Sunday 14 June 2015

கனவும் கற்பனையும்


பூக்கள்பொ லிந்தநற் சோலை யெங்கும் ஒரு 
புத்தெழில் காற்றசைய -அதில்
நீக்கமற நிலை கொண்ட மரங்களை
நீவுங் கரங்களினால்
பாக்குமரம் பசுஞ்சோலை குளஅலை
பக்கத்தில் மாமரங்கள் - என
தாக்கி உணர்வுடன் ஆடவைக்க இலை 
தானும் சிரிசிரிக்க

மூக்கில் விரல்வைக்கு மாஅழகாய் வான
மேற்கடி சாயமிட்டே - ஒரு
நாக்குச் சிவந்திட்ட வெற்றிலை போடுமோர்
நங்கை உதட்டினைப்போல்
போக்கில் சிவந்ததென் றாக்கி வைத்த அந்தப் 
பொன்னெழில் வானத்திலே -ஒரு
ஏக்கம் இனந்தெரி யாதஉ ணர்வுடன் 
இன்ப முடையவனாய்

வீட்டின் வெளிபுறத் திண்ணையிலே வந்து 
வீற்றிருந்தேன் விழிகள்
மூட்டும் உணர்வினில் மூடிக் கிடந்தன
மேன்மை தருமொலிகள்
காட்டினிடையினில் கேட்பது போற்கணம் 
காட்சி தெரிந்திடவே - மன
நாட்டமுடன் அதைக்கேட்டு ரசித்திட 
நல்லின்ப மாகியதே

தத்தும் இளங்கிளி கீக்கி எனுங்குரல் 
தாமரைப் பூக்குளத்தில் எழும்
புத்தபுதுஅலை தாளம் இடுமொலி
பாயும் தவளை கத்தல்
மெத்த விரிசுனை நீரில் விழுங்கல்லு 
மென்னலை யின்நளினம் - இதை
ஒத்த விதத்தில் நல்லோசை எழுந்திட 
உள்ளம் மகிழ்வடைந்தேன்

கோவில் மணியோசை கூச்சலிடும் மாந்தர் 
கொக்கரக்கோ விடியல் அங்கு
தாவித் துரத்திடும் சேவலும் பேடையின்
துள்ளலும் கூவும் குயில் 
மேவும் விரல்கொள்ள மீட்டுமிசை வீணை
மங்கையின் காற்சதங்கை
ஆவும் சிறுகன்று அம்மா எனும் ஒலி
அன்னையின் தேடுதலும்

ஓசைஎழுந்திட உள்ளம்நெகிழ்ந்திட 
உள்ளதோர் வாழ்விசைகள்
ஆசையுடன் மனமீதிதெனும் மேடையில்
ஆக்கிய சந்தங்களில்
பூசை கொண்டே மகிழ்ந்தாட இறையவள்
போற்றும் தெய்வ கொடையால்
ஆசையுடன் கவிபாடுகிறேன் - இது
ஆனந்தமாம் உயிரோட்டம்

No comments:

Post a Comment