Sunday 31 May 2015

சொந்தம்

உள்ளத்தை ஏன் உள்படைத்தனை சக்தி - அதில்
உள்ளதென் னெனத் தெளியவில்லையே புத்தி
அள்ளுவதென் தள்ளுவதென் அறியா - நானும் 
ஆசையிற்பல் லாண்டு வாழ்ந்தனன் சொகுசா
கொள்ளென் றிவைகள் நீ கொடுத்தனை சக்தீ - நான்
கொட்டியதைக் கோர்த்தளித்திட்ட புத்தி
நள்ளிரவோ கண்மறைத்திடக் காப்பாய் - என்
நாளும் அன்பினில் புன்னகை பூத்திடுவாய்
சொல்லெடுத்ததை ஆக்கிவைத் திடசெய்தாய் - அதைச்
சொந்தமென்றிவன் சொல்வது மில்லை அறிவாய்
நெல் வயல் கொள்ள விதை விதைத்தவன் பின்னே - அங்கு
நின்றசை கதிர் நீபடைத்ததென் றுணர்வான்
நல்ல தென்றவை நினைவில் தந்தனை கருவாய் - அதை
நானிலமதில் நானளித்தது பொதுவாய்
இல்லை யென்றிவன் ஆவதுமோர் காலம் அப்போ
எவர் எதைக் கொளக்கூடுமோ இப்போதும்
கற்றதென்னவை காலம் தந்திட்ட பாடம் - அதில்
கற்பனைகளும் காணும் வண்ணங்கள் பூசும்
நற்பணியென நான்நினைத்தது தமிழே - இந்த
நட்சத்(தி) ரங்களைத் தொங்கச் செய்தனன் அழகே
பற்றி மெய்யினில் தீ பரவிட ஓர் நாள் - அன்று
பற்றும் அன்பெனும் பாசம் பொய்த்திடும் போமாம்
உற்றதொன்றிலை உலகம் மறத்தல் வாழ்வே - என்
உள்ளம் கொண்டவை மறைவதில்லை வாழ்வே!
வந்துமெய் விழும் பூச்சரங்களைக் கொண்டேன் - பக்கம்
வைத்தபின்னொரு புன்னகைகொண்டு நின்றேன்
அந்தமென்பது யாவரும் கொள்ளும் காலம்- அதில்
யாக்கை இன்பமும் கெட்டு நொந்துடல் வீழும்
வந்துமென் விதி நெய்விளக்கினை ஏற்றும் - அதில்
வைத்த மென்விரல் சுட்டதென்றுள்ளம் வேர்க்கும்
சிந்து கொண்டிசை பாடுவர் குரல் கேட்கும் - மனச்
சித்திர உணர் வெங்கிருந் ததைக் கொள்ளும்?
கல்லெடுத்தவன் சிலைவடித்திடக் காண்போம் - நம்
கற்பனைகளும் சிறகடித்திடும் காலம்
நன்னினைவுகள் கொண்ட துள்ளமும் காணும் - விதி
நயனமென் னிமைவிரித் ததனையும் பார்க்கும்.
அல்லல் கொண்டலலை மேனி கணக்குப் பார்க்கும் - அதில்
அன்பு கண்டவர் விழி துளிகளை ஊற்றும்
இல்லையென்பது இறுதிப் பக்கம் சேரும் விதி
ஏட்டில் முற்றுமென் றிட்டொரு புள்ளி மூடும்.

No comments:

Post a Comment