Sunday 14 June 2015

கவிஞனானேன்

நாடெங்கும்போனேன் நல்லகவி செய்முறைக்கு
தேடென்றோர் செய்நூலைத் தேடிமனங் களைத்தேன்
ஈடென்றே இறுதியிலோர் இயல்புரைக்கும் நூல்கண்டு
வீடென்று திரும்பியொரு வித்தைகவி கற்கவென

ஊன்றிப் படித்துமெந்தன் உள்மனதோ கொள்ளவில்லை
தோன்றும் வரிகளினைத் துண்டாக்கிப் போட்டதனில்
ஆன்றோர் எதுகைகொளின் அழகென்றார் மோனையுடன்
போன்றே நற்சீர் அசைகள்  பிரித்துப்படி சந்தமிட்டு

தேவையெனும் அளவோசை திகட்டாத சொல்வளமும்
நாவில் இனிக்க வென நல்லணிசேர் சொல்பார்த்து 
கூவிளங் கனிச்சுவையும் கொள்ளத்தே மாங்கனியும்
பூவிளங்கும் மென்மைதனும் போலாக்கிக் கவிதை வரத்

தேவியருள் செய்வாயென் றிடம்பார்த்து வணங்கியவன்
ஏவிமனம் கொள்ளென்றே இடுபொருட்கள் தேடியொரு
ஓவியத்தைச் செய்கலைஞன் ஓடிநிறம் தேடுவதாய்
தாவிமலர்த் தோட்டமினும் தனிக்காடு ஊர்மனைகள்

நானும் இதை நினைத்து நாளலைந்து தேடுகையில்
தேனூற்றக் காணவில்லை தென்றல்மணம் கொள்ளவில்லை
தானே பசுநடந்து தரும்பாலை ஊற்றவில்லை
ஏனிவ் விதியென்றே இளைத்துமனம் வாடுகையில்

ஈடும் இணையற்றோர் எழில்கொண்ட இடம் சேர்ந்தேன்
கேடுதனும் அறியாது கீழ்த்திசையில் எழுங்கதிரை
நாடும் இளம்பூஞ்செடிகள் நன்றலர்ந்த பூக்களுடன்
பாடுமெழில் வண்டினமும் பார்த்ததிலே மோகமுற்றேன்’

தேடுமிவன் கவிவடிக்கத் தென்றல்நயம் தான் கொண்டேன்
ஆடும் மயில் நெளிநளினம் அன்னமதின் நீந்துமெழில்
கூடுமிரு குருவிகிளை குலவுமொலி இலையசைவு
ஓடுஞ் சிறு அணிலசைவின் ஒய்யாரம் இவைவழங்கும்

பாடுஎழிற் பாங்குடனே பாட்டெழுதித் தரும்போது
ஊடுஎனக் குள்ளிருந்த ஒளிபரந்த சோதியிடம்
கூடுமெந்தன் கவிதையினைக் கொண்டவர்க்கு ஞாலமதில்
நாடுமிவர் மனங்களிலே நல்லுணர்வு அலைபாய

தேடுமெழில் இதயங்களில் தேனின்மது கொள்ளவென
ஏடுமுள எழுத்தமைய இரங்கும் எனவரங்கேட்டேன்
ஈடறியா வண்ணமிவை இலங்கிடுக கவிதை யென்றாள்
வாடுமலர் தான் சிறக்கும் வந்துமுகில் நீர்பொழியும்

தேடும் ரவிமறந்தாடிச் செங்கமலப் பூவிரியும்
ஆடும் மயில் நாட்டியமும் அழகுநதி குதித்தோடும்
கூடுமிந்த நினைவோடு கொண்ட மகிழ் வோங்கிவர
பாடுமுந்தன் கவிதைகளும் பற்றியுரம் கொள்ளுமுயிர்

என்றாள் இன்சொல்லினிக்க ஏழைமனம் துருதுருக்கச்
சென்றேன் என்கவியெடுத்துச் செல்லுமிடம் தானழகில்
ஒன்றாய் உயிர்பிணைக்கும் ஓசையி லோங்காரமிட
குன்றிலெழும் நதியோடிக் கூடுமொரு பாறையிடை

சோவென்று வீழருவி  சொல்லாச் சுகமளிக்க
தூவானம் போற் சிதறும் துளிச் சிதறிமுகம்படர’
ஆவென்று பார்த்தழகில் அடியேன் மனமிழந்து
போவென்று சொல்லமனம் புறந்தள்ளிப் போகாமல்

