Sunday 5 July 2015

இயற்கையின் கோரம்


தேனாம் தமிழ் சொல்லித் தந்தவள் - அந்தத்
தென்றலினால் மெய்யைத் தொட்டவள்
வானாய் விரிதென்னைக் காத்திட்டாள் - எழில்
வண்ண மலரென வாழ்விட்டாள்
மீனாகத் துள்ளும் இளமையும் - அலை
மேவும் கடலிற் பழமையும்
தானாகக் கொண்டே கவர்ந்திட்டாள் - இந்த 
தாரணி கொண்ட  இயற்கையாள்

வீணாய் பொழுதிடா ஓடினேன் - என்ன 
விந்தை என்றேமடி தூங்கினேன்
காணா எழில்கண்டு போற்றினேன் - இரு 
கண்கள் போதவில்லைத் தூற்றினேன்
பேணாதெழில் கொண்ட பூவனம் - பல
பேச்சை ஒலித்திடும் பாறைகள்
நாணல் வளைந்திட நான்தொட்டே - அங்கு
நாணும் செடிகண்டும் வாழ்த்தினேன்

ஆணாய் உரங்கொண்டு ஓடினேன் - அந்த
ஆசையில் போதைகொண் டாடினேன்
கோணாதென் மீதின்பம் கொட்டினாள் - குளிர்
கூதலிடப் பனி தூவினாள்
தூணாய் நிலைத்திட்ட குன்றுகள் - அதை
தொட்டமுகில் கொண்ட தூக்கமும்
காணாத இன்பங்கள் காட்டின - எந்தன்
கண்ணை  கிறங்கச் செய்தோடின

நன்றே எனப்புