Sunday 31 May 2015

இந்த வாழ்க்கை

நீள உயர்மரக் கொப்பினிலே - கரு
நீலக்குயில் ஒன்று பாடியது
தாளமிடும் சுனை பக்கத்திலே - அலை
தென்றல் வருடியே ஓடியது
பாளமெனும் தங்கம் போலும் நிலா - பனி
போர்க்கும் மலையதன் பின்னேவர
ஆழக் கிடந்த மண்பூமியிலே - சேற்றில்
ஆடிநெளிந்தங்கே வாழும்புழு

கீழத்தரையொடு நின்றபடி - அந்தக்
கானக் குயிலினை கேட்கின்றது
வாழக் கிடைத்த கருங்குயிலே - உன்றன்
வாழ்க்கையில் எத்தனை இன்பமுண்டு
சூழப் பறவைகளோடு நீயும் - நற்
சு-தந்திரமாகவே சுற்றுகிறாய்
ஆழப் புதைந்திருள் மண்ணுக்குள்ளே - வாழ
ஆன உடல்எனக் கேன்வந்தது

நீல உயர் வெளி வானத்திலே - நானும்
நின்னைபோலும் பறந்தோடிவர
கால காலமாக ஆசை கொண்டேன் - ஆயின்
காற்றிலேறும் விதம் கற்றறியேன்
வாலைகொண்டாய் இரு(இ)றக்கைகளும் - உன்னை
வானில் செலுத்துவை தானறிவேன்
நூலை போலும் ஒரு தேகம்கொண்டேன் - எந்தன்
நெஞ்சம் துயருறச் செய்தவர்யார்?

(குயில்)
காரணம் ஏதென நானறியேன் - இதற்
கானபதில் தனும் நான் உணரேன்
தோரணங்கள் போல வானிலெங்கும் - தொங்கும்
தூய ஒளிர் கதிர் தொட்டில்களை
பாரதையும் செய்த சக்தியதே- இங்கு
பார்த்தெம்மில் பல்வகை தேகமிட்டாள்
யாரங்கே யாரிங்கே என்பதெல்லாம் - அந்த
 ஞாயிறைச் செய்தவள் ஞானமன்றோ

ஆழிதனைப் பெரிதாயமைத்தாள் - அதில்
ஆடும் கடற்திரை ஓடவிட்டாள்
சூழின்பத் தென்றலும் தொட்டுவிடா - அலை
துள்ளும் கயலினம் உள்படைத்தாள்
வாழிர் எனமாந்தர் இங்கமைத்தாள் - ஒரு
வட்ட வரையின்றிச் சக்திதந்தாள்
ஏழில்குறைத்தொரு புத்திதந்தாள் - அதை
ஏற்றபடி அங்கும் இங்குமிட்டாள்

நல்ல மலர்களை வாடவிட்டாள் - வெறும்
நஞ்சுடை கள்ளிக்கு முள்ளுமிட்டாள்
கொல்லும் வன விலங் கெங்குமிட்டாள் - இங்கு
கூடும்மாந்தர் மனதுள்ளும் வைத்தாள்
வல்லமை கொண்ட மனம்படைத்தாள் - அதை\
வாரி மகளிர்க்கு தந்துவைத்தாள்
செல்லும் மிடமெங்கும் பூ உதிர்த்து முள்ளைச்
சேர்த்து இறைத்தவள் தானறிவாள்

(அப்போது சிறு தொலைவில் இருக்கும்
வயலில் உழுதபடி ஒரு மனிதன் பாடுகிறான்
(வேறு)

ஆசை கொண்டு தோன்றியதே தேகம் - அது
ஆக்குந் துன்பம் எல்லையற்ற சோகம்
தூசை யொத்த தாயுடலும் போகும் - இதில்
துள்ள வைக்கும் இரத்தம் காய்ந்து வேகும்
வாசமுள்ள பூவும் நாளில் வாடும் - அதில்
வந்திருந்த வண்டு ஓடிப் போகும்
பாசம் கொண்ட தாயிருந்த போதும் - உயிர்
பட்ட துன்பத்தில் விலகக் காணும்

யாருக்கிந்த மண்ணின் ஆசை கூடும் - அது
யாக்கையில் உயிர்பறித்தும்போடும்
நீருக்குள்ளும் வேலிபோட்டு காக்கும் - அந்த
நீசமிக்க தாக எண்ணம் ஆக்கும்
பாருக்குள் இவர்கள் வாழ்வுமீண்டும் - ஓர்
பக்குவ மெடுத்து மேனி கொள்ள
வேருழும் புழுக்களாக ஆவர் - மண்ணில்
வேட்கை கொண்டலைந்த பாவிமாந்தர்

பேருக்கும் புகழ் என்றன்றி நன்மை - பல
பேசரும் வகை விளைத்த மாந்தர்
காருக்குள் ஒளிர்ந்த தீபம் போலும் - இன்னும்
காக்கும் வாழ்வுயர்ந்த பண்பும் சான்றும்
சேருமுள்ளம கண்ட அன்பு வாழ்வும் - அவர்
செய்த நன்மைகள் மரத்தின்மீது
சாரும் வான் பறந்த பட்சி யாகும் - உயர்
செல்லும் புள்ளினங்க ளாகக் கூடும்

(கற்பனை)

No comments:

Post a Comment