மேவியெழும் இமைவிழிகள் மேன்மைதனைக் கண்டலர்ந்தே
ஆவிபடு மின்பமதன் இடையெழுநல் லோசைகளும்
காவிவருந் தென்றல்சுகம் கண்டுமனங் களித்திருந்தேன்
ஆ..விநோத வானமங்கே அழகாய் விரிந்திருக்க

அங்கொரு நல்லொளி தோன்றி அருள்வழங்கி மனிதாஉன்
சங்கென முழங்கு தமிழ்ச் சந்தமொடு கவிபாடு
எங்கென இடமறியா இன்னிசைக்க உரைகவியை
மங்கிடுமுன் உயிர்வாழ்வு மெருகுறுங் கவியா லென்றாள்

மூடி விழிகொள்ள இமை மெல்லக் கனத்ததினால்
நாடிமனம் தூங்குதல்போல் நானுமிருள் பார்த்தபடி
ஓடிவிழும் நீரருவி ஓசையினை மனமீதில்
கூடிமகிழ் வெய்தஅதில் கொண்டதொரு வேளையிலே

பாடியே மனங் களித்தேன் பனியெழுந்த புல்மேடை
ஓடிக் குளிரெடுக்கும் உத்தமநல் லுணர்வெழவும்
வாடி மயங்குமிவன் வார்த்தை யுரம்கொள்ளவெனத்
தேடிக் கவியளித்தேன் தீங்கவிதை கொண்டிடுவீர்

கவிதையெனு முயிரோட்டம் காணுமிவன் முதிர்மனதில்
செவி வழியில் சிந்தைதனில் சேவைசெயும் இதயமதில்
புவியிடையில் பூவிரிப்பில் புள்ளினங்க ளோடியெழும்’
குவிவளைந்த வானமதில் கொண்டொலித்துக் காணட்டுமே

கனவும் கற்பனையும்


பூக்கள்பொ லிந்தநற் சோலை யெங்கும் ஒரு 
புத்தெழில் காற்றசைய -அதில்
நீக்கமற நிலை கொண்ட மரங்களை
நீவுங் கரங்களினால்
பாக்குமரம் பசுஞ்சோலை குளஅலை
பக்கத்தில் மாமரங்கள் - என
தாக்கி உணர்வுடன் ஆடவைக்க இலை 
தானும் சிரிசிரிக்க

மூக்கில் விரல்வைக்கு மாஅழகாய் வான
மேற்கடி சாயமிட்டே - ஒரு
நாக்குச் சிவந்திட்ட வெற்றிலை போடுமோர்
நங்கை உதட்டினைப்போல்
போக்கில் சிவந்ததென் றாக்கி வைத்த அந்தப் 
பொன்னெழில் வானத்திலே -ஒரு
ஏக்கம் இனந்தெரி யாதஉ ணர்வுடன் 
இன்ப முடையவனாய்

வீட்டின் வெளிபுறத் திண்ணையிலே வந்து 
வீற்றிருந்தேன் விழிகள்
மூட்டும் உணர்வினில் மூடிக் கிடந்தன
மேன்மை தருமொலிகள்
காட்டினிடையினில் கேட்பது போற்கணம் 
காட்சி தெரிந்திடவே - மன
நாட்டமுடன் அதைக்கேட்டு ரசித்திட 
நல்லின்ப மாகியதே

தத்தும் இளங்கிளி கீக்கி எனுங்குரல் 
தாமரைப் பூக்குளத்தில் எழும்
புத்தபுதுஅலை தாளம் இடுமொலி
பாயும் தவளை கத்தல்
மெத்த விரிசுனை நீரில் விழுங்கல்லு 
மென்னலை யின்நளினம் - இதை
ஒத்த விதத்தில் நல்லோசை எழுந்திட 
உள்ளம் மகிழ்வடைந்தேன்

கோவில் மணியோசை கூச்சலிடும் மாந்தர் 
கொக்கரக்கோ விடியல் அங்கு
தாவித் துரத்திடும் சேவலும் பேடையின்
துள்ளலும் கூவும் குயில் 
மேவும் விரல்கொள்ள மீட்டுமிசை வீணை
மங்கையின் காற்சதங்கை
ஆவும் சிறுகன்று அம்மா எனும் ஒலி
அன்னையின் தேடுதலும்

