Sunday 5 July 2015

இன்றைக்கும் வேண்டும் இது

..........
மலை மேவும் காற்றே நில் மகிழ்வான வாழ்வுக்கு
மனிதர்க் கின்றெது வேண்டும் சொல்லு
கலையாம் நற்றமிழ்சொல்லிக் கனிவான தமிழ்தன்னைக்
காதல்செய் அதுவேண்டுமின்று
வலை கொண்ட மீன்போன்று வந்தாடும் விண்மீன்காள் 
வானத்தில் நின்றெம்மைக் கண்டீர்
கலைசிந்தும் சமுதாயம்காணும் இன்றின்னல்கள்
கலைந்தேக எதுவேண்டும் இன்று

மலை போலும்திடமான மனிதர்காள் மதிகொண்டே
மண் காக்க வேண்டும் எழுந்தின்று
தலைபோகும் நிலையின்றித் தமிழினுயர்வான தரம்
தனைக் கொள்ள இயல் வேண்டும் இன்று
இலையோடு தலையாட்டும் இளம்பூவின் கிளைமரமே
எதுவேண்டும் தமிழ்வாழ `இன்று
குலைவாழை பழம்தந்து கொள்ளும் ஓர் வாழ்வோடு
குலம்வாழத் தனைஈயும் அன்பு

சரிந்தாடும் பூவேஉன் சதிராட்டம் அழகேதான்
சரிசொல்நீ் எதுவேண்டும் இன்று
புரிந்தாற்றும் செயலோடு புயலாக வேகத்தில்
பூந்தமிழ் காத்திடவும் சொல்லு
கரிவானில் உலவுமொளி நிலவே ஓர்மறைமேகம்
கறைகொண் டுன்முன்னாலே வந்தும்
பரிவான ஒளிகொண்டாய், பழந்தமிழ் மாந்தரினம்
பிழைத்தேக எதுவேண்டுமின்று

களிகூரும் மக்களினம் கையிற் செங்கோலுடனும்
காக்கும்நற் காவலனே வேண்டும்
வெளிவான மென அன்பு விரிகின்ற புகழோடு
வரவொன்று நலமாக வேண்டும்
எழும்வானச் சுடரே உன் இளங்கதிரோ அனல் பொங்க
எதுவேண்டும் இன்றேநீ சொல்லு
மொழிவாழ இனம்வாழ முழுவாழ்வும் அறமோடி
முடிவொன்று பெறவேண்டும் கொள்ளூ

குதித்தோடும் ஆறேநில் கொட்டருவியாகினாய்
குமுறுவாய், எம்வீழ்ச்சிகண்டு
புதிதாகச் சொலவுளதோ? - பூமிக்குள் தமிழ்வெல்லப்
போதுமோர் பலம் கொண்டஅரசை
அதிகாரம் இறைமைகொள் ஆட்சியெனும் வழிசெய்து
அவர்மண்ணைக் காக்கும்வகைசெய்யும்
நதியாகப் பொங்கிவரும் நிலமோடும் வெள்ளமென
நெஞ்சமதில் பொங்குணர்வு தேவை

No comments:

Post a Comment