Sunday 5 July 2015

இயற்கையின் கோரம்


தேனாம் தமிழ் சொல்லித் தந்தவள் - அந்தத்
தென்றலினால் மெய்யைத் தொட்டவள்
வானாய் விரிதென்னைக் காத்திட்டாள் - எழில்
வண்ண மலரென வாழ்விட்டாள்
மீனாகத் துள்ளும் இளமையும் - அலை
மேவும் கடலிற் பழமையும்
தானாகக் கொண்டே கவர்ந்திட்டாள் - இந்த 
தாரணி கொண்ட  இயற்கையாள்

வீணாய் பொழுதிடா ஓடினேன் - என்ன 
விந்தை என்றேமடி தூங்கினேன்
காணா எழில்கண்டு போற்றினேன் - இரு 
கண்கள் போதவில்லைத் தூற்றினேன்
பேணாதெழில் கொண்ட பூவனம் - பல
பேச்சை ஒலித்திடும் பாறைகள்
நாணல் வளைந்திட நான்தொட்டே - அங்கு
நாணும் செடிகண்டும் வாழ்த்தினேன்

ஆணாய் உரங்கொண்டு ஓடினேன் - அந்த
ஆசையில் போதைகொண் டாடினேன்
கோணாதென் மீதின்பம் கொட்டினாள் - குளிர்
கூதலிடப் பனி தூவினாள்
தூணாய் நிலைத்திட்ட குன்றுகள் - அதை
தொட்டமுகில் கொண்ட தூக்கமும்
காணாத இன்பங்கள் காட்டின - எந்தன்
கண்ணை  கிறங்கச் செய்தோடின

நன்றே எனப்புகழ் நல்கினேன் - மது 
நாவிலி னித்திடப் பாடினேன்
தென்றல் மலர்நீவ சில்லிட்டேன் - மலர்
தேனிதழின் எழில் கண்ணுற்றேன்
மன்றமதில் கவி சொல்லிட்டேன் - இவள் 
மங்கை இயற்கையைப்  பின்னிட்டேன்
சென்றதுகாலம்,ஆ... வீழ்ந்திட்டேன் - அதோ 
சற்று விதிகள் புரிந்திட்டேன்

சீறி அடித்ததோ ஓர்புயல் - அதில்
சீற்றங் கொண்டோடிய நீர்வெள்ளம் - விதி
மீறி இடித்தன மேகங்கள் - அதில்
மீண்டும்மீண்டும் பல மின்னல்கள் 
ஊறி மணத்ததோ ஊர்நிலம் - அங்கு 
ஊற்றிவழிந்தது போம் வெள்ளம் - அதில்
நாறி மணத்திட்ட பூக்களும் - ஒரு
நாளில் குலைந்து கிடந்தன

மெல்ல இடித்தது யார் விதி - காண
மின்னி வெடித்ததென் வஞ்சனை
சொல்லில் பொழிந்தன பொய்மழை - அதைச்
சுற்றிப்  படர்ந்ததோ ஊழ்வினை
மல்லிகைப் பந்தலைப் போலவே - அந்த
மாயவிதி வாழ்வை சாய்த்திட
நல்லெழில் எங்குமே காணிலேன் - இந்த 
நானில வாழ்வுக்கா ஏங்கினேன் ???

இடைவெளி


தமிழ்தனை மறந்திடத் தரவுகள் மறுத்திடும்
தகமையைப் பெறுவதுண்டோ
குமிழென அலையிடை கொளும் வடிவுடைவென
குறுகியும் சிறுப்பதுண்டோ
அமிழ்திலுமினியது அகமதில்  சுவைதமிழ்
அவனியில் வெறுப்பதுண்டோ
நிமிர்ந்திட சிலதடை நினவுகள் கழிகின்ற
நிதர்சன இடைவெளியோ

பலவித நினைவுகள் பறிமுதலிட விதி
பகலிடை ஒளிநிலவாய்
புலமைகள் சிறுபட புதுமைகள் தலைப்பட
பொழிதொன்று கழிகிறதோ
குலமொளிர் மனமதின் குணநலம் புரியுதல்
குறையெனை இருந்துவிடில்
சலசல அலைகளில் சதிரிடும் ஒலியென
சலனங்கள் எழும் இதுவோ

வலதுகை எழுதிட வருவது இடதுகை
வரைமுறை அறிவதில்லை
பலமது புஜம்கொளப் பதறிடும் பாதங்கள் 
பகைவனுக் குலகல்லவோ
நலமென இருவிழி நடுவழி இடர்தனை
நிகழ்வினில் புரிவதுண்டு
விலகியும் ஒருவிழி வெறுமையை காணென
விலைதரும் செயல் அழகோ

துலங்கிடும் ஒளியது தரும் பொருள் மறைத்திடின்
தொலைவது எழிலுலகே
நலமொடு இருப்பது நடந்திட அருள்தனை
நல்குவ தவள் தனியே
கலகல சிரிப்பெழக் குழந்தையின் குணமல்ல
கொடுவெயி லெரிகிறதே
சில சில அமைதிகள் செறிவென இருந்திடில்
சடவென அதிர்வெழுதே

வழித்துணை யல்லப் பெரு வழக்கமென் றிணைந்தபின்
வகுப்பது கழித்தலொன்றே
குழிக்குள்ளும் விழுத்திடும் குவலயத்திடை மனம்
கொடுப்பது கரமல்லவே
விழிப்பது விழியல்ல வெகுமன மெனிலதை
விகடமென் றெடுத்திடவோ
செழிப்பது பயிரெனில் சிறிதெனும் உயிர் வகை
சிரித்திட நசுக்குவதோ

////////////////////////

ஓவியப்போட்டி பகுதி 1


ஓவியத்தில் போட்டியொன்று செய்தார்
உத்தமநற் கலையினிமை காணத்
தேவியவள் சந்நதியின் முன்னே
திகழ்ந்தததைக் கண்டிடுவோம் வாரீர்
பூவிதழைப் போலும் எழில் மென்மை
பொற்கலைஞர் உள்ள மென்பதுண்மை
ஓவியர்கள் கூடி அங்குநின்றார்.
ஒளி நடந்து மேலை ’வானில் வீழ

மூன்றென் றோவியர் கலந்துகொண்டார்
முன்வருவோன் இரண்டு மூன்று நிலைகள்
சான்றுகளின் ஆக்க நிலைகாணின்
சற்றும் இவர் மேன்மை கீழென்றில்லை
தோன்றும் திறன் சமநிலையிற் காணும்
தூயகலை இறைவன் தந்ததாலே
சான்றோரும் போற்றும் இவர் பெருமை
சற்றும்குறைவற்ற எழில்தரும் கை

மண்டபத்தில் போட்டி ஆரம்பிக்க
மன்னவன் அங்கெழுந் தருளி நின்றான்
கண்டவுடன்மூன்று ஓவியர்கள்
கரம்குவித்து வணங்கிப் பக்கம் சென்றார்
பண்ணிசைத்தோர் அழகிநடம் ஆடப்
பசுங்கிளிகள் சோலையில் இசைபாட
மண்ணின்மலர் மாலைத்தென்றல் வருட
மஞ்சள் வெயில் மனதை ரம்மியமாக்க

கண்ணழகை கவரும் காட்சி தன்னைக்
கையிலெடு துச்சநிலைகாட்டும்
வண்ணங்களின் வித்தை கற்றவர்காள்
வடிவமைப்பீர் ஓவியத்தை இன்றே
மண்ணில்காணும் ஏதும் கருவாகும்
மனம்பிடித்த காட்சியொன்றை ஆக்கி
எண்ணமதை ஆளவென்று ஈவீர்
என்றவனோ மன்னன் அங்கு சொன்னான்

என்ன வண்ணம் தூரிகை கொண்டாலும்
எழுதுகையில் உண்டு விந்தை ஆற்றல்
முன்னிலைக்கு முடிவில் யார் வந்தாரோ
மிகுந்த பணப் பரிசு வென்றுசெல்வீர்
மன்னன்கூறி மூவரையும் பார்த்தான்
மனம் மனிழ்ந்து ஓவியர்கள் கூடி
தன்திறனை முற்றும் முன்னர் வைத்துத்
திரைவிரித்து வண்ணம் பூசலானார்

(பகுதி2ல் முடியும்)

ஓவியப் போட்டி (கவிதை) தொடர் 2

விடை தெரியுமா? 2
********************
ஓவியர்கள் உவகையுற்றுத் தூரிகை கொண்டு 
உள்ளத்தில் தோன்றுமோர் காட்சிப் பொருளை
காவியத்தில் காணுமின்ப வெள்ளம் போலும்
கற்பனை எனும் சுகத்தைக் கலந்தே செய்தார்
தூவி மலர்ப் பஞ்சணையில் தூக்கம் கொண்டே
தொலை மறைந்த ஆதவனும் தோன்றும்காலை
போவிரைந்து காணென்று உள்ளம் கூறப்
புன்னகைத்து மன்னன் கலைமாடம் சென்றான்