ஓசைஎழுந்திட உள்ளம்நெகிழ்ந்திட 
உள்ளதோர் வாழ்விசைகள்
ஆசையுடன் மனமீதிதெனும் மேடையில்
ஆக்கிய சந்தங்களில்
பூசை கொண்டே மகிழ்ந்தாட இறையவள்
போற்றும் தெய்வ கொடையால்
ஆசையுடன் கவிபாடுகிறேன் - இது
ஆனந்தமாம் உயிரோட்டம்

உலகமே பொய்யா நாங்கள் கற்பனையா

வெள்ளையென்றார்  அது வெள்ளையில்லை - அது
வேடிக்கை கண்செய்யு மாயம் - பொருள்  
உள்ளதென்றார் அங்கே ஒன்றுமில்லை - அது
உள்நிகழ் கற்பனைத்தோற்றம் - அது
துள்ளுதென்றார் கயல் துள்ளுச்சுனை அங்கு
தோன்றுதல் கானல்நீர்போலும் - இவர்
நள்ளிரவில் விழி கொள்ளவரின் -’இவை 
நம்முன் இல்லையென் றாகும்

வெய்யவனில் ஒளி பட்டதனால் -இந்த
விந்தை கொள் கண்வழிக் காட்சி -அதில்
செய்வதென்ன சிறுமென்படலம் தன்னில் 
சேர்ந்திடும் விம்பங்கள் ஆடும் - அதை
மெய்யயெனவே உளம் எண்ணுவதோ இந்த
மேதினியின் காட்சியாவும் -இது
பொய்யதுவோ இல்லை உள்ளதுவோயிது
பார்ப்பவரின் கனவாகும்

பூக்களெனில் அதை பூவென்பதென் எனைப்
பெற்றவள் சொல்லியதாகும் - அதை 
நீக்கமற நெஞ்சில் எற்றபடி மீள
நாமும் சொல்லும்விதமாகும் - சற்று
ஊக்கமுடன் கொஞ்சம் சிந்திப்பதால் அந்தப்
பூக்களின் பொய்மையை காண்போம் - அது
பூப்பதுண்டா வாடி வீழ்கிறதா இது
பொய்யின் அழைப்பெனக் காண்போம்

இது பூமியென்றார் நானும் பூமியென்பேன் இது 
எங்கிருந்து வந்தென்றேன் - அது
ஆதியிலே  உண்டு ஆனதென்றார் நானோ
ஆமெனக் கற்பனைசெய்தேன் - ஒரு
சேதியிலும் பார்வை எண்ணங்களும் கூடிச்
சேர்த்த தரவுகள் கொண்டே - நாமும்
ஏதிதிலெ மன விம்பங்களில் உண்மை 
உண்டென  எண்ணியும் வாழ்வோம்

சொன்னதை நானுமே சொல்லுகிறேன் ஏதும்’
சொந்தமெனக் கண்டதில்லை - மன
எண்ணத்திலே  மாயத் தோற்றங்களை நம்பி
எங்கள் மனதுக்குள் ஏற்றி - அதை
பன்மொழியில் பல நாமத்துடன் இந்த
பாரினில் கண்டதாய் கொண்டு - அதில்
என்னவெல்லாம் எங்கள் சிந்தை மயங்கிட
எண்ணக் கலவை கொள்வாழ்வு

தொட்டுணர்வும் வெறும்சிந்தனையே எங்கள்
தோலில் உணர்வதும் எண்ணம் - இளம்
கட்டிலறைக்  கதை காதலெல்லாம் இவர்
காணும் எண்ண அலைச் சொந்தம் - இவை
மட்டுமல்ல ருசி மோப்ப மெல்லாம் எங்கள்
சிந்தையெனும் உள்ள உணர்வு - அதை
கட்டிவைத்து கனவாக்கிவிட்டு கதை
கற்பனை ஆக்கிடும் மாயை

அன்னையிடம் அதைச் சொன்னவர் யார் அவள்
அன்னையி னன்னை யென்றாலும் - அந்த
அன்னை வழிவந்த அத்தனையும் உண்மை
யாமோ அறிவது இல்லை - இதில்
என்னவிதி இதன் உண்மையென்ன ஒரு 
அண்டவெளி செய்வர்யாரோ - பெரும்
ஆதியெனும் ஒருசக்தியதன் தோற்றம்
அத்தனையும் பெற்றோமாமோ

