Sunday 5 July 2015

சிரித்தவள் சினந்தாள்


..............................................
அழகிய தோர் இளம்மாலை 
. அசைந்தது தென்றலில் சோலை
பழகிய முகம்மதி, விழிகள் 
. பனிநீர்த்துளிசில வீழ்த்தி
அழுதிடும் உணர்வை நிறுத்தி 
. அருகினில் வந்தாள் ஒருத்தி
எழுதிட வகையது தெரியேன்
. இளமகள் வதனமோ ஒருதீ

தமிழினி கவிதரும் கலைஞா
. தருங்கவி அழகெனில் சரியா
அமிழ்தென இனிதது என்றேன்
. அகங்கொளப் பெருஞ்சுவை கொள்ளேன்
தமிழினி கவிதை யைக் கண்டால்
. துயரறும் கவலைபோ மென்றேன்
குமிழிதழ் கேலியில் முறுக்கி
. கொடு(ங்)கவித்தேன் கொடு என்றாள்

நறுஞ்சுவைக் கவியொன்று கொடுத்தேன்
. நெளிகுழல் நங்கையும் கண்டாள்
இறுகினவோ முகம் பார்த்தே
. இனித் தமிழ்மெல்ல போம் என்றாள்
குறுவிழி உதிர்த்தவள் நின்றாள்
. கோபமென் றுணர்ந்திடை கேட்டேன்
துறுதுறு எனும்விழி ஈரம்
. தோன்றிய தெதன்விளை வென்றேன்

தமிழினி அமுதமே என்றார்
. தருமொளி நிலவென பகன்றார்
உமிழிதழ் நீருடன் உதிரம்
. உதைப்பவர் விளைவெழ உவர்க்கும்
குமிழலை போலொரு கணமே
. கொண்டொரு வாழ்வுடன் முடியும்
தமிழ்மகன் விரமும் புகழ்ந்தார்
. தனித்திடும் குணம்சொல மறந்தார்

உலகினில் எத்தனை தமிழாம்
. உயர் அரசிருந்தன அறிவாய்.
உலவிடும் தென்றலும் வீச
. உறுமின மூவகை கொடிகள்
பலமொடு தமிழ்நிலமாளப்
. பறந்தன வேங்கை வில் மீன்கள்
கலக்கமு மடையாக் குடிகள்
. களித்தன நடைமுறைகண்டோம்

பலமதை தமிழனின் றிழந்தான்
. படையணி ஆளுமை நலிந்தான்
குலமதைக் காக்கவும் இயலாக்
. கொடுமையுள் தவித்திடும் நிலைகாண்
பலமதும் ஒற்றுமை ரூபம்
. பலரும் ஒன்றாகிடக் காணும்
விலகியும் இதுநிலைசொல்லா
. விரும்பிய கவி தமிழ் காவா

விடுகதை யிலைத் தமிழ் வாழ்வு
. விரிந்திடும் தொடர்கதை யல்ல
எடு கையில் எழுதிடும்கருவி
. எதுகையும் மோனையும் பெருகி
விடுதலை அதுவின்று வேண்டும்
. விரும்பிய சுதந்திரம் வேண்டும்
தொடு கவி பலதென இன்று
. துளைத்திடும் மனமெனும் இரும்பு

கொடு உணர்வெனும் குறிகொண்டு
. குலைந்திட வன்செயல் இன்று
வடு பல நெஞ்சினில் உண்டு
. வரையட்டும் மனம் அதன்பண்பு
நெடும்பல வரிகளில் அன்பு
. நிலைத்திடக் கவி செய்து தள்ளு
அடுக்கி வை அடுத்தவர் கண்டே
. அணுகவென் றொற்றுமை கொண்டு

தடதட தடவென நடந்து
. தமிழ்நிலம் காண் உளம்கொண்டு
விடவிட விழுவது என்று
. விதியிலை விரைந்திதைச் சொல்லு
படபட இதயமும் துள்ளிப்
. பருகிடும் தமிழ்க் கவி அள்ளிக்
கடமைகள் தனில் வெடிகொளுத்து
. கலங்கா நில் விடிவுண்டு 

No comments:

Post a Comment