Sunday 5 July 2015

வீடு


குச்சி வாயில் கொண்டுசெல்லும்
கொக்கின் வண்ணப் பட்சியே
இச்சை கொண்டு நீபறந்தும் 
எங்கெ டுத்துப் போகிறாய்
துச்ச மானிடத் தில்வந்த
தோர் சிறுத்த மானிடா
குச்சிவீ டொன்றாக் கவெண்ணிக்
கோல மீதைக் கொண்டனன்

பச்சை நீள் மரக்கிளைக்குள்
பார்த்துக் கூடு கட்டினால்
உச்சி வானெ ழும்மழைக்கு
ஊற்றும் நீரென் செய்குவாய்
நிச்ச யமென்குஞ் சினுக்கு
நேர்வ தென்றோர் தீதில்லை
அச்ச மோஎமக் கொன்றில்லை
ஆவ தென்னி யற்கையால்

விட்டுப் பேய்மு ழக்கமின்னல்
வீசும் வேகக் காற்றெழில்
தொட்டு யாவும் கீழ்விழுத்தும்
தோன்ற வில்லை யாசொல்லாய்
கட்டி வீடு வைத்திருக்கும்
கார ணத்தில் சொல்கிறேன்
விட்டு வாவுன் கூட்டைநீயும்
வீட்டி னுள்ளே கட்டலாம்

குட்டி யாய்சி றைகளிட்டுக்
கொண்ட தோஉன் இல்லென
பட்டமும் கொடுத் துள்ளேயே
பாதி நாட்க ழிக்கிறீர்
வட்ட மாதிசை பறந்தும்
வாழ்வு கண்டு சொல்கிறேன்
மட்டமாய் உள்வாசல் பூட்டி
வாழும் ஈன வாழ்க்கையாம்

சுட்ட செங்கல் லையடுக்கி
சுற்றி நீயும் கட்டுவாய்
சொந்த மென்ற ரற்றியீது
சொர்க்கமென்று துள்ளுவாய்
பட்டு மாது யர்பெருத்தும்
பார்ப்ப தென்ன வாழ்வினில்
விட்டு நாம் வெளிப்பறக்கும்
வீர வான்சு தந்திரம்

எட்டுமா என்றே நினைத்து
எண்ணிப் பார் இப்பூமியில்
சட்ட மாமிறை வகுத்த
சாத்தி ரங்கள் மீறுவாய்
விட்டு நீநினைத் தவுந்தன்
வேட்கை யெண்ணி ஓடுவாய்
கொட்டும் தேன்சு வைப் பழங்கள்
கொள்ளும் இந்தப் பூமியில்

சுட்டுமா விலங்கு மீனை
சுத்தமின்றி உண்கிறாய்
கட்டியெங்கும் மேனி போர்த்துக்
கள்ள நெஞ்சம் கொண்டனை
துட்டுப் பொன்பணம் மென்றெண்ணித்
துக்கங் கொண்டு காண்கிறாய்
தொட்டு யார்பொருள் கொண்டாலும்
தீண்டிக் கொன்றும் கொள்கிறாய்

வெட்ட வான்வெளிக் குள்நீந்தும்
வித்தை கற்றோம் எம்மிடம்
சுட்ட வெண்மைச் சங்குபோலும்
தூய்மை யுண்டு கண்டுகொள்
நட்டமா யொன்றென் றிங்கில்லை
நாம் இயற்கைத் தோழர்கள்
விட்ட வான் வெளிக்குள்நீந்தி
வாழு மின்பப் பட்சிகள்

No comments:

Post a Comment