உள்ளமதில் நல்லகற்பனையை இங்கு
ஊன்றி வளர்த்தவர் யாரோ - அதில்
கள்ளமின்றி ஒருகாலம் வைத்து இந்த
ஞாலமும் செய்தவராமோ - இதில்
வெள்ளையென நிறம் நீலவிண்ணும் அதில்
வேடிக்கை மின்னிட விண்மீன் - அதை
அள்ளிக்கொட்டி அதியற்புதமாய் தங்க 
ஆடையென வண்ணம் இட்டாள்

தோளுரமும் இந்தத் தேகஎழில் உயர்
தோன்றிடும் பருவம் யாவும் - இங்கே
தேய்ந்துவிட  ஆடும் ஊஞ்சலினை எண்ணி
தேவைவரை யாடும் போது -இடை
மாய்ந்துவிடா சில மந்திரங்கள் தந்து
மாயமெனும் சக்தியூட்டி - பல
தாய்க் கவிதை எனைப்பாடு என்றாள் இந்த
பாடல் எனதுயிரோட்டம்

உள்ளுடலில் தினம் சுற்றிவரும் எங்கள்
உதிரம் கொண்டது சூடு . அது
அள்ளிகணம் வீசுந் தென்றலது எங்கள்
ஆவி அலைந்தோடும் காற்று - இதில்
உள்ள உடல்கொண்ட செய்கனிமம்  நிலம்
ஊற்றும் மழையதும் சேர்த்து -  தன்
வெள்ள அனலுடன் விண்ணின் பொறிகொண்டு
வேண்டும் இயக்கமும் தந்தாள்.

உள்ளசையும் சக்தி இல்லையெனில் வெறும் 
ஓடென ஆகிடும்தேகம் - அதில்
அள்ளியிட்ட அன்னம் எத்தனையோ  அது 
அத்தனையும் வளர் தேகம் - இனி 
துள்ளு நடஎன்று செய்தியக்கம் கொள்ள ’
தந்தவள் இன்னிசைநாதம் - எனக்
கள்ளையொத்த நாதசந்தமிட்டு கவி 
செய்யென சக்தியும்  ஈந்தாள்

செய்யும்வரை கவி செய்திடுவேன் இது
செந்தமிழின் பணியாகும் - இனிப்
பெய்யு மழை பெரு வெள்ளமென இந்தப்
பேசும் தமிழ்க்கவி காணும் - ஒரு
எய்யும்கணை அதன்செல்லுமிடம் போலும்
எந்தன் கவி உள்ளம் தோன்றும் -இதைத்
தெய்வம்தந்தாள் அதில் தேவை வைத்தாள் இந்த 
தேன்கவியென் னுயிரோட்டம்
(முடிந்தது)

Thursday 4 June 2015

நாட்டியப் பொம்மை நாமோ

காலத்தின் காணிளம் தேவதையே இக்
. காட்சிகள் மாயங்களா
கோலத்தில்நீ குழைத் தீட்டிய வண்ணத்தைக்
. கொண்டதோ ரோவியமா
ஞாலத்தில் இங்கே நடப்பதெல்லாம் வெறும்
. ஞாபக விம்பங்களா
மேலதில் விண்ணில் மிகைப் படவே ஒளி
. மின்னலும் கற்பனையா

நாளும்விடிவது நாடகத்தின் அங்கம்
. நாட்டிய மாற்றங்களா
ஆளும் அலங்காரப் பாத்திரமா பூமி
  யானதென் மேடையிதா
ஏழும் இசைகண்டே ஆடுமரவமென்
. றாக்கிய தெம்முணர்வா
மாளும் உடல்தந்தும் மானிடமென்றபின்
. மங்கிடும் தீபங்களா

ஆடிமுடித்தே யரங்கம் வெளித்திட
. ஆவிசென் றுள்ளதெங்கே
ஒடிக் களைத்து முட்கார்ந்திரு க்கும்போதே
. ஓசை பிரிப்பதென்னே
பாடிக் கைகொட்டியும் பந்தங்களோடாடிப்
.  பாரினில் கண்டதென்ன
மூடித் திரைபோட்டு முன்னாலிருத்திப் பின்
.  மூச்சைப் பறிப்பதென்ன

