
பின்னாலே விரிவான எழில்தாரகை - கண்டு
பேசாது விழிகொட்டும் அழகல்லவா

No comments:

Post a Comment