Sunday 31 May 2015

இவளும் அவளும்

(ராமன் தேடிய சீதை)

காலங்கள் காண்வழிக் காலைகள் பொன்னொளி 
காணப் புலர்ந்தனவோ
கோலத்தில் பெண்ணெனும் கோடி எழில் கொஞ்சும் 
கோதை என்னாயினளோ
ஞாலத்திலே தமிழ் பெண்ணென் றிலக்கிய
நங்கை பல வகுத்தார்
வேலை வில்லம்பினை வைத்து மனம் கொல்லும்
விந்தை மகளின்றெங்கே

காவியமும் தமிழ்கூறும் கதை இன்னும்
காணு மிலக்கியங் கள்!
ஆ..வினோத எழில் அற்புதம் மேவிய
ஆரணங்கைப் படைத்தார்
ஓவியத் தூரிகை வண்ணங் கொள்ளா தெழில்
ஊட்டிய பொன்மகளாம்
பாவி இதயத்தில் கீறிவைத்தே பல
ஆண்டுகள் தேடுகிறேன்

கோவலன் யானெனில் லீலை புரிந்திட
மாதவி தேடுகிறேன்
காவலன் பொய்யெனில் நாட்டையழித்தவள்
கண்ணகி காணுகிறேன்
தேவதையோ எனும் தூய மனம் கொண்ட
சீதையைத் தேடுகிறேன்
ஆவதை செய்யென்ற இராவணனின் தங்கை
அன்பினைக் காணுகிறேன்

பாவலனாகியும் பாட்டமைக்க அதைப்
பாடிக் களித்திடுவாள்
நாவளம் கொண்டெவர் பாடிடினும் அங்கு
நாட்டிய மாடி நிற்பாள்
தாவ நிலம்துள்ளத் தந்தனதோம் சொல்லி
தான் நடமென்பதல்ல
ஆவல்கொண்டே மன நாட்டிய மேடையில்
ஆடிக் களிப்பளுண்டோ

பேரரும் நன்னெழில் பெண்ணி னிலட்சணம்
போற்றிய நூல்கள் கண்ட
சாரமுடன் உடல் வாகினில் பத்தினி
சித்தினி தேவையல்ல
போரதின்றிச் சிறு பிள்ளை மனம் கொண்ட
பெண்ணின் மிருதுகெடா
தூரமும் அன்பினைக் வைத்துநிற்கா நல்ல
தூயதோர் மங்கையுண்டோ

காவியம் கூறும் சகுந்தலையும் நளன்
கண்ட தமயந்தியும்
தேவி திருமகள் கொள்ளழகும் எமன்
தோற்றிட ஆவி கொண்டாள்
சாவித்திரி போலும் சற்றே பெண்மைகொண்ட
சாயலுடன் திகழும்
பூவிரியும் மதுகொள்மலர்போல் ஒரு
பெண்ணினைத் தேடுகிறேன்

தண்மையில் பொய்கை குளிரெடுப்பாள் தினம்
தாமரை போல் சிரிப்பாள்
விண்ணிடை ஞாயிறு வந்துவிட்டால் இதழ்
வெம்மை கண்டே நெகிழ்வாள்
பண்ணும் கிரிகைகள் பாதகமின்றி மெய்
பாசத்துடன் திகழ்வாள்
எண்ணும்மனம் எந்த வேளைசினமின்றி
இன்ப உணர்வு கொள்வாள்

(இன்றைய காணும் சின்னத்திரை பெண்கள்)

வாயுரம் கொண்டவள் வார்த்தை கசப்பதும்
வாழ்வில் வலிகொடுத்தே
தாயுறவென்னும் தரமிழந்தே வெறும்
தன்னலம் கொண்டவளாய்
பாயுமலை எழுந்தோடும் சுனைஒன்றில்
பார்க்கும் இலையில் தண்ணீர்
மாயமென்றே உருண்டோடும் நிலைகொண்ட
மங்கையைக் காணுகிறேன்

கன்னத்தில் முத்தமிட்டே கதைபேசிடும்
காரிகை யாயிடினும்
வன்மை யுரம் நெஞ்சில் நஞ்சு பரந்திட்ட
வஞ்சம் விளைவதென்ன
தன்னலமும் தனதாளுமை கொள் ளகங்
காரமும் நெஞ்சில்கொண்டே
என்ன எடுப்பினும் நின்றெதிர்க்கும் ஒரு
ஏந்திழை காணுகிறேன்

பெண்ணினம் ஆவல் கொண்டே மனம் அத்தகை
பேசும் படங்கள் கண்டே
கண்ணிடை நீர்பெருக் காகி வழிந்திடக்
காட்சியோ டொன்றுகிறார்
மண்ணிடை மாதர் இழிந் தவர் என்பதை
மன்னித்தே ஏற்றுவிட்டார்
தண்மைமனதும் விகாரமுற்றே எண்ணத்
தாழுணர் வாகிவிட்டார்
...........................................

No comments:

Post a Comment