சென்றாங்கே முடித்து வைத்த ஓவியங்களைச்
செய்தஎழிற் பொன்னிகர்த்த சித்திரக்காட்சி
தேன்சுரந்த பூஎன்றும் திங்கள் போலும்
தித்திக்கும் அமுதத்தை ஒத்தாற் கொள்ள
என்னென்ன வடிவங்கள் எதனைச் செய்தார்
எவரதற்குள் ஏற்றவிதம் வண்ணம் கொண்டார்
மேன்மைதனை அறிவேனென் றுள்ளம்கொண்டே
மேவிநடை துரிதமுற்றே முன்னாற் சென்றான்

பொன்னெடுத்துப் பெண்ரசித்து மண்ணை ஆளும்
பெருமிதத்தில் தனைநிறுத்திப் பேசும்மன்னன்
முன்னிருந்த ஓவியத்தின் வண்ணம் கண்டான்
மேனிசிலிர்த்தான் எழில்சார் மலர்கள் கொத்தாய்
பன்னிறத்தில் பூத்த எழிற் பூங்காவனம்
பனிபடர்ந்த இதழ்பொலிந்த பருவக் காட்சி
முன்னிருந்த பூக்கள் வெறும் ஓவியமல்ல
முற்று முயிர் கொண்டதுவோ மங்கை கொண்ட

கண்கள் இமை துடிப்பதெனக் காற்றின் ஆடும்,
கரம் தொட்டால் நாணமுறும் கனிவாம் மென்மை
உண்ணமலர் இதழ் கொண்ட கள்ளோ மின்ன
இடையழகில் உன்மத்தம் ஆக்கும் வண்ணம்
வெண்மை யதோ வைரமென்ப் பவளம் முத்தும்
விளங்குமெழில் மாணிக்கம் போலும் வண்ணம்
எண்ணமதை மயக்கிவிட எழுதித் தந்தான்
இவன்படைப்பில் இறைவனையும் மிஞ்சிக்கொண்டான்

என்றெண்ணும் மன்னன் ஆங்கின்னும் கண்டான்
இழைந்த அவ் வண்ணத்தின் இயற்கைக்கோலம்
தன்னில் அவை மலர்ந்திட்ட உண்மை பூக்கள்
தானிடையில் தேன் காணும் என்றே வண்டும்
கன்னங்கரு தன்னுடலைக் களிப்பில் ஆக்க
கலகலத்து ரீங்கார ஓசைகொண்டே
முன்பறந்து மோதியந்த வண்ணத்திரையின்
மூர்க்கமுடன் வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும்

எண்ணி யந்த உண்மைதனை ஏற்காநெஞ்சாய்
இன்னுமின்னும் மோதும்நிலை கண்டான் அடடா
திண்ணமிது வண்டினையும் நம்பச்செய்யும்
தீட்டிய இவ்வோவியமே தேர்வில் வெல்லும்
எண்ணமதில் ஈதெடுத்து இரண்டாமவனின்
எழுதும் கைஆக்கியது எதுவோ காண
விண்ணிருக்கும் தேவர்களும்வியக்கும் அழகை
வைத்திருப்பதோ என்றே காணச்சென்றான்

{இரண்டில் முடியவில்லை இன்னுமுண்டு)

ஓவியப்போட்டி (கவிதை) 3



விடைதெரியுமா? தெரிந்தால்கூறுங்கள் 3
****************

மற்றவனின் ஓவியத்தைக் கண்டான் மன்னன்
மரகதமாம் பச்சையெனும் புல்லின்மேடை 
சற்றயலில் நிரைகொண்ட மரங்கள்காணும்
சாற்றினவை சேனை படை யணிபோல்நேரே
நிற்பதுவும் பின் நீல நிர்மலவானம்
நெடுந் தூரம் ஒடிவரும் வெண்முகில் ஒன்றாய்
அற்புதத்தைக் குழைதங்கே தீட்டியும் வைத்தார்
ஆகாகா மெய்மறந்தேன் அழகிலென்றான்

துள்ளிவரும் இசை பாடும்குருவி அன்றோ
தெள்ளமுதக் கீதமதை சொல்லா மௌனம்
அள்ளமுகம் பார்க்கும் மொரு கண்ணடியோ
அதிர்ந்து பலதூண்டாகும் முகத்தின் விம்பம்
வெள்ளை யலைமிதக்கும் அம்மென்னீரோடை
விளையாடும் மான்கள் தன் மிரளும்பார்வை
கள்ளமிலா மீன்கள் சுனை துள்ளும் காட்சி
காணும் அலைநெளிந்தோடக் காணும் சலனம்

எள்ளளவும் ஐயமிலா இயற்கைக் காட்சி
எழுதி வைத்த விதம்கண்டே ஏக்கம்கொண்டான்
கொள்ளைஎழில் கொண்ட பசும்புல்மேடையில்
கொண்டு வளர் புல்விரும்பிக் குதித்தே வந்தோர்
துள்ளியந்த ஓவியத்துள் செல்லக்கேட்கும்
துணிவெடுத்த கன்றொன்றின் துடிப்பைக்காக்கும்
தள்ளியதை நிறுத்தவெனப் பாடுபட்டே
த்டுமாறும் ஒருகூட்டம் தனையும்கண்டான்

இல்லையிதில் குறைவென்ப தியற்கை ஆற்றல்
எழுதிவைத்த இரண்டதிலும் எல்லாம்சமமே
வல்லமையில் போட்டியிடுமிரண்டைகண்டோம்
வைத்திருக்கும் மூன்றாமவன் வரைந்தோர் அழகை
சொல்லிமனம் வேண்ட அவன் நடையும் கொண்டான்
தூரிகையின் வண்ணத்தை தீட்டிச்செய்தும்
எல்லோர் கண்பார்வைக்கும் ஏற்றோர் வண்ணம்]
இட்டதனை மறைத்தமுன் திரையைக்கண்டான்

முன்னிலையிற் சென்றவன்கோ மூன்றாவதை
மூடிவைத்த ஓவியத்தை காணவந்தேன்
உன்கலையைக் காணுமிச்சை கொண்டேன் 

திரையை ஒதுக்கிவிடும் என்றவனை திகைத்தே நின்றே
தன்னிலையில் மிரளுமவன் முகத்தை நோக்கி
தான்வியந்தும் கலக்க்முற்ற தன்மை நோக்கி
என்ன சொல்வ தறியாது இருப்போன் விட்டே்
இதை விலக்க ஏன் தயக்கம் என்றே கையால்

தள்ளித்திரை விலக்கிவிடக் கையும்கொண்டே
தயங்காது முயற்சித்தவேளை யாங்கே
உள்ளதொரு திரை உண்மை அன்றேயென்றும்
உணர்ந்தவனோ திடுமென்று பின்வாங்கினான்
குள்ளமனம் கொண்டாங்கே திரையைப்போலும்
குழைத்தழகாய் தீட்டியதோர் ஓவியத்தைக்
எள்ளி நகையாடும்படி இழைத்தவமானம்
இவன் வரைந்த ஒவியத்தால் இருக்ககண்டும்

யாரங்கே என்றலறப் பணியாள் தானும்
ஆற்றும்செயல் ஏதுமன்னாஆணையிட்டால்
கூரங்கே கொண்டவளை கொடும் வாள்கொண்டே
குதூகலிப்பில் குரரல்வளையைத் துண்டாக்கவா
பேரங்கே உச்சரிக்க பின்னால் நின்றே
பிறிதென்றே முண்டம் சிரசெடுப்பேன் இன்னும்
வேரெங்கே வெட்டிக்குலம் வீணாக்க வா
விளையாடிப் பந்தடிக்கத் தலை சீவவா

என்றவனை உள்நோக்கி சினந்தான் மன்னன்
இதுதவிர வேறொன்றும் அறியா உள்ளம்
மன்னனுக்கே கேடு என்றவனைக் வைது
முடிச்செங்கே எடுத்துவா மூடா என்றான்
பொன்னிறைந்த கிழியினையே பரிசாய் கொள்ளும்
பொதுவில் நிறை தந்ததிந்தப் பெரிதாம் ஓவியம்
முன்னிருக்கும் திரைமறைவைப் போலே தீட்டி
மெருகடைந்த உன்கலையின் திறமை கண்டேன்

வந்துபெறு உன்பரிசை என்றேயந்த
வாடிநிற்கும் ஓவியரில் மூன்றாம் ஆளை
சிந்துமெழிற் புன்னகையை உதட்டில் கொண்டே
சிறப்படைந்த ஓவியத்தை விரும்பிக்கண்டேன்
வந்துகொள்வாய் என்றவனை மீண்டும் கேட்டான்
வகையறியா நின்றவர்கள் சலனமிட்டே
இந்த முடிவேனோ வண்டார்க்கும் மலரும்
இட்டமுடன் புல்வேண்டி இருந்த கன்றும்

ஓடிவந்தே வியப்பினையே ஈயக்கண்டோம்
இதுவென்ன திரைமூடித் தோன்றும் வண்ணம்
நாடி வரும் மன்னனையே நகைப்பில் ஆக்கி
நல்ல உளம்புண்ணாகச் செய்தோன் தன்னை
மூடிவைத்த திரைக்காட்சி பரிசைப் பெற்றால்
முடிவென்ன நீதியிங்கே பிழைத்த தென்றே
கூடியிந்த செயலுக்குக் காரணமேது
கொற்றவனைக் கேட்போம் என்றுள்ளம் கொண்டார்

(மன்னன் என்ன பதில்சொல்லியிருப்பான்
விடை உங்கள் ஊகம் சரியானதே கூறுங்கள்)

(முடிந்தது)



மற்றைய இரண்டு ஓவியங்களும் ஐந்துஅறிவுக்கும்  குறைந்தவைகளையே ஏமாற்றின . ஆனால் அரசனையெ  தடுமாறவ் வைத்த சித்திரம் தத்ரூபமாக இருந்ததால் அவனுக்கே பரிசு

மீண்டும் துன்பங்களா?


