Thursday 21 May 2015

யார் கொடுத்தார் ?


கொட்டிவைத்து மின்னுஞ்சிறு தாரகைகளை - வானில்
கெட்டியாக ஒட்டிவைத்து விட்டவர் யாரோ
முட்டி இடிமேக மழை கொண்ட மின்னலில் - ஒளிக்
கட்டி நிலா தான்பிடித் துருட்டி வைத்தாரோ 
வட்டநிலா அந்திவேளை எட்டிப் பாரென - முகில் 
முட்டவொரு மாமலையும்  கட்டிவைத்தாரோ
ஒட்டுரசி ஓடிவரும் வெண்முகில் கூட்டம் - அதை
விட்டு நிலா பஞ்சணையில் தூங்கச் செய்தாரோ 

கட்டழகு ஓவியமாய் காலைவானிலே - அந்த
கண்கவரும் காட்சிஎழில் தீட்டியதாரோ
மெட்டுநெகிழ் மென்மலரைக் கட்டவிழ்த்தாரோ - அதில் 
மோகமெழும் வண்டினத்தைத் துய்க்கவிட்டாரோ
தொட்டிழையும் தென்றலினால் பட்டுமேனியில் - இதழ்
தொக்கும்மலர் பட்டசுகம் கிட்டவைத்தாரோ
தட்டிஉளி கற்சிலைசெய் சிற்பியின் கைபோல் - விரல் 
தாங்கும் வீணைநாதம் மீட்டல் தந்ததும் யாரோ

வட்ட அலை நீர்க்குளத்தில் ஆடும் தாமரை - அதை 
விட்டெழுந்த பட்சி யோடிப் போம் வயற்கரை
தொட்டுவிட வான்சரிந்த தூரத்தோற்றமும் - மழைத்
தூறல் தந்ததேக்க நீரில் வீழ்ந்த வானமும்
கட்டைப் பசும்புல் வெளியில் பச்சை பூசியும் - பல 
கற்பனையின் அற்புதங்கள் செய்வதும்  யாரோ
சுட்டவெயில் நீர்தெளிக்கும் சின்ன வான்முகில் - கண்டு
சொல்லிஏழு வண்ணமிட்ட வில்லமைத்தாரோ

விட்ட துளி வானிறைந்து கொட்டியதேனோ - அது
அட்டகாச மிட்டதிரச் சத்தம் இட்டதோ 
பட்டு விழுந்தோடி மண்ணில் பாயுது வெள்ளம் - அதைப் 
பக்குவமாய் ஓடவழி பார்த்த மைத்தாரோ
நட்டமரம் நீளுயரச் செய்தவர் யாரோ - அதில் 
நட்சத்திரப் பூக்களினைத் தொங்கவிட்டாரோ
மட்டுமல்ல பூமலர்வில் வாசமிட்டவர் - அதில்
மாலையிளங் காற்றெடுத்துமயக்க விட்டாரோ

பட்டுவண்ண மேகமிட்டுப் பக்குவஞ்செய்து - அதன் 
பால்நிலவும் கூர்கதிரும்  பார்வைதந்திட
வட்டமெனச் சுற்றும்புவி செய்தவர் யாரோ - அவர்
வாழ்க்கைஎனும் சக்கரமும் சுற்றவைத்தாரோ
தொட்டிலாடும் பிள்ளையாகித் தோல்சுருங்கிடும் - இந்தத்
தோன்றலென்ற மானுடத்தை கட்டியாள்வரோ 
ஒட்டிஉடல் உள் நின்றோடும் இரத்தமோர்நிறம் - ஆயின் 
உள்ள தோற்றம் வண்ணபேதம் வைத்துவிட்டரோ

எட்டியடி போடுபவன் ஏய்ப்பவன் தன்னை - நீ
இத்தரையில் வாழு என்று இன்பமிட்டாரோ
பட்டிதொட்டியெங்கும் பகை பாய்ந்திடச்செய் தும் - அப்
பாவிகளை இம்சைசெயப் பார்த்திருந்தாரோ
கெட்டமனம் நல்லகுணம் கேடுகள் நன்மை - இவை 
கொட்டி புவிமக்களிடை தூவிவிட்டாரோ
நட்டமென வாழ்வின்வினை நாசமும்செய்து - அதில்
நன்மைகொண்டு வாழ நாலுபேரைவிட்டாரோ

சட்டமெலாம் செய்பவரின் பக்கம்நின்றாரோ - அதில் 
சற்றுமுலாம்பூசி மெய்யில் பொய்யொழித்தாரோ
கட்டிஉடல் தீயிலிட சுட்டெரிப்பாரோ - அதைக்
காவலென்று பேருமிட்டு காத்திடுவாரோ
வெட்ட வந்து கொட்டுதிரம் வேட்கை கொள்பவர் - பொய்யை 
விற்றுப் பல இரத்தினங்கள் கொள்ள வைப்பாரோ
கட்டழகே பொற்தமிழே காணும் இன்னலை - நின்றன்
கையளித்து விட்டவர்கள் யாரெவர் யாரோ

வட்டியுயோடு வாழ்விற்துயர் கொட்டவைப்பாரோ - அதில்
வந்துசில பேரைமட்டும் எட்டவைப்பாரோ
இட்டமுட னாடி என்ன பாவம் செய்யினும் - இந்த  
ஏழைகளை நீசமிட்டுத் தாழ்வு செய்யினும
குட்டி மிதித்தேறி அவர் கொல்வராயினும் - அது
குற்றமிலைக் கொள்ளிறைமை கோட்டுள் என்பரோ
விட்டுமனம் வேகிநின்றே நானும்கேட்கிறேன்  இந்த
விந்தையோடு வேதனைகள் யார் கொடுத்தார் யார் ?

’’’’’’’’’’’’

No comments:

Post a Comment