Sunday 5 July 2015

அருள் கொடு அன்னையே

தொழமன மதில்நிறை துணிவெழ அருள்கொடு
துணையிரு பெருஒளியே
குழலிசையென மனம் கொளும் உணவினிதுற
குரல்கொடு நிறையெனவே
வழமையென் றருகினில் வரமொடு வரவெடு
வழிதரும் மனதுறைவே
முழமென உயரந்திட முடிவென வழுகிடும்
முயற்சிகள் நலம்தரவே

உளமதில் அருளுரை உயரிடம் தருகுவை’
உதவியில் பெருஒளியே
இளமையின் வகை மனம் இருளகன்றிடச் சுகம்
இலங்கிடக் கொடுவரமே
குளமதில் விரிஅலை குதித்திடும் தொகையெனக்
கொடு கவி கவிகவியே
மளமளவென வரும் மதியிடை உனதுசொல்
மடைதிற நதி் யெனவே

கருவெழ உயிர்கொடு கவிதைகள் பொழிமழை
கனமெழப் பெருங் கடலே
தருவதில் குருவிகள் தருமிசை தனில் குயில்
தரமென இனிதுறவே
தருவன மதில்நிறைந் தருவன கனி ச்சுவை
தருமே ஒவ்வொன்றும் தனியே
முருகெனும் தமிழினி முயன்றிடப் பெருகட்டும்
முடிவிலை எனும் முடிவே

பலமலர் மலர்ந்திடும் பனிதொடும் அழகினில்
பளிங்கெனும் எழில்கொளுமே
உலவிடும் கதிர்தனும் உதயமென்றெழுகையில்
உறவுகண் டிதழ்விடுமே
நிலமதில் பலவண்ண நெகிழிதழ் மதுவொடு
நிலைகொள்ளு மதுவெனவே
கலகல எனப்பொலி கவிதைகள்தனில் மொழி
கவினுறத் தருகுவையே

No comments:

Post a Comment