Sunday, 14 June 2015

கவிஞனானேன்

நாடெங்கும்போனேன் நல்லகவி செய்முறைக்கு
தேடென்றோர் செய்நூலைத் தேடிமனங் களைத்தேன்
ஈடென்றே இறுதியிலோர் இயல்புரைக்கும் நூல்கண்டு
வீடென்று திரும்பியொரு வித்தைகவி கற்கவென

ஊன்றிப் படித்துமெந்தன் உள்மனதோ கொள்ளவில்லை
தோன்றும் வரிகளினைத் துண்டாக்கிப் போட்டதனில்
ஆன்றோர் எதுகைகொளின் அழகென்றார் மோனையுடன்
போன்றே நற்சீர் அசைகள்  பிரித்துப்படி சந்தமிட்டு

தேவையெனும் அளவோசை திகட்டாத சொல்வளமும்
நாவில் இனிக்க வென நல்லணிசேர் சொல்பார்த்து 
கூவிளங் கனிச்சுவையும் கொள்ளத்தே மாங்கனியும்
பூவிளங்கும் மென்மைதனும் போலாக்கிக் கவிதை வரத்

தேவியருள் செய்வாயென் றிடம்பார்த்து வணங்கியவன்
ஏவிமனம் கொள்ளென்றே இடுபொருட்கள் தேடியொரு
ஓவியத்தைச் செய்கலைஞன் ஓடிநிறம் தேடுவதாய்
தாவிமலர்த் தோட்டமினும் தனிக்காடு ஊர்மனைகள்

நானும் இதை நினைத்து நாளலைந்து தேடுகையில்
தேனூற்றக் காணவில்லை தென்றல்மணம் கொள்ளவில்லை
தானே பசுநடந்து தரும்பாலை ஊற்றவில்லை
ஏனிவ் விதியென்றே இளைத்துமனம் வாடுகையில்

ஈடும் இணையற்றோர் எழில்கொண்ட இடம் சேர்ந்தேன்
கேடுதனும் அறியாது கீழ்த்திசையில் எழுங்கதிரை
நாடும் இளம்பூஞ்செடிகள் நன்றலர்ந்த பூக்களுடன்
பாடுமெழில் வண்டினமும் பார்த்ததிலே மோகமுற்றேன்’

தேடுமிவன் கவிவடிக்கத் தென்றல்நயம் தான் கொண்டேன்
ஆடும் மயில் நெளிநளினம் அன்னமதின் நீந்துமெழில்
கூடுமிரு குருவிகிளை குலவுமொலி இலையசைவு
ஓடுஞ் சிறு அணிலசைவின் ஒய்யாரம் இவைவழங்கும்

பாடுஎழிற் பாங்குடனே பாட்டெழுதித் தரும்போது
ஊடுஎனக் குள்ளிருந்த ஒளிபரந்த சோதியிடம்
கூடுமெந்தன் கவிதையினைக் கொண்டவர்க்கு ஞாலமதில்
நாடுமிவர் மனங்களிலே நல்லுணர்வு அலைபாய

தேடுமெழில் இதயங்களில் தேனின்மது கொள்ளவென
ஏடுமுள எழுத்தமைய இரங்கும் எனவரங்கேட்டேன்
ஈடறியா வண்ணமிவை இலங்கிடுக கவிதை யென்றாள்
வாடுமலர் தான் சிறக்கும் வந்துமுகில் நீர்பொழியும்

தேடும் ரவிமறந்தாடிச் செங்கமலப் பூவிரியும்
ஆடும் மயில் நாட்டியமும் அழகுநதி குதித்தோடும்
கூடுமிந்த நினைவோடு கொண்ட மகிழ் வோங்கிவர
பாடுமுந்தன் கவிதைகளும் பற்றியுரம் கொள்ளுமுயிர்

என்றாள் இன்சொல்லினிக்க ஏழைமனம் துருதுருக்கச்
சென்றேன் என்கவியெடுத்துச் செல்லுமிடம் தானழகில்
ஒன்றாய் உயிர்பிணைக்கும் ஓசையி லோங்காரமிட
குன்றிலெழும் நதியோடிக் கூடுமொரு பாறையிடை

சோவென்று வீழருவி  சொல்லாச் சுகமளிக்க
தூவானம் போற் சிதறும் துளிச் சிதறிமுகம்படர’
ஆவென்று பார்த்தழகில் அடியேன் மனமிழந்து
போவென்று சொல்லமனம் புறந்தள்ளிப் போகாமல்

மேவியெழும் இமைவிழிகள் மேன்மைதனைக் கண்டலர்ந்தே
ஆவிபடு மின்பமதன் இடையெழுநல் லோசைகளும்
காவிவருந் தென்றல்சுகம் கண்டுமனங் களித்திருந்தேன்
ஆ..விநோத வானமங்கே அழகாய் விரிந்திருக்க

அங்கொரு நல்லொளி தோன்றி அருள்வழங்கி மனிதாஉன்
சங்கென முழங்கு தமிழ்ச் சந்தமொடு கவிபாடு
எங்கென இடமறியா இன்னிசைக்க உரைகவியை
மங்கிடுமுன் உயிர்வாழ்வு மெருகுறுங் கவியா லென்றாள்

மூடி விழிகொள்ள இமை மெல்லக் கனத்ததினால்
நாடிமனம் தூங்குதல்போல் நானுமிருள் பார்த்தபடி
ஓடிவிழும் நீரருவி ஓசையினை மனமீதில்
கூடிமகிழ் வெய்தஅதில் கொண்டதொரு வேளையிலே

பாடியே மனங் களித்தேன் பனியெழுந்த புல்மேடை
ஓடிக் குளிரெடுக்கும் உத்தமநல் லுணர்வெழவும்
வாடி மயங்குமிவன் வார்த்தை யுரம்கொள்ளவெனத்
தேடிக் கவியளித்தேன் தீங்கவிதை கொண்டிடுவீர்

கவிதையெனு முயிரோட்டம் காணுமிவன் முதிர்மனதில்
செவி வழியில் சிந்தைதனில் சேவைசெயும் இதயமதில்
புவியிடையில் பூவிரிப்பில் புள்ளினங்க ளோடியெழும்’
குவிவளைந்த வானமதில் கொண்டொலித்துக் காணட்டுமே

No comments:

Post a Comment