வெட்டவெளி வானத் திட்டென் றிருள் உள்ளே 
கொட்டியதார் முத்துக் கள்ஒளிர
வட்டமதிகென்ன பட்டதுவோ வந்து 
நெட்டைப் பனைபின்னே ஒட்டிநிற்க
தொட்டு மலையினை முட்டிக் களித்திட்ட 
இருட்டு முகில் மெல்ல நீர்பொழிய
விட்டு வழிந்திட்ட ஆறும் அணைகட்டை
தொட்டுங் குமுறித்தன் பாதைசெல்ல

பட்டு வதனத்தில் எய்த கணைதொட்டு
விட்ட மலரம்பு மோகமிட
சுட்டுவிழியுடன் கன்னம் செம்மை படச் ’
சேதி கொண்டே அவள் முன்னிருந்தாள்
சுட்டெரித்தே மங்கை வட்டமுகம் செம்மை
பட்ட கறை தன்னின் குற்றமென்றே
நெட்டெழும் வீழலை நெரெதிர் தண்மை கொள்
நீரினுள் ஆறிட வீழ்ந்த கதிர்

பட்டு நீலத்திரை ஒட்டொளி மங்கிடப்
பாரில் தீபநாளும் வந்ததென
தொட்ட இடமெல்லாம் வைத்த அகல்விளக்
கென்றொளிர் தாரகை கண்சிமிட்ட
கட்டை வயல் கீழை தொட்ட அடிவிண்ணில்
செட்டைஅடித்திளம் பட்சிகளும்
முட்டவளர் வயல்நெற்கதிர் கண்டதை
எட்டிப் பறித் தில்லம் ஒடிவர

சிட்டுக் குருவியின் குஞ்சுகள் சட்டென
அட்டகாசமிட்டே உண்ணவர
விட்டுவிடென்று தாய் ஊட்டிவிட கண்டு
வட்டமிட்டே யோர் பருந்தசைய
நட்டுப் பயிரிட்ட கத்தரிதோட்டத்தில்
வெட்டிமண் `கோலியும் நீரிறைக்க
சுட்ட வள்ளிக் கிழக் கிட்டொரு வாசனை
முட்டப் பசிதூண்ட நானிருந்தேன்

அட்டமா திக்கிலும் அன்னை சக்தியவள்
கட்டி யெழுப்பிய நீதியென்ன
விட்டவர் மெய்யுடன் வீணெனும் பாவங்கள்
கொட்டிச் சாம்பலிட்டுத் தீபொசுக்க
தட்டினை யேந்தியும் தாவென்று புண்ணியம்
குட்டிதலை கொண்டே கேட்டுநிற்க
இட்டதுஎன்னவோ கொட்டும் அருவியுள்
மூட்டை உப்பையிட்டுக் காத்திடென

தொட்டுச் சேரவைத்துப் பாவங்கள் பூமியில்
எத்தனை காலமென் றெண்ணமுன்பே
பட்ட துயர் வாழ்வில் கிட்டுவதென்னவோ
மட்டுஇ்லையெனும் தேடல்களே
கெட்டது தானே எழுந்துவர இன்பம்
கிட்ட நில்லா தூரம் ஓடிவிட
செட்டை அடித்திடும் குஞ்சுகளாய் காலம்
இட்ட உணவெண்ணி காத்திருக்க

சட்டம் ஒருபுறம் தான் நசுக்க அதை
சற்றும் `உணராது வாழ்வெடுக்க
கொட்டியதென்னவோ பூக்களல்ல வெந்து
கொள்ள இழையனல் துண்டங்களே
பட்டபடும்பாடும் பாவங்கள் தீர்ந்திடப்
பாவிமனதினில் ஏக்கங்கொள்ள
விட்ட உயிருக்கு வேடிக்கை மீளது
வேண்டி யணைவது துன்பங்களே!

கவியென்றேன் கலங்கினாள்


*****
(கவி -- கவிஞனையும் குறிக்கும் அதற்கு இன்னொருபொருள் உண்டு அதை வைத்து நகைச்சுவைக்காக.. எழுதப்பட்டது
**************
******************
பூவிரியும்பொற்காலை புதுவெயிலும் கீழ்க்கரையில்
கோவரிந்த படையணியின் கொடுங்குணத்தை கொண்டுமெழ
சாவரிந்து கொள்ளெனவே சாற்ற இருள் ஓடியெங்கும்
ஓவிரிந்த பேரண்டம் உள்ளே தொலைந்து விட

மாவரித்த மங்கையின்கை மச்சவிழி மூடும்வகை
போயுரித்த தாய்கதிரின் புகழ்மறைத்து முகில்நகர
தீஎரித்த வீறுகொண்டு திங்கள் முகம் கடுகடுக்க
பாவரிக்குள் சந்தமெனப் பழகுநடை கொண்டசைந்தாள்

ஆவிரித்த கூந்தல்தனும் அஞ்சும்மழை மேகமொத்த
தோசரித்து தோள்விழுத்தி தொங்கும்மணி மாலைமின்ன
காடெரித்த தீ பரந்து கானகத்தை மூடுவதாய்
ஊடெரித்த உணர்வுதகித் துள்ளம் பதைபதைத்தேன்

மானுரித்த மென்மைநடை மகிழ்வெடுத்த நெஞ்சமதை
ஏனுரித்துக் காயவைக்கும் இன்னல்தனைத் தந்திடுமோ
தானுரித்துப் பார்க்கவொரு சூனியம்வெங் காயமதில்
காணுரித்த பாட்டில் என் கனவுகளும் ஆவதுவோ

ஊனரித்தும் உணர்வெரிய உள்ளக் குறுகுறுப்பில்
நீசிரித்த போதிலெல்லாம் நெஞ்சு தடுமாறி நின்றேன்
மாகரித்த நிறமெடுத்தேன் மஞ்சள்வெயில் மேனியளை
வாஹரிக்கு திருமகளாய் வாழ்ந்திடுவோம் என்றழைக்க

நாபரிந்து நல்லாளே நறுந்தேனே நங்கையுனைத்
தேவரிந்த பூவுலகின் தெய்வமகள் என்றுரைப்பர்
வாதெரிந்த வகையிலொன்றி வாழ்ந்திடுவோம் என்றவனைப்
பாவரியும் கவி இவனாம் பாரடிநீ என்றழைக்க

மூவரிந்த மேதினியில் முயன்றே வளர்த்த தமிழ்
தோலுரிந்த முக்கனிகள் தொட்டசுவை யின்குரலால்
வாளரிந்த வகையுடலை வருத்திக் கிழிப்பதெனத்
தேன் சொரிந்த பூஅனலைத் தீசொரிந்த தாய் பகன்றாய்

(அவள்:)

நீபுரிந்ததேது சொலாய் நெடுமரத்தின் கொப்பிழக்கா
போயிருந்து தாவும் கலை பூவையிவள் பயிலவென
வாதெரிந்து கொள்ளென்றே வஞ்சியெனைக் கேட்டனையோ தோகைவிரி மயிலாடத் துணைகவியோ போவென்றாள்

இது வாழ்வாமோ

பெருமசைவு காணுமுயர் பரவும் விரிவானமதில் 
பிறழ்வு பிழையிலாது சுழல் உலகாமே
தருமெரிகொள் வானஒளி தனையுறவு மோகமதில்
தலைசுழலத் தான்திரியும் புவிமீதே
கருகுமுட லாகும்வரை கரைகடந் துலாவலின்றி
கருதும் பிழையான வழிதிரியாதே
செருகும் மரமீதில்கொடி, சிலமலரைத் தாங்கும் சுனை
செழிப்புற வென்றாகத் துணை தருவாளே

பருவ அழகான மகள் பாதிநடு இராவுதனில்
பல நகைபொன் னானவிதம் புனைந்தாடி
தெருவில்நடைபோடப் பயம் மனதிலுருவாகும் நிலை
நிகழும் வரை ஏதுமில்லை சுகவாழ்வே
தரும்வலி கொன்றேமகிழ்வும் தொலையப் பிணமாக நடை
தலைமுறை கண்டே அசைந்து திரிவோரை
புருவம் வளைத்தே எமதின் புனர்வெழவும் தேசமதில்
புதுவகையென்றாக வாழ்வீவாரோ

உருவெடுத்தே ஆழியிடை உலவுமலை மீதலையும்
ஒருபடகிற்கான வழி கரைகாண
கருமை கொளும்வானம் திசை காணும்நிலை போய்மறைய
கலங்கரை ஒளியாயிருந்து காப்பாளை
தெருவிலிடும் மாவலிகொள் உரம்கொள் ளிரும்பாயிடினும்
துருபிடித்துமே யழியும் விதமின்றி
தருமெமது யாக்கைதனைத் தவறியொரு பாசவழி
திரியும் நிலை தானழித்துத் திறனாக்கு.

பெருவெளி விநோதமெனச் செறிசுழல்பல் கோளங்களும்
பழுதிலை யென்றோடும் இயல்உருவாக்கி
கருவி இயல்பானததில் கருதிடும் பிரமாண்டவழி
காணும் உச்சவான் வெளியில் உறை சக்தி
கருவிலிணைந் தோர் துளியில் காணும்பல கோடிகளில்
கடையிலிருந் தோர் அணுவை தெரிந்தோட்டி
வருவதிலொன்றாக்கி யதை வனிதைமலர் உதரமதில்
விரியுலகில் லொன்றாக உயிர் தந்தாளே

மருகி மனமோ வெருகி அருகி மகிழ்வான தெரி
மலை வருமா தீக் குழம்பின் வகையானால்
உருகி நிலையோ குலைந்து உயர்விழந்து உயிர்கலைந்து
உருவம் அழிந்தான தோர் ஓவியம்போல்
பருகி உடல் வேர்வைவிட்டுப் பலதுமுண்டு போய்கழிந்து
பாசமெனும் பேயின் பின்னால் அலைவோனை
கருவிலன்னை யானவளும் கடைவழியில் மாதவளும்
கவலைவரும் வேளை மட்டும் புதல்வோரும்

மனதில் நினைந்தழுவதன்றி மறு கணத்தில் மறந்தவரும் மயங்கி இந்த உலகமதில் மனம் கொண்டே
சனமவர் கொள் கூடுகளில் சளியும் மணவேர்வை கசி
சதிரமதில் மோகம்கொண்டே உழல்வோரை
சினமுடன் தீ அணுகிவர சிறுமைஅழிந்தணுகுமிடம்
செழுமிளந்தீ பெருகி உடல் கரியாகும்
தனமெனப் பேராசை கொண்டு தனை அழைந்தும் வேகங்கொண்டு
தரணியிடை உழலுவதும் ஒருவாழ்வோ?

சிரித்தவள் சினந்தாள்


..............................................
அழகிய தோர் இளம்மாலை 
. அசைந்தது தென்றலில் சோலை
பழகிய முகம்மதி, விழிகள் 
. பனிநீர்த்துளிசில வீழ்த்தி
அழுதிடும் உணர்வை நிறுத்தி 
. அருகினில் வந்தாள் ஒருத்தி
எழுதிட வகையது தெரியேன்
. இளமகள் வதனமோ ஒருதீ

தமிழினி கவிதரும் கலைஞா
. தருங்கவி அழகெனில் சரியா
அமிழ்தென இனிதது என்றேன்
. அகங்கொளப் பெருஞ்சுவை கொள்ளேன்
தமிழினி கவிதை யைக் கண்டால்
. துயரறும் கவலைபோ மென்றேன்
குமிழிதழ் கேலியில் முறுக்கி
. கொடு(ங்)கவித்தேன் கொடு என்றாள்

நறுஞ்சுவைக் கவியொன்று கொடுத்தேன்
. நெளிகுழல் நங்கையும் கண்டாள்
இறுகினவோ முகம் பார்த்தே
. இனித் தமிழ்மெல்ல போம் என்றாள்
குறுவிழி உதிர்த்தவள் நின்றாள்
. கோபமென் றுணர்ந்திடை கேட்டேன்
துறுதுறு எனும்விழி ஈரம்
. தோன்றிய தெதன்விளை வென்றேன்

தமிழினி அமுதமே என்றார்
. தருமொளி நிலவென பகன்றார்
உமிழிதழ் நீருடன் உதிரம்
. உதைப்பவர் விளைவெழ உவர்க்கும்
குமிழலை போலொரு கணமே
. கொண்டொரு வாழ்வுடன் முடியும்
தமிழ்மகன் விரமும் புகழ்ந்தார்
. தனித்திடும் குணம்சொல மறந்தார்

உலகினில் எத்தனை தமிழாம்
. உயர் அரசிருந்தன அறிவாய்.
உலவிடும் தென்றலும் வீச
. உறுமின மூவகை கொடிகள்
பலமொடு தமிழ்நிலமாளப்
. பறந்தன வேங்கை வில் மீன்கள்
கலக்கமு மடையாக் குடிகள்
. களித்தன நடைமுறைகண்டோம்

பலமதை தமிழனின் றிழந்தான்
. படையணி ஆளுமை நலிந்தான்
குலமதைக் காக்கவும் இயலாக்
. கொடுமையுள் தவித்திடும் நிலைகாண்
பலமதும் ஒற்றுமை ரூபம்
. பலரும் ஒன்றாகிடக் காணும்
விலகியும் இதுநிலைசொல்லா
. விரும்பிய கவி தமிழ் காவா

விடுகதை யிலைத் தமிழ் வாழ்வு
. விரிந்திடும் தொடர்கதை யல்ல
எடு கையில் எழுதிடும்கருவி
. எதுகையும் மோனையும் பெருகி
விடுதலை அதுவின்று வேண்டும்
. விரும்பிய சுதந்திரம் வேண்டும்
தொடு கவி பலதென இன்று
. துளைத்திடும் மனமெனும் இரும்பு

கொடு உணர்வெனும் குறிகொண்டு
. குலைந்திட வன்செயல் இன்று
வடு பல நெஞ்சினில் உண்டு
. வரையட்டும் மனம் அதன்பண்பு
நெடும்பல வரிகளில் அன்பு
. நிலைத்திடக் கவி செய்து தள்ளு
அடுக்கி வை அடுத்தவர் கண்டே
. அணுகவென் றொற்றுமை கொண்டு

தடதட தடவென நடந்து
. தமிழ்நிலம் காண் உளம்கொண்டு
விடவிட விழுவது என்று
. விதியிலை விரைந்திதைச் சொல்லு
படபட இதயமும் துள்ளிப்
. பருகிடும் தமிழ்க் கவி அள்ளிக்
கடமைகள் தனில் வெடிகொளுத்து
. கலங்கா நில் விடிவுண்டு 

இன்றைக்கும் வேண்டும் இது

..........
மலை மேவும் காற்றே நில் மகிழ்வான வாழ்வுக்கு
மனிதர்க் கின்றெது வேண்டும் சொல்லு
கலையாம் நற்றமிழ்சொல்லிக் கனிவான தமிழ்தன்னைக்
காதல்செய் அதுவேண்டுமின்று
வலை கொண்ட மீன்போன்று வந்தாடும் விண்மீன்காள் 
வானத்தில் நின்றெம்மைக் கண்டீர்
கலைசிந்தும் சமுதாயம்காணும் இன்றின்னல்கள்
கலைந்தேக எதுவேண்டும் இன்று

மலை போலும்திடமான மனிதர்காள் மதிகொண்டே
மண் காக்க வேண்டும் எழுந்தின்று
தலைபோகும் நிலையின்றித் தமிழினுயர்வான தரம்
தனைக் கொள்ள இயல் வேண்டும் இன்று
இலையோடு தலையாட்டும் இளம்பூவின் கிளைமரமே
எதுவேண்டும் தமிழ்வாழ `இன்று
குலைவாழை பழம்தந்து கொள்ளும் ஓர் வாழ்வோடு
குலம்வாழத் தனைஈயும் அன்பு

சரிந்தாடும் பூவேஉன் சதிராட்டம் அழகேதான்
சரிசொல்நீ் எதுவேண்டும் இன்று
புரிந்தாற்றும் செயலோடு புயலாக வேகத்தில்
பூந்தமிழ் காத்திடவும் சொல்லு
கரிவானில் உலவுமொளி நிலவே ஓர்மறைமேகம்
கறைகொண் டுன்முன்னாலே வந்தும்
பரிவான ஒளிகொண்டாய், பழந்தமிழ் மாந்தரினம்
பிழைத்தேக எதுவேண்டுமின்று

களிகூரும் மக்களினம் கையிற் செங்கோலுடனும்
காக்கும்நற் காவலனே வேண்டும்
வெளிவான மென அன்பு விரிகின்ற புகழோடு
வரவொன்று நலமாக வேண்டும்
எழும்வானச் சுடரே உன் இளங்கதிரோ அனல் பொங்க
எதுவேண்டும் இன்றேநீ சொல்லு
மொழிவாழ இனம்வாழ முழுவாழ்வும் அறமோடி
முடிவொன்று பெறவேண்டும் கொள்ளூ

குதித்தோடும் ஆறேநில் கொட்டருவியாகினாய்
குமுறுவாய், எம்வீழ்ச்சிகண்டு
புதிதாகச் சொலவுளதோ? - பூமிக்குள் தமிழ்வெல்லப்
போதுமோர் பலம் கொண்டஅரசை
அதிகாரம் இறைமைகொள் ஆட்சியெனும் வழிசெய்து
அவர்மண்ணைக் காக்கும்வகைசெய்யும்
நதியாகப் பொங்கிவரும் நிலமோடும் வெள்ளமென
நெஞ்சமதில் பொங்குணர்வு தேவை

இது ஒரு கனாக்காலம்


ஒருகருமை உருவாகி உளமதிலே பெரிதாகி 
உறவெனவா என்றென்னை அழைத்தது 
வருமிடரும் பெரிதாக வருந்தலே பொழுதாக
விருந்தெனவும் எனைப் பார்த்துச் சிரித்தது
கருமிருளும் பலிகொள்ள கருஎழுமென் மனமெங்கும்
கவலைகளே பெரிதாக வளர்ந்தது
பெருமொளியின் விடிவேங்க பிரளயமும் எதிர்வந்து
புயல் கண்ட மரமாக்கி அழித்தது

தருவ ஔ டதமென்ப தவறியும் நஞ்சாகித்
தலை கொண்டு கால் நீலம் பாய்ந்தது
கனவுகளும் பேயாகக் கடுமிருளைக் கண்நோக்க
கலங்கிடும்வகை உருவம் கண்டது
தினமு மொரு வகையாகத் தெரியுமவ் விருள்நோக்கி
தொலைந்தனன் பலிகொண்டுசொன்னது
நினதுடைமை துயர்போக நில்லாயென் பக்கமணை
நெடுவான சக்திமற என்றது

உயிரறிவைப் பிரிந்துவிட இருள்தானே இனிமையென
ஓடியுயிர் பின்னாலே சென்றது
துயில்மிகுந்த நிலையாகி சுகமெதென அகம்தேடி
துன்பமதை விளைவாக் கொண்டது
பயில்கலையும் பாழாக படரும்வெறிதானோங்கப்
பார்க்குமிடமெங்கும் ஒருதோற்றமாம்
மயிலிறகை விரித்தாடும் மேக இருள் கண்டாலென்
மனமதை நிகர்த்தாடி நின்றது

கவிதைமழை தானோய கவலைகளும் பெரிதாகக்
காப்பாறு என்ற மன ஓலமும்
புவி சுழலப் புவியோடு புதல்வர்களும் சுழன்றோடப்
பொல்லாத மனம் ஆட்சிகண்டது
தவித்தநிலை தடுமாற்றம் தலை சுற்றமதிகெட்டுத்
தனியோரம் ஒதுங்கி நின்றெண்ணவே
குவிவானத் தீயொளியை காணாதுநின்றதொரு
குறைகண்டு எழுந்தோடிச் சென்றது

அழுதநிலை தடுமாற்றம் அவலமுடன் வருங்கேடு
அன்னையவள் பெயரால் மறைந்தது
தொழுதகை உயர்வாகத் துணைதுணை என்றுயிர்வேண்டத் தூய்மை மனதோ டிணைந்து கொண்டது
குளமென என்விழிகண்ட கோலமது சீராகிக்
கொள்ளினும் அவ்வதிர்வு பெரியது
விழுந்தெழும் வலியின்னும் விடைபெறவும் சரியாக்க
வேண்டும் சிறுவேளை மனம் சொன்னது

அறியாயோ???


************
பெருமசைவு காணுமுருள் பரவும்விரிவானமதில் 
பிறழ் வசை வில்லாது சுழல் புவிமீது
தருஎரிதீ ஆதவனை ஒளியுறவு மோகமதில்
தலைசுழல தான்திரியும் நிலைபோலே
கருகுமுட லாகும்வரை கரைகடந் துலாவலின்றி
கருதும் பிழையான வழி திரிவோரும்
உருகு மனதொடு தமிழ் உரிய பெருமாசனத்தில்
இருத்தி அர சாளும் வழி மறந்தாலும்

செருகும் மரமீதில்கொடி, சிலமலரைத் தாங்கும்சுனை
சிறிதளவும் உரிய துணை மாறாது
மருகிடவு மாகத் தமிழ் மனிதர் மனதூடு பல
மாறிடும் வினோத குணம் எதனாலே
குருவினுடான கல்வி குழந்தையெனில் தாயின்மொழி
குமரனெனில் குலவுமனைசொலும் வார்த்தை
அருந்தமிழ் என்றாக உயர் அகிலம் பரந்தே விளங்கும்
அதிசய மென்றாகும் வளம் புரியாது

தருமுனது வார்த்தையின்று தமிழினுயர் மாண்பிழந்து
தலைமொழியென் றாங்கிலத்தைக் கொளலாமோ
பெருமைகொள் விநோதமெனப் புகழெழுமாம் பேசவெனப்
பிறிதொருவன் மனைவிரும்பிப் புகலாமோ
ஒரு நிலையில் லாதமனம் உயர்வும் இழி வானதென
உரிய நிலைதான் மறந்த உளமேனோ
தெரு வழியிலோ டலையும் தனம் விரும்பும் யாசகனின்
தினமிரங் கலான நிலை பெறலாமோ

வரவு செலவோடு சமன் விலையும் கொடுத்தார்வமுடன்
விரும்பி நின தாய்மொழியை மதிப்பாரோ
கரவுமனதோடு வந்து கயமை செய்யும் தூதுவரும்
கரம்கொடுத்து உயிர்பறிக்க முயல்வேளை
பரவுமொழி ஆங்கிலமும் பழமை தமிழோடு துணை
புணர்வில் ஐயாம் கோயிங் கோவில் என்பாரோ
இரகசியமாக இவர் உலகில் தமிழ்சிதைக்கும் விதி
இயற்றித் தமிழ் படைஅழித்த தறியாயோ
***********************

அரண்மனையில் ஒருகாட்சி



(முன்னிருட்டு நேரம் அரண்மனையில் நிசப்தம் ஆச்சரியப் படுகிறாள் தோழி)

நந்தவன மாகாதோ?
தோழி:
அன்பிலே விதை விதைத்து ஆசையெனும் நீரூற்றி
பொன்னாய்ப் பயிர்வளரும் பூத்து மலர் பொலியுமெனத்
தென்போடு காத்திருக்கத் தேய் பிறையின் பொலிவெடுத்து
தன்னில் உளம்வாடித் தவிப்பதுமேன் சொல்தலைவி

தலைவி
கண்முன் கணம் தோன்றிக் காற்றிலெழும் வித்தைசெய்து
பெண்ணின் மனமுருகப் பேசியெனைப் பித்தாக்கி
எண்ணம் மயக்கி உரு எத்தனை தானெடுத்தாலும்
திண்ணமின் றெனை மறந்தால் தேகம் பதை பதைக்காதோ

செந்நெல் விதையெறிந்து சீராக மண்குழைத்து
வெந்து வியர்வைகொட்டி வெய்யில் நின்றுடல்கறுத்து
வந்து மழை வானூற்றும் வயல் செழிக்குமென்றிருக்க
அந்தோ வான்பொய்த்துவிடின் அகமெடுத்த வகையானேன்

தோழி:
நொந்து படும் வேதனையும் நிகழ்வுச் சிறுமைதனும்
மந்தவெயில் முன்னெழுந்த மறைமுகிலாய் பறந்துவிடும்
செந்தமிழும் கேட்குமதில் சிந்தையொலி சந்தமெழும்
வந்தவனும் தந்திடுவான் வானுறையும் தெய்வ முண்டு

தந்தனதா ஓசையெழத் தமிழினித்த மங்கையவர்
வந்துநடம் செய்யுமொலி வானமெழும் பொற்கவிதை
சந்தமெழச் சத்தமிடும் சிந்தை குளிர்ந் தின் வசந்த
நந்தவன மென்றொளிர நாளும் இறை பூச்சொரிவாள்

பூவும் மறந்த தேனியும்


(பூ)
ஓடிச் சென்று பூக்களில்
உள்ள தேனும் சேர்ப்பதில்
நாடிச் செல்லு முன்மனம்
நாளில் இன்ற யர்ந்ததென்
வாடித் தானிப் பூவிழும்
வாழ்வு என்ப தென்னவோ
கூடு்ந் தேன்க சப்பதில்
கோல மிந்த எண்ணமோ

(தேனீ)
தேடி வைத்த தேனடை
தேவைக் கின்று போது்மாய்
வேடிக் கைகொண் டென்மனம்
வீணில் தூக்கம் கொள்வதென்
நாடி வந்து தேனதை
நாளும் கொள்ள என்னிடம்
நீடி ழந்த மோகமும்
நெஞ்சில் கொள்வ தெப்படி

(பூ)
யாது வந்த போதிலும்
யார் தடுப்ப ராயினும்
நீதி உன்க டன்முடி
நேரும் நன்மை யாதென
ஊதி யத்தைக் காத்தி் டும்
உள்ள மும்த விர்த்திடென்
றோது கின்ற கீதையும்
உள்ம னத்தில் கொள்ளுவாய்

யாது வந்து சேரினும்
நன்மை யென்றே எண்ணிடில்
சூது கள்ளம் வெஞ்சினம்
செய்த லின்றி யாவரும்
ஏது உண்மை வாழ்வெனும்
இன்பங் கொண்டொன் றாகிடில்
போது மென்ற தேவைகள்
பூத்த வாழ்வொ ளிர்ந்திடும்