சூடும் பூம்பாவையின் சூட்சுமமென் எழில்
. சொட்டுங் கவர்ச்சியுமென்
கூடுமுறவுகள் கொண்டஇரவுகள்
. கொட்டும் மெய் தாளங்களேன்
தேடும் திரவியம் தேவைகள்யாவும் இத்
.  திக்கெட்டும் கொள்வதுமேன்
நாடும் மனம் வைத்தென் நாள்வர ஞாபகம்
.  நம்மைப் பிரிவதுமேன்

வானத் தொலைவிலே பச்சை நீலசெம்மை
.  வண்ணங்கள் செய்தவர் யார்
போனதில்லை அந்தப் பிரபஞ்சத்தூடே ஓர்
.  புத்தொளியும் உண்டோசொல்
ஊனத்திலே பலஓட்டையிட்டு எமை
.  உள்ளே இருத்திவைத்தும்
நானிலத்தில் கடைநாளென் றிருந்தபின்
.  நாடும் வான் வண்ணமோ சொல்

ஆடும் மாவிண்ணதிர் கோளங்களாடிடக்
. கூழெனும் தீக்குழம்பேன்
ஓடுமவ் வண்டங்கொள் பிரகாசங்கள் அங்கு
.  உள்ளதோ கானலோ சொல்
வீடும் கிழக்கெனும் வீதியுமேன் அந்த
.  வண்ணத்துத் தேருலவும்
தேடும் உயர்திரு தெய்வத்தலங்களுள்
.  தெய்வமுண்டோ கேட்டுச்சொல்

இன்பம் -1

இன்பம் 1
இசை மேவிவருங் களி கூரும்வகை
இளங் காற்றிலெழும் ஒருகீதமே
விசை கூடும் மனந்தன்னில் காலையெனும்
பொழுதோடிவருங் கதிர் ஏறவே
திசைநாலுமிருந் துணர்வோடு கிளர்ந்
துயிர்மீது படர்ந்துடல் ஆடவே
அசைந்தோடிவரும் நதியோட எழும் பிர
வாகமெனச் சுகம் காணுமே
தேடிவருங் கருவண்டதனை மது
வுண்ணவென மலர் தாங்குமே
ஆடி நிலத்திடை வீழ்தருவின்கனி
ஆனந்தமாய் கிளி உண்ணுமே
நாடி வரும் உயிர் வாழவென இந்த
நானிலமும் இடம் தந்ததே
ஒடிவிடுமுயிர் வாழும்வரை நாம்
இல்லாற் கீதல் இன்பமே
மலை மீதுறையும் கதிர் சோலை யெங்குமொரு
மஞ்சள் வெயில் பிர காசமே
அலை கூந்தலுடை யிளங் கன்னியரோ பூம்
பந்தெறிந்தே விளையாடவே
நிலை ஓடும் சிறார்களும் கூடி மகிழ்ந்தவர்
நின்ற இடம்விட் டோடவே
கலை மேனியர்கள் அவர் காவலர்கள் அன்னை
கைபிடித்தேகிடும் காட்சியே
செழித்தோங்கும் இளம் பசும் வண்ணமெழச்
செறி பாரிடை வாழ்ந்திடும் போதிலே
பழி தோன்றிடப் பொங்கிடும் நீளத்திரைகடல்
பாய்ந்து மறைந்திடும் சூரியன்
விழி பார்த்துக் கிடந்திட்ட பொன்நிலவோ உடன்
வந்து முகம் எட்டிப் பார்ப்பதும்
களிகூடும் மனங்களில் காட்சிகளாய். விழி
காணு மிப்பூமியும் இன்பமே
**********

காட்சிகள் மாயங்களா?

காலத்தின் காணிளம் தேவதையே இக்
. காட்சிகள் மாயங்களா?
கோலத்தில்நீ குழைத் தீட்டிய வண்ணத்தைக்
. கொண்டதோ ரோவியமா~?
ஞாலத்தில் இங்கே நடப்பதெல்லாம் வெறும்
. ஞாபக விம்பங்களா
மேலதில் விண்ணில் மிகைப் படவே ஒளி
. மின்னலும் கற்பனையா

நாளும்விடிவது நாடகத்தின் அங்கம்
. நாட்டிய மாற்றங்களா
ஆளும் அலங்காரப் பாத்திரமா பூமி
  யானதென் மேடையிதா
ஏழும் இசைகண்டே ஆடுமரவமென்
. றாக்கிய தெம்முணர்வா
மாளும் உடல்தந்தும் மானிடமென்றபின்
. மங்கிடும் தீபங்களா

