Thursday 21 May 2015

தந்தவிழும் சிந்தைவளம்


தந்தவளும் தந்தவளம் தந்தவிழும் தீங்கவிதை
சந்தமெழா நின்றுவிடலாமோ
வந்துலவும் தென்றலெனும் சிந்துகவி நின்றுவிடக்
குந்தகமும் கொண்டுவிழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
இந்தமொழி எந்தனுயிர் என்றுயரம் நின்றபடி
வந்தவழி சென்று விடலாமோ
சிந்தனையில் இன்பமிடும் நந்தவனத் தென்றல் தனும்
வந்துடலை மென்வருடும் இன்றோ
மந்தமெனக் கொண்டுகவி சுந்தரமுமின்றி அவை
முந்தும்விளை வின்றி விழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
உந்தும் அலை தன்னில் அது தந்தனதோம் என்றுநடம்
விந்தை கொளல் என்று முடிவுண்டோ
பொன்னெனவும் மின்னுமொளி அந்தியில் மறைந்தசுடர்
பின்னரொளி கொண்டுதயம் காணும்
சின்ன ஒளிச் சந்திரனோ தன்னில் நலிந்தென்ன பயம்
முன்னையெனப் பொன்னுடலும் விம்மும்
அன்னவகை புன்னகையை என்னிதழில் தந்தவளும்
சொன்ன விதியென்ன வகையாமோ
என்னதடை செய்திடினும் ஏங்கும்மனம் தண்மைத்ரும்
தென்பொதிகை தென்றலென் றாகாதோ
எண்ணமலர் கண்மலரப் பண்ணுமிளங் கற்பனைகள்
மண்ணிலழ கின்கவிதை தாரும்
விண்ணிலசை வண்ணமெழும் வேகவிசை காந்த அனல்
திண்மைவலி சக்தியென் தீதானும்
பெண்ணெனுமோர் அன்னைதனைப் பெற்றவளைத் தந்தவளைக்
கண்ணெனவே போற்றும் உளம்கொண்டேன்
மண்ணிலெனைக் கண்டிளகும் உள்ளமதைக் கொண்டவளே
மென்கவிபொ லிந்தெழச் செய்வாயோ
கற்கைநெறி விற்றலுண்டோ விட்டகலா,, பொற்குவையாம்
தற்பெருமைகொள்ள வைத்தபோதும்
சற்குருவென் றிற்றைவரை உற்றகவி செய்மனதை
சற்றும்விடா தட்டி யெழச் செய்தோர்
நற் குணத்தை நானறியா நாவிலெழும் வார்த்தைகளை
இற்றைவரை கொண்டதமிழ் ஏடும்
சுற்றி இழை கொண்டுருட்டி கட்டிஅயல் வைத்துவிடக்
காணுவனோ கண்விழிப்பனாமோ

No comments:

Post a Comment