வீடு


குச்சி வாயில் கொண்டுசெல்லும்
கொக்கின் வண்ணப் பட்சியே
இச்சை கொண்டு நீபறந்தும் 
எங்கெ டுத்துப் போகிறாய்
துச்ச மானிடத் தில்வந்த
தோர் சிறுத்த மானிடா
குச்சிவீ டொன்றாக் கவெண்ணிக்
கோல மீதைக் கொண்டனன்

பச்சை நீள் மரக்கிளைக்குள்
பார்த்துக் கூடு கட்டினால்
உச்சி வானெ ழும்மழைக்கு
ஊற்றும் நீரென் செய்குவாய்
நிச்ச யமென்குஞ் சினுக்கு
நேர்வ தென்றோர் தீதில்லை
அச்ச மோஎமக் கொன்றில்லை
ஆவ தென்னி யற்கையால்

விட்டுப் பேய்மு ழக்கமின்னல்
வீசும் வேகக் காற்றெழில்
தொட்டு யாவும் கீழ்விழுத்தும்
தோன்ற வில்லை யாசொல்லாய்
கட்டி வீடு வைத்திருக்கும்
கார ணத்தில் சொல்கிறேன்
விட்டு வாவுன் கூட்டைநீயும்
வீட்டி னுள்ளே கட்டலாம்

குட்டி யாய்சி றைகளிட்டுக்
கொண்ட தோஉன் இல்லென
பட்டமும் கொடுத் துள்ளேயே
பாதி நாட்க ழிக்கிறீர்
வட்ட மாதிசை பறந்தும்
வாழ்வு கண்டு சொல்கிறேன்
மட்டமாய் உள்வாசல் பூட்டி
வாழும் ஈன வாழ்க்கையாம்

சுட்ட செங்கல் லையடுக்கி
சுற்றி நீயும் கட்டுவாய்
சொந்த மென்ற ரற்றியீது
சொர்க்கமென்று துள்ளுவாய்
பட்டு மாது யர்பெருத்தும்
பார்ப்ப தென்ன வாழ்வினில்
விட்டு நாம் வெளிப்பறக்கும்
வீர வான்சு தந்திரம்

எட்டுமா என்றே நினைத்து
எண்ணிப் பார் இப்பூமியில்
சட்ட மாமிறை வகுத்த
சாத்தி ரங்கள் மீறுவாய்
விட்டு நீநினைத் தவுந்தன்
வேட்கை யெண்ணி ஓடுவாய்
கொட்டும் தேன்சு வைப் பழங்கள்
கொள்ளும் இந்தப் பூமியில்

சுட்டுமா விலங்கு மீனை
சுத்தமின்றி உண்கிறாய்
கட்டியெங்கும் மேனி போர்த்துக்
கள்ள நெஞ்சம் கொண்டனை
துட்டுப் பொன்பணம் மென்றெண்ணித்
துக்கங் கொண்டு காண்கிறாய்
தொட்டு யார்பொருள் கொண்டாலும்
தீண்டிக் கொன்றும் கொள்கிறாய்

வெட்ட வான்வெளிக் குள்நீந்தும்
வித்தை கற்றோம் எம்மிடம்
சுட்ட வெண்மைச் சங்குபோலும்
தூய்மை யுண்டு கண்டுகொள்
நட்டமா யொன்றென் றிங்கில்லை
நாம் இயற்கைத் தோழர்கள்
விட்ட வான் வெளிக்குள்நீந்தி
வாழு மின்பப் பட்சிகள்

கவிதை என் மூச்சு


தமிழ் அன்னை மடிமீது தவழ்கின்றவன் 
தமிழ் என்னும் மதுவுண்டு மகிழ்கின்றவன்
அமிழ்தென்னும் சுவை கண்டு திளைக்கின்றவன் 
அழும்போதும் இசைசந்தம் குரல்கொண்டவன்
குமிழ்வண்ண ஒளிவானில் கதிர் போலுமே
குறைவற்ற வகை வாழ்வில் அருள்கொண்டவன்
சிமிழ் கொண்ட கலைவண்ணம் வரை ஓவியன்
சிலை யாக்கும் சிற்பிகை உளி போன்றவன்

மகிழ்வென்ப துளம் கொள்ளக் கவிவந்ததா
மனம் கண்ட கவியாலே மகிழ்வானதா
அகில் கொண்ட தீயாலே மணம் வந்ததா
அதுவந்த பொழுதோடு கவிவந்ததா
துகில் சூழும் இளமேனி தமிழ் என்பதா
துள்ளும் நல்லிசை சந்தம் கவிகொண்டதா
முகில் வானம் என நெஞ்சம் விரிகின்றதா
முகிழ்கின்ற கவிதான் என்மூச்சானதா

நலங் கொண்டு மனமிங்கு பூக்கின்றது
நகர் காற்றில் இழைந்தின்பம் தருகின்றது
இலங்கும் அக் கதிர் வந்து பயிர் மீதிலும்
இலை கொண்ட தரு வாழ்வை வளமாக்குவான்
வலமென்றும் மிடமென்றும் வழிகண்டவன்
வரும் பாதை ஒளிதந்து இனங்காட்டுவான்
குலம் வாழக் கொடிமீது குணம் தந்துமே
குறும் வாழ்வில் மூச்சாக உயிர்காப்பவன்

கவிதை யென் உயிர்மூச்சுக் காற்றானது
கலைவாச மதுகொண்டு திகழ்கின்றது
புவிமீது வருகின்ற உயிர்கொள்பவன்
புரிகின்ற செயலுக்கு தடைசெய்தனள்
அவிழும் மென்முகை போலுமருள் கொண்டவள்
அகம்மீது பெரும்சக்தி அளித்தாளவள்
குவிகின்ற வான்கீழே குடிகொண்ட என்
குறு மூச்சை கவிதைக்குள் இழைத்தாளவள்

அருள் கொடு அன்னையே

தொழமன மதில்நிறை துணிவெழ அருள்கொடு
துணையிரு பெருஒளியே
குழலிசையென மனம் கொளும் உணவினிதுற
குரல்கொடு நிறையெனவே
வழமையென் றருகினில் வரமொடு வரவெடு
வழிதரும் மனதுறைவே
முழமென உயரந்திட முடிவென வழுகிடும்
முயற்சிகள் நலம்தரவே

உளமதில் அருளுரை உயரிடம் தருகுவை’
உதவியில் பெருஒளியே
இளமையின் வகை மனம் இருளகன்றிடச் சுகம்
இலங்கிடக் கொடுவரமே
குளமதில் விரிஅலை குதித்திடும் தொகையெனக்
கொடு கவி கவிகவியே
மளமளவென வரும் மதியிடை உனதுசொல்
மடைதிற நதி் யெனவே

கருவெழ உயிர்கொடு கவிதைகள் பொழிமழை
கனமெழப் பெருங் கடலே
தருவதில் குருவிகள் தருமிசை தனில் குயில்
தரமென இனிதுறவே
தருவன மதில்நிறைந் தருவன கனி ச்சுவை
தருமே ஒவ்வொன்றும் தனியே
முருகெனும் தமிழினி முயன்றிடப் பெருகட்டும்
முடிவிலை எனும் முடிவே

பலமலர் மலர்ந்திடும் பனிதொடும் அழகினில்
பளிங்கெனும் எழில்கொளுமே
உலவிடும் கதிர்தனும் உதயமென்றெழுகையில்
உறவுகண் டிதழ்விடுமே
நிலமதில் பலவண்ண நெகிழிதழ் மதுவொடு
நிலைகொள்ளு மதுவெனவே
கலகல எனப்பொலி கவிதைகள்தனில் மொழி
கவினுறத் தருகுவையே

இன்பங்கள் 3


கானம் பாடும் குயிலோசை 
காலைச் செவ்வண் ணடிவானம்
வானத் தூடே விரைபட்சி 
வந்தே போகும் தென்றலுடன்
கூனற்பிறையும் கொட்டருவி 
கொள்ளும் ஓசை குளிர்காற்]று
ஆனந்தத்தை அள்ளித் தரும்
ஆகா இன்பம் இன்பமன்றோ

வண்ணக்கலவை வரை கரமும்
விந்தை தீட்டும் ஓவியங்கள்
எண்ணத் தோற்றும் உருவங்கள்
ஏற்றோர் கல்லில் சிலையாக்கம்
கண்ணின் காட்சி காவியங்கள்
கவிதை ஊற்று காண் தமிழும்
உண்ணத் திகட்டா தேனமுதம்
உள்ளோர் இன்பம் இன்பமன்றோ

சேனை, படைகொள் சிற்றரசன்
சிந்தனை வல்லோர் அறிவூட்டல்
மானை யொத்த மங்கையரின்
மஞ்சம் தூங்க பஞ்சணைகள்
தேனை யொத்த பேச்சினிமை
தேங்கிக் காணும் பொற்குவியல்
வானை யொத்த புகழாரம்
வாய்த்தால் இன்பம் இன்பமன்றோ
(வேறு)

