Sunday 5 July 2015

இது வாழ்வாமோ

பெருமசைவு காணுமுயர் பரவும் விரிவானமதில் 
பிறழ்வு பிழையிலாது சுழல் உலகாமே
தருமெரிகொள் வானஒளி தனையுறவு மோகமதில்
தலைசுழலத் தான்திரியும் புவிமீதே
கருகுமுட லாகும்வரை கரைகடந் துலாவலின்றி
கருதும் பிழையான வழிதிரியாதே
செருகும் மரமீதில்கொடி, சிலமலரைத் தாங்கும் சுனை
செழிப்புற வென்றாகத் துணை தருவாளே

பருவ அழகான மகள் பாதிநடு இராவுதனில்
பல நகைபொன் னானவிதம் புனைந்தாடி
தெருவில்நடைபோடப் பயம் மனதிலுருவாகும் நிலை
நிகழும் வரை ஏதுமில்லை சுகவாழ்வே
தரும்வலி கொன்றேமகிழ்வும் தொலையப் பிணமாக நடை
தலைமுறை கண்டே அசைந்து திரிவோரை
புருவம் வளைத்தே எமதின் புனர்வெழவும் தேசமதில்
புதுவகையென்றாக வாழ்வீவாரோ

உருவெடுத்தே ஆழியிடை உலவுமலை மீதலையும்
ஒருபடகிற்கான வழி கரைகாண
கருமை கொளும்வானம் திசை காணும்நிலை போய்மறைய
கலங்கரை ஒளியாயிருந்து காப்பாளை
தெருவிலிடும் மாவலிகொள் உரம்கொள் ளிரும்பாயிடினும்
துருபிடித்துமே யழியும் விதமின்றி
தருமெமது யாக்கைதனைத் தவறியொரு பாசவழி
திரியும் நிலை தானழித்துத் திறனாக்கு.

பெருவெளி விநோதமெனச் செறிசுழல்பல் கோளங்களும்
பழுதிலை யென்றோடும் இயல்உருவாக்கி
கருவி இயல்பானததில் கருதிடும் பிரமாண்டவழி
காணும் உச்சவான் வெளியில் உறை சக்தி
கருவிலிணைந் தோர் துளியில் காணும்பல கோடிகளில்
கடையிலிருந் தோர் அணுவை தெரிந்தோட்டி
வருவதிலொன்றாக்கி யதை வனிதைமலர் உதரமதில்
விரியுலகில் லொன்றாக உயிர் தந்தாளே

மருகி மனமோ வெருகி அருகி மகிழ்வான தெரி
மலை வருமா தீக் குழம்பின் வகையானால்
உருகி நிலையோ குலைந்து உயர்விழந்து உயிர்கலைந்து
உருவம் அழிந்தான தோர் ஓவியம்போல்
பருகி உடல் வேர்வைவிட்டுப் பலதுமுண்டு போய்கழிந்து
பாசமெனும் பேயின் பின்னால் அலைவோனை
கருவிலன்னை யானவளும் கடைவழியில் மாதவளும்
கவலைவரும் வேளை மட்டும் புதல்வோரும்

மனதில் நினைந்தழுவதன்றி மறு கணத்தில் மறந்தவரும் மயங்கி இந்த உலகமதில் மனம் கொண்டே
சனமவர் கொள் கூடுகளில் சளியும் மணவேர்வை கசி
சதிரமதில் மோகம்கொண்டே உழல்வோரை
சினமுடன் தீ அணுகிவர சிறுமைஅழிந்தணுகுமிடம்
செழுமிளந்தீ பெருகி உடல் கரியாகும்
தனமெனப் பேராசை கொண்டு தனை அழைந்தும் வேகங்கொண்டு
தரணியிடை உழலுவதும் ஒருவாழ்வோ?

No comments:

Post a Comment