ஆடிமுடித்தே யரங்கம் வெளித்திட
. ஆவிசென் றுள்ளதெங்கே
ஒடிக் களைத்து முட்கார்ந்திரு க்கும்போதே
. ஓசை பிரிப்பதென்னே
பாடிக் கைகொட்டியும் பந்தங்களோடாடிப்
.  பாரினில் கண்டதென்ன
மூடித் திரைபோட்டு முன்னாலிருத்திப் பின்
.  மூச்சைப் பறிப்பதென்ன

சூடும் பூம்பாவையின் சூட்சுமமென் எழில்
. சொட்டுங் கவர்ச்சியுமென்
கூடுமுறவுகள் கொண்டஇரவுகள்
. கொட்டும் மெய் தாளங்களேன்
தேடும் திரவியம் தேவைகள்யாவும் இத்
.  திக்கெட்டும் கொள்வதுமேன்
நாடும் மனம் வைத்தென் நாள்வர ஞாபகம்
.  நம்மைப் பிரிவதுமேன்

வானத் தொலைவிலே பச்சை நீலசெம்மை
.  வண்ணங்கள் செய்தவர் யார்
போனதில்லை அந்தப் பிரபஞ்சத்தூடே ஓர்
.  புத்தொளியும் உண்டோசொல்
ஊனத்திலே பலஓட்டையிட்டு எமை
.  உள்ளே இருத்திவைத்தும்
நானிலத்தில் கடைநாளென் றிருந்தபின்
.  நாடும் வான் வண்ணமோ சொல்

ஆடும் மாவிண்ணதிர் கோளங்களாடிடக்
. கூழெனும் தீக்குழம்பேன்
ஓடுமவ் வண்டங்கொள் பிரகாசங்கள் அங்கு
.  உள்ளதோ கானலோ சொல்
வீடும் கிழக்கெனும் வீதியுமேன் அந்த
.  வண்ணத்துத் தேருலவும்
தேடும் உயர்திரு தெய்வத்தலங்களுள்
.  தெய்வமுண்டோ கேட்டுச்சொல்

Monday 1 June 2015

இயற்கை என்னும் அழகோவியம்


மலைமுகட்டில் நிலவு நின்று மன்னவனாம் புவியை
மறைமுகிலின் திரைவிலக்கி மெல்ல எட்டிப்பார்க்கும்
கலைவடியும் ஒளிபரந்து காண மரத் திலைகள்
கண்டபடி கதையுரைத்து கலகலத்துச் சிரிக்கும்
அலையெழுந்ததே ஆர்ப்பரிக்கும் அடக்கமற்ற பெண்ணாய்
அதிவிரைந்து கரையடைந்தும் அல்லலுற்று மீளும்
குலை யிழந்த கனியெனவே கொள்ளொருவர் இன்றி
கொடுமை சின்னஞ்சிறு வயதர் குழம்பி மனம்சோரும்

தனமிழந்த ஒருவன்போலத் தாழ்ந்து வீசுங்காற்று
தனிமையிலே இனிதிலையென் றுடல் தடவி ஓடும்
மணமெழுந்த நிலையிலாடி மயங்க எம்மை தொட்டும்
மதுவின் போதை இல்லையென்று புழுதியள்ளி வீசும்
கனமிழந்த நெஞ்சினோடு கனிவுவரும் என்று
கருதிவான வெளியிலோடிக்கலையும் மேகம் சொல்லும்
பனியெழுந்து குளிர்இரவில் பச்சைப்புல்லைச் சேரும்
பகல் பிறக்கப் பனியுலர்வில் புல்நுனி நீர் சிந்தும்

குளிர்ச் சுனையும் கொடிமலரும் குங்குமத்து வண்ணம்
கொண்ட மலர்த் தாமரையும் குள அலையின் சத்தம்
வெளியலையும் வீசுமிளம் விண்பரந்த காற்றும்
விடுதலையென் றுலகமெங்கும் வலம்வருவெண் முகிலும்
தளிர் அழகும் தவளைகளும் தங்கும் எழிற்சோலை
தனிமையிலும் தருங்கனவும் தாவும்மனங் காணும்
ஒளிர்கனவும் உரைதமிழும் உன்னதமாம் கண்டேன்
உலகமதில் இயற்கைதனை உரைக்கும் `கவி மேன்மேல்