இயற்கை வனமும் இறைகோவில்
ஏகாந்தம் நல் நீரோடை
தயங்கிப் பாயும் அலையோசை
தாமரைக் குளமும் ஆச்சிரமம்
மயக்கும் சூழல் மரக்கூட்டம்
மாமர நிழலும் பட்சியினம்
அயர்வே அற்ற தேடல்கள்
அறியும் ஞானம் இன்பமதே

மழலைக் கூட்டம் மாதர்கள்
மனதில் இச்சை மகிழ்வாட்டம்
குழலின் ஓசை குளிர்த் தென்றல்
குறுகும் துயரம் கும்மாளம்
பழகும் நட்பு பாசவலை
. பந்தியில் உணவு பரபரப்பு
வழங்கிடும் பரிசு வேடிக்கை
. வாழ்வே இதுதான் இன்பமன்றோ

இன்பம் 1


இசை மேவிவருங் களி கூரும்வகை 
இளங் காற்றிலெழும் ஒருகீதமே
விசை கூடும் மனந்தன்னில் காலையெனும்
பொழுதோடிவருங் கதிர் ஏறவே
திசைநாலுமிருந் துணர்வோடு கிளர்ந் 
துயிர்மீது படர்ந்துடல் ஆடவே
அசைந்தோடிவரும் நதியோட எழும் பிர
வாகமெனச் சுகம் காணுமே

தேடிவருங் கருவண்டதனை மது
வுண்ணவென மலர் தாங்குமே
ஆடி நிலத்திடை வீழ்தருவின்கனி
ஆனந்தமாய் கிளி உண்ணுமே
நாடி வரும் உயிர் வாழவென இந்த
நானிலமும் இடம் தந்ததே
ஒடிவிடுமுயிர் வாழும்வரை நாம்
இல்லாற் கீதல் இன்பமே

மலை மீதுறையும் கதிர் சோலை யெங்குமொரு
மஞ்சள் வெயில் பிர காசமே
அலை கூந்தலுடை யிளங் கன்னியரோ பூம்
பந்தெறிந்தே விளையாடவே
நிலை ஓடும் சிறார்களும் கூடி மகிழ்ந்தவர்
நின்ற இடம்விட் டோடவே
கலை மேனியர்கள் அவர் காவலர்கள் அன்னை
கைபிடித்தேகிடும் காட்சியே

செழித்தோங்கும் இளம் பசும் வண்ணமெழச்
செறி பாரிடை வாழ்ந்திடும் போதிலே
பழி தோன்றிடப் பொங்கிடும் நீளத்திரைகடல்
பாய்ந்து மறைந்திடும் சூரியன்
விழி பார்த்துக் கிடந்திட்ட பொன்நிலவோ உடன்
வந்து முகம் எட்டிப் பார்ப்பதும்
களிகூடும் மனங்களில் காட்சிகளாய். விழி
காணு மிப்பூமியும் இன்பமே

சந்த வசந்தம் தேடி.......!


குவைபொலியக் கவிமலியக் குவலயமும் நிறைபுகழ
அவைமகிழக் கலைபொலிய அனுதினமும் கரமெழுதச்
சுவைஎழவும் சுவையிலினி சுகமெழவும் சுழல் புவியில்
இவை உளதா அதிசயமென் றிருவிழிகொள் இமைவிரிய

நிலம்மகிழக் கலைபெருக நிறைகவிகள் பலவரவும்
பலதிசையும் படரும்வளி படுமினிமை பயன்மொழியத்’
தலையிலொரு மகிடமெழத் தரணியதை வழிமொழியக்
குலையுமலர் மெதுமையெனக் காண்சந்த வசந்தமதோ

கவிவரியில் இழைசந்தம் கவினுறவே நிறையுதெனப்
புவி ககனம் புகழ்பரவப் புதியதொரு சுகம் எழவும்
தவி்த்த நிலை தனைவிடவும் தாகமுடன் சந்தநடை
குவிக்குமிசை கொள்ளெனவே குரல் அரியமொழி அறிய

இனம் அழகாய் இயல்புரியும் எழில்மயிலும் குயிலொன்று
கன மழையின் துளிகாண கானமுடன் நாட்டியமும்
புனல்சரியும் அருவியிசை புதுநடைகொள் சந்தமதில்
தினம் பயில்தல் தேரவெனத் திசையறிந்து வந்தனவாம்

இன்பத்தில் துன்பம்


இன்ப மலர்த் தோட்டமென்றே இவ்வுலகாக்கி - அதில்
. ஏரியொடு ஆறு மலை புல்வெளி கூட்டி
மென்மலர்கள் பூவனமும் மாமரச்சோலை - யென
. மேதினியில் இன்பம் நிலைக்காட்சி யமைத்தாள்
அன்புவழி செல்லும்வலைக் காந்தமமைத்து - அதில்
. ஆடியோடும் போதுமுள்ளே பாசமிழைத்து
தன்னுணர்வில் கூடுமொரு இன்பமும்செய்தாள் - பின்
. தவித்திருக்கப் பிரியுமொரு வேதனைதந்தாள்

எங்கும் ஒளி பாயும் இளஞ் சூரியோதயம் - பின்
. ஏகாந்த நிலவொளிரும் பொன்னெழில் தோற்றம்
மங்கைமனம் சேர்ந்திசைக்க மன்மதராகம் - என
. மாற்றங்களும் மாறுதலில் மாமகிழ்வீந்தாள்
பொங்கிவரும் ஆறெனவே பூம்புன லூற்று - அது
. போகும்வழி கூடல்மரம் பூந்தளிர் நீட்சி
தொங்கும்சுவை மாங்கனிகள் தின்றிடும் பட்சி - கூட்டித்
தேமதுர கோலமென வாழ்வை யமைத்தாள்

சிங்கமொடு சீறும்கொடுபாம்புகள் காணும் - இன்னும்
. சொல்லடங்கா கோரமுக தோற்றங்கள்தானும்
பங்குபெறும் காட்டிடையே புள்ளியிட்ட மான்
. பதுங்கி வாழச் செய்யும் வகை அச்சமு மீந்து
இங்கவைகள் ஒன்றெனவே வாழவும் விட்டாள் - அதில்
. இனிமைதனை. தேடும்வழி இடர்களும்செய்தாள்
அங்கம் அறுத்தழிவில் இன்பம் காண்பர் தம்மைக்
. ஆதரித்துக் காப்பதிலே ஆனந்தமுண்டோ

எங்கெதுதான் இல்லையென்றால் ஏக்கமுண்டாகும் -மனம்
. எண்ணியது கையில்வர இன்பமென்றாகும்
பொங்குமின்பம் கண்டுமனம் ஆனந்தம்மேவ - இந்தப்
. பூமியிலே துன்பம்தனை கொஞ்சமாக்கினாள்
தொங்குமுயர் வானிடையே தோரணங்களாய் - முகில்
.. துரத்தமதி ஓடியொளித் தேகவிட்டவள்
கங்குல் விடி காலையிலே கதிரினை ஓட்டி -ஒளி
. காணும்பல மாற்றங்களாய் கணித்தபின் ஏனோ

தோற்றம் பெறும் மேனிதனும் இன்பம் காணவே என்று
,. துன்பம் தனை கொள்ள விடக் குவலயமாந்தர்
தூற்றியேவே றினமழித்து துடிதுடிக்கையில்`
. துன்பமுறும் வலிமரண ஓலம்கேட்டதில்
வீற்றிருக்கும் மன்னர் படை குடிகள்யாவுமே
. வெறிபிடித்து இன்பங்கண்டே வெற்றியென்றாறடி
ஆற்றும்செயல் அகிலமதில் எப்படி வந்தே
. அன்பழித்து இன்பமும்கொன் றெழுச்சிகொண்டதோ

கானலா காட்சியா



காலத்தின் காணிளம் தேவதையே இக்
. காட்சிகள் மாயங்களா
கோலத்தில்நீ குழைத் தீட்டிய வண்ணத்தைக் 
. கொண்டதோ ரோவியமா
ஞாலத்தில் இங்கே நடப்பதெல்லாம் வெறும் 
. ஞாபக விம்பங்களா
மேலதில் விண்ணில் மிகைப் படவே ஒளி
. மின்னலும் கற்பனையா

நாளும்விடிவது நாடகத்தின் அங்கம்
. நாட்டிய மாற்றங்களா
ஆளும் அலங்காரப் பாத்திரமா பூமி
யானதென் மேடையிதா
ஏழும் இசைகண்டே ஆடுமரவமென்
. றாக்கிய தெம்முணர்வா
மாளும் உடல்தந்தும் மானிடமென்றபின்
. மங்கிடும் தீபங்களா

ஆடிமுடித்தே யரங்கம் வெளித்திட
. ஆவிசென் றுள்ளதெங்கே
ஒடிக் களைத்து முட்கார்ந்திரு க்கும்போதே
. ஓசை பிரிப்பதென்னே
பாடிக் கைகொட்டியும் பந்தங்களோடாடிப்
. பாரினில் கண்டதென்ன
மூடித் திரைபோட்டு முன்னாலிருத்திப் பின்
. மூச்சைப் பறிப்பதென்ன

