Sunday 5 July 2015

கவிதை என் மூச்சு


தமிழ் அன்னை மடிமீது தவழ்கின்றவன் 
தமிழ் என்னும் மதுவுண்டு மகிழ்கின்றவன்
அமிழ்தென்னும் சுவை கண்டு திளைக்கின்றவன் 
அழும்போதும் இசைசந்தம் குரல்கொண்டவன்
குமிழ்வண்ண ஒளிவானில் கதிர் போலுமே
குறைவற்ற வகை வாழ்வில் அருள்கொண்டவன்
சிமிழ் கொண்ட கலைவண்ணம் வரை ஓவியன்
சிலை யாக்கும் சிற்பிகை உளி போன்றவன்

மகிழ்வென்ப துளம் கொள்ளக் கவிவந்ததா
மனம் கண்ட கவியாலே மகிழ்வானதா
அகில் கொண்ட தீயாலே மணம் வந்ததா
அதுவந்த பொழுதோடு கவிவந்ததா
துகில் சூழும் இளமேனி தமிழ் என்பதா
துள்ளும் நல்லிசை சந்தம் கவிகொண்டதா
முகில் வானம் என நெஞ்சம் விரிகின்றதா
முகிழ்கின்ற கவிதான் என்மூச்சானதா

நலங் கொண்டு மனமிங்கு பூக்கின்றது
நகர் காற்றில் இழைந்தின்பம் தருகின்றது
இலங்கும் அக் கதிர் வந்து பயிர் மீதிலும்
இலை கொண்ட தரு வாழ்வை வளமாக்குவான்
வலமென்றும் மிடமென்றும் வழிகண்டவன்
வரும் பாதை ஒளிதந்து இனங்காட்டுவான்
குலம் வாழக் கொடிமீது குணம் தந்துமே
குறும் வாழ்வில் மூச்சாக உயிர்காப்பவன்

கவிதை யென் உயிர்மூச்சுக் காற்றானது
கலைவாச மதுகொண்டு திகழ்கின்றது
புவிமீது வருகின்ற உயிர்கொள்பவன்
புரிகின்ற செயலுக்கு தடைசெய்தனள்
அவிழும் மென்முகை போலுமருள் கொண்டவள்
அகம்மீது பெரும்சக்தி அளித்தாளவள்
குவிகின்ற வான்கீழே குடிகொண்ட என்
குறு மூச்சை கவிதைக்குள் இழைத்தாளவள்

No comments:

Post a Comment