Thursday 21 May 2015

அழகு உலகம்


தேயாத முழுமதியின் திகழ்வானத் தெழிலும்
திரிகின்ற முகில் விலகத் தினகரனின் ஒளியும்
காயாத புல்வெளியும் கனிதருமா மரமும்
கனல் மேவுங் கடும்வெயிலில் காண்நிழற் சோ லைகளும்
பாயாக விரியழகுப் படர் கடலின் திரையும்
பாய்ந்து விழும் மலையுச்சி பிறந்தவளாம் நதியும்
தாயாக இயற்கை அன்னை தரும் உலகின் அழகே
தனை மறந்து மனம்மகிழத்  தகுமியற்கை எழிலே

நேராக நிமிர் தருவும் நீட்டியதோர் கிளையும்
நின்று குரல் தந்தினிக்க நெஞ்சிணையும் கிளிகள்
கூரான ஏர் துளைத்துக் கொத்தி மண்ணை உழுது
கொட்டியபொன் தேறுமெனக் கொள் பயிரும் காணத்
தீராத நாணமுற்று தலை குனிநெற் கதிர்கள்
தென் திசையின் காற்றணைக்கச் சல சலக்கு மழகே
வேராக நாட்டில்வளம் விளைக்கு மிடம்தானும் 
வெகு வனப்பே அழகிலிது விலைமதிக்கா வகையே 

தேராக அசைந்துவரும் தேவதையோ பெண்ணில்
தினம் ஒளிரும் அழகுதனும்  தேர்வினி லோர்வகையே
நாராக மலர் தொடுத்து நறுமணத்தில் மாலை
நாம் வணங்கும் தெய்வ மிட நேர்வதும் ஓரழகே
தாராத இன்பமுடன் தென்றல் வந்து நீவும்
தண்பொழில் நீர் துள்ளும் கயல் தாமரையின் பூவும்
சேராது நீருருளச் செய்யும் அதன் இலையும் 
சொல்லின் எழில் மேதினியில் சிறப்புடைத்தன்றோ

வானாற நடைபயிலும் வளை முகிலின் ஓட்டம்
வந்திடையில் மின்னுகின்ற இடிமழையின் தூறல்
பூநாற மலர் தேடும் புள்ளினமும் வண்டும்
போகு மெழில் வான்பரப்பில் புள்ளியெனக்காணும்
வீறாக நடைபோட்டே விரைந்து காளை ஓடும்
வெகுண்ட யலில் இருந்தஒரு வான்குருவி ஓலம்
ஆநூறாய் அற்புதங்கள் ஆக்கியதார் உலகில்
அழகு தனும் இயற்கையதன் அழகு பெரும் அழகே

*******************

No comments:

Post a Comment