சூடும் பூம்பாவையின் சூட்சுமமென் எழில்
. சொட்டுங் கவர்ச்சியுமென்
கூடுமுறவுகள் கொண்டஇரவுகள்
. கொட்டும் மெய் தாளங்களேன்
தேடும் திரவியம் தேவைகள்யாவும் இத்
. திக்கெட்டும் கொள்வதுமேன்
நாடும் மனம் வைத்தென் நாள்வர ஞாபகம்
. நம்மைப் பிரிவதுமேன்

வானத் தொலைவிலே பச்சை நீலசெம்மை
. வண்ணங்கள் செய்தவர் யார்
போனதில்லை அந்தப் பிரபஞ்சத்தூடே ஓர்
. புத்தொளியும் உண்டோசொல்
ஊனத்திலே பலஓட்டையிட்டு எமை
. உள்ளே இருத்திவைத்தும்
நானிலத்தில் கடைநாளென் றிருந்தபின்
. நாடும் வான் வண்ணமோ சொல்

கூடும் மாவிண்ணதிர் கோளங்களாடிடக்
. கூழெனும் தீக்குழம்பேன்
ஓடுமவ் வண்டங்கொள் பிரகாசங்கள் அங்கு
. உள்ளதோ கானலோ சொல்
வீடும் கிழக்கெனும் வீதியுமேன் அந்த
. வண்ணத்துத் தேருலவும்
தேடும் உயர்திரு தெய்வத்தலங்களுள்
. தெய்வமுண்டோ கேட்டுச்சொல்

மோகனம் இசைப்போம்


மலர்களிலே வண்டுவரும் மகிழ்ந்து கொண்டாடும்
மதுவருந்தும் மறுகணமே மறந்ததை ஓடும்
புலருமுன்னே பெருமரத்தில் பறவைகள் காணும்
பொழுது வெயில் பிறந்துவிட்டால் பறந்திடும் வானம்
நிலமதிலே மழைவிழுந்து நீர்நிலை தோன்றும்
நீர் நினைந்து மறுபடியும் நீலவிண்சேரும்
இலது மனம் எவரும் அன்னை இருத்திய மடியும்
எண்ணிஉள்ளம் ஏக்கமுற்றே இருவிழி சோரும்

எடுத்த அடி நிலத்தில் வைக்க உருளுது உலகம்
ஏற்றமுடன் நடைபயில இயற்கையும் மாற்றும்
நடுக் கரும்பி லிருந்தும் அடி கடித்திடச் சுவைபோல்
நானிலத்தில் வாழ்வின்முறை நன்கறிந்தாலும்
கொடுக்கும் கணம் கோபமென்றால் கொள்தடுமாற்றம்
கூடை தனைத் தலையிருத்திக் கூட்டிடும் பாரம்
விடுத்து மனம் அமைதிகொண்டால் விண்வளைவாகும்
வெளியின் அப்பால் தலைகுனிந்து வான்நிலம் கொஞ்சும்

செழுமைநெஞ்சம் சிறிதும் அன்பை சிதைப்பதுமில்லை
சிரிக்கும்முல்லை நறுமணத்தை சேர்த்திடுமுண்மை
பழுத்த பழம் பலர் வயிற்றில் பசியெழச் செய்யும்
பறிக்கவில்லை யாயின் மண்ணில் பயனற்றுப்போகும்
இழுத்ததென்ன இயற்கைகொண்ட உலகெனும்காந்தம்
இருத்தியவள் உரிமைகொண்டாள் இது எங்கள் வாழ்வும்
முழுதும் மனம் வெறுப்பதுண்டோ முயன்றிடும் வாழ்வில்
மோகனமே இசைத்திடுவோம் விடியட்டும் காலம்

சொந்தம்

உள்ளத்தை ஏன் உள்படைத்தனை சக்தி - அதில்
உள்ளதென் னெனத் தெளியவில்லையே புத்தி
அள்ளுவதென் தள்ளுவதென் அறியா - நானும் 
ஆசையிற்பல் லாண்டு வாழ்ந்தனன் சொகுசா 
கொள்ளென் றிவைகள் நீ கொடுத்தனை சக்தீ - நான்
கொட்டியதைக் கோர்த்தளித்திட்ட புத்தி
நள்ளிரவோ கண்மறைத்திடக் காப்பாய் - என்
நாளும் அன்பினில் புன்னகை பூத்திடுவாய்

சொல்லெடுத்ததை ஆக்கிவைத் திடசெய்தாய் - அதைச்
சொந்தமென்றிவன் சொல்வது மில்லை அறிவாய்
நெல் வயல் கொள்ள விதை விதைத்தவன் பின்னே - அங்கு
நின்றசை கதிர் நீபடைத்ததென் றுணர்வான்
நல்ல தென்றவை நினைவில் தந்தனை கருவாய் - அதை
நானிலமதில் நானளித்தது பொதுவாய்
இல்லை யென்றிவன் ஆவதுமோர் காலம் அப்போ
எவர் எதைக் கொளக்கூடுமோ இப்போதும்

கற்றதென்னவை காலம் தந்திட்ட பாடம் - அதில்
கற்பனைகளும் காணும் வண்ணங்கள் பூசும்
நற்பணியென நான்நினைத்தது தமிழே - இந்த
நட்சத்(தி) ரங்களைத் தொங்கச் செய்தனன் அழகே
பற்றி மெய்யினில் தீ பரவிட ஓர் நாள் - அன்று
பற்றும் அன்பெனும் பாசம் பொய்த்திடும் போமாம்
உற்றதொன்றிலை உலகம் மறத்தல் வாழ்வே - என்
உள்ளம் கொண்டவை மறைவதில்லை வாழ்வே!

வந்துமெய் விழும் பூச்சரங்களைக் கொண்டேன் - பக்கம்
வைத்தபின்னொரு புன்னகைகொண்டு நின்றேன்
அந்தமென்பது யாவரும் கொள்ளும் காலம்- அதில்
யாக்கை இன்பமும் கெட்டு நொந்துடல் வீழும்
வந்துமென் விதி நெய்விளக்கினை ஏற்றும் - அதில்
வைத்த மென்விரல் சுட்டதென்றுள்ளம் வேர்க்கும்
சிந்து கொண்டிசை பாடுவர் குரல் கேட்கும் - மனச்
சித்திர உணர் வெங்கிருந் ததைக் கொள்ளும்?

கல்லெடுத்தவன் சிலைவடித்திடக் காண்போம் - நம்
கற்பனைகளும் சிறகடித்திடும் காலம்
நன்னினைவுகள் கொண்ட துள்ளமும் காணும் - விதி
நயனமென் னிமைவிரித் ததனையும் பார்க்கும்.
அல்லல் கொண்டலலை மேனி கணக்குப் பார்க்கும் - அதில்
அன்பு கண்டவர் விழி துளிகளை ஊற்றும்
இல்லையென்பது இறுதிப் பக்கம் சேரும் விதி
ஏட்டில் முற்றுமென் றிட்டொரு புள்ளி மூடும்.

ஏன் மனதே தொலைந்தாய்


மாமரத்தில் துங்கும்கனி மஞ்சள் வெயில் மாலையிருள்
மல்லிகையைத் தொட்ட தென்றல் மாறிவிடாதோ
கா மலர்ந்த பூவைவிட்டுக் காற்றினித்த கனியணைந்து
காணும் மணம்காட்டிடையே காவிவராதோ
தேமதுரக் கூட்டில்நிறை தேன் வழிந்தே ஊற்றுதெனத்
திங்கள் ஒளி காட்டுங் கவி தேனழையாதோ
பூமதுவைத் தேடு தும்பி புன்னகைக்கும் பூவைவிட்டு
போம்பழத்தி னூடுதுளை போடுதலேனோ

நானழுதும் நடைபழக நாடு ஒருதேசமில்லை
நாலனிலமே காடுஎனில் நலிந்திடும் தூக்கம்
கூனெழுமோர் விழி புருவங் கொண்டு கணை எய்பவளை
கொல்ல வருஞ்சேதி கண்டு கூடுது ஏக்கம்
கோனெழுந்து நடைபயிலக் கோடிஉயிர் போகுமெனில்
கொள்ளுவதென் நீதிதனும் கொண்டதோ தூக்கம்
வானெழுந்த மேகமென வாழ்வில்பெருஞ் சுதந்திரத்தை
வந்துவிதி மாற்றும்வரை வார்த்தையில் தேக்கம்

பாவெழுதிப் பாடும்வரி பாரில் ஒருமாற்றமில்லை
பாவம் வளர்ந் தோங்க மனம் பட்டது தாக்கம்
தீவிழியில் தோன்றும் வகை தினகரனினொளி குறைந்து
தேகமதை தீய்க்கும் சுடர் தெரியுது ஏற்றம்
ஓவெளியில் கால்நடந்து உற்றவழி காணும்வரை
உள்ளமதில் தேன்கனிந்து ஊற்றிடும் வாழ்வும்
மாவிலங்கு தானொடிந்து மங்கைமனம் தான்குளிர்ந்து
மானமுடன் வாழும்வரை மறைநிலா மேகம்