Monday 1 June 2015

இயற்கை என்னும் அழகோவியம்


மலைமுகட்டில் நிலவு நின்று மன்னவனாம் புவியை
மறைமுகிலின் திரைவிலக்கி மெல்ல எட்டிப்பார்க்கும்
கலைவடியும் ஒளிபரந்து காண மரத் திலைகள்
கண்டபடி கதையுரைத்து கலகலத்துச் சிரிக்கும்
அலையெழுந்ததே ஆர்ப்பரிக்கும் அடக்கமற்ற பெண்ணாய்
அதிவிரைந்து கரையடைந்தும் அல்லலுற்று மீளும்
குலை யிழந்த கனியெனவே கொள்ளொருவர் இன்றி
கொடுமை சின்னஞ்சிறு வயதர் குழம்பி மனம்சோரும்

தனமிழந்த ஒருவன்போலத் தாழ்ந்து வீசுங்காற்று
தனிமையிலே இனிதிலையென் றுடல் தடவி ஓடும்
மணமெழுந்த நிலையிலாடி மயங்க எம்மை தொட்டும்
மதுவின் போதை இல்லையென்று புழுதியள்ளி வீசும்
கனமிழந்த நெஞ்சினோடு கனிவுவரும் என்று
கருதிவான வெளியிலோடிக்கலையும் மேகம் சொல்லும்
பனியெழுந்து குளிர்இரவில் பச்சைப்புல்லைச் சேரும்
பகல் பிறக்கப் பனியுலர்வில் புல்நுனி நீர் சிந்தும்

குளிர்ச் சுனையும் கொடிமலரும் குங்குமத்து வண்ணம்
கொண்ட மலர்த் தாமரையும் குள அலையின் சத்தம்
வெளியலையும் வீசுமிளம் விண்பரந்த காற்றும்
விடுதலையென் றுலகமெங்கும் வலம்வருவெண் முகிலும்
தளிர் அழகும் தவளைகளும் தங்கும் எழிற்சோலை
தனிமையிலும் தருங்கனவும் தாவும்மனங் காணும்
ஒளிர்கனவும் உரைதமிழும் உன்னதமாம் கண்டேன்
உலகமதில் இயற்கைதனை உரைக்கும் `கவி மேன்மேல்

No comments:

Post a Comment