Sunday, 31 May 2015

பெண்மை(ஆகா அடடா) -கற்பனை கவிதை

சந்தன வாடை யெழுந்துவர அயல்
சாமரை வீசிநிற்க
செந்தமிழின் இளமென்குரலில் இன்பத்
தேனிசை கானம்வர
அந்தபுரத்திரு மங்கையர்கள் வந்து 
ஆடிக் களித்திருக்க
சிந்திநின்றேன் இளம் புன்னகையை மன்னன்
சிம்மாசனத் திருந்தே

கந்தரூப கன்னிப் பெண்ணொருத்தி கையிற்
கொண்ட திராட்சைக்கனி
முந்திப் பழுத்த நல்முந்திரியும் அதை
முற்றும் மதுவிலிட்டு
வந்து நின்றாள் எந்தன் முன்னிலையில் வஞ்சி
வார்த்தை மறந்தவளாய்
செந்தேன் வதனத்தில் சின்னத்தனம் கண்டு
சென்றிடு என்றுரைத்தேன்

வண்ண ஒளிச்செறி வாடிடவும் அந்த
வட்ட முகத்து நங்கை
எண்ணப் புரிவற்ற சேதியொன்றை வந்து
ஏனோ வெளியுரைக்க
கண்ணும் கண்ணும் மோதிக் கொண்டனவோ அதன்
காரணம் ஏதறியேன்
அண்ணளவில் மனம் ஆனந்தமோ
அடடா ஈதென்னுரைப்பேன்

(வெள்ளிச் சலங்கைகள் ஆடிய வேளையில்)
வீர முரசொலிக்க
(துள்ளியிரு பாவை நர்த்தனம் ஆடிட)
தொம் தொம் எனநடந்தே
குள்ளச் சிரிப்புடன் முன்னெழுந்தான் பகை
கொண்டோன் பிறநிலத்தோன்
எள்ளிநகைத்தவன் முன்னே வந்தான் அட
என்னையும் வென்றுவிட்டான்

எந்தன்நிலை கையில் வாளுமிலை அங்கே
ஏவலர் யாருமில்லை
அந்தோ மடிந்தனன் இன்றெனவே யானும்
எண்ணீய வேளையிலே
இந்த நிலையினில் ஏந்திழையாள் கணம்
ஏதென எண்ண முன்னே
தந்தமெனும் எழிற்கைகளிலே கொண்ட
தோர் சிறு வாளெடுத்தாள்

வந்தவன் செந்தமிழ்க் கன்னியிடம்தோற்று
வீழ்ந்து கிடக்கக் கண்டேன்
செந்தமிழர் தன்னை என்ன நினைத்தனை
சென்றுவிடு என்றவள்
அந்தோ அதிசயித்தே நிலை கண்டனன்
ஆகா என்னேபெருமை
நந்தவனப் பூக்கள் தேன்சொரியும் அவை
தீயும் சொரிவனவா?

மன்னவனே இந்த அன்னிய நாட்டினன்
மாறும் வேடம் தரித்தே
நின்னிடம் வஞ்சனைகொண்டு நெருங்கியே
நிர்மலமாக்க நின்றான்
இந்நிலை சொல்லவே வந்திருந்தேன் தாங்கள்
இன்னிசையில் லயித்தீர்
அந்தநிலையினில் காத்திருந்தேன் ஆனால்
ஆனால் அதற்குள் என்றாள்

நல்லது பெண்ணே உன் வீரந்தனைஇன்று
நான் எதிர்கண்டுகொண்டேன்
மெல்லியலாள் எண்ணம் வல்லவளாம் இந்த
மேதினியில் உயிர்கள்
எல்லையற்றே உருவாக்கும் பெருஞ்சக்தி
ஏற்றவளாயினும் தன்
இல்லமதில் வெகு மென்னுணர்வில் இன்பம்
ஈயும் குணத்துடையாள்

பெண்ணவள் மெல்லிய பேச்சுடையாள் அச்சம்,
பேதமை வெட்கம் கொண்டாள்
கண்மணியாய் எமைக் காத்து நிற்பாள் கணம்
கையிலும் வாளெடுப்பாள்
எண்ணமதி லின்பம்,தந்திடுவாள் இடி
மின்னலு மாகிடுவாள்
உண்மையிலே அன்பு வீரத்திலும் பெண்மை
என்றும் உயர்ந்தவளாம்

No comments:

Post a Comment