Friday 8 May 2015

அழகோ நிறைவோ

             

பொழிமழை பெருகிடும் பொழுதினில் மலைதனில்
பிறந்திடும் அருவிகள் அழகோ
வழிநெடு கிலும்விளை கதிர்களும் பசுமைகொள்
வயலிடை உலவிடல் அழகோ
விழிமொழி பகிர்ந்திடும் விதங்களும்இளமையின்
வளம் மலரிதழ் எனும் அழகோ
மொழிதமி ழினிதென முதன்மையி லிருவென
முனைந்திடப் பெறும்நிலை அழகோ

விளைகடல் திரவியம்.விரவிய அலையிடை
விழுந்தவர் பெறும் குவை மகிழ்வோ
முளைவரும் பயிர்களில் தளிர்வரும் தொடுமதை
மலர் மணம் தருந் தென்றல் மகிழ்வோ
வளைபுகு சிறுநண்டு வலம்வருங் கரையினில்
வனிதையர் எழில்நடை விதமோ
களையெனத் தமிழ்மறந் தெதிரிடை புகுஞ் சிலர்
கருத்திசைந் திடும்கணம் மகிழ்வோ

இனிகனி யெனும்சுவை இருந்திடு மமுதெனில்
எடுத்துண்ணு மவர்பசி விடுமோ
தனிமையில் துயரினைக் கொளும்மகன் சதியென
பெறவுடல் பெரும்பசி விடுமோ
முனிவரும் துறவறம் தனிலிறை வரம்பெற
முனைவதில் அவர்பசி விடுமோ
இனியெம தமிழ்கொளும் இழப்பிலைச் சுதந்திரம்
இதுவெனும் வரைபசி விடுமோ

மழலையின் குரலினை  மகிழ்வொடு விரும்புவர்
மடியினில் கனம்கொள நிறைவோ
தழலெனும் பெரும்பிணி சுடுமுடல் கருகிடத்
தணிக்குமௌ டதம்தரும் நிறைவோ
குழலெனும் இனிமைகொள் குரல்தரு இசைநயம்
குலவிட மனம்பெறும் நிறைவோ
பழமைகொள் புகழ்தமிழ் பகைவிடுத்தொரு நிலம்
பகிர்ந்திடும் நிறைவொன்று வருமோ

No comments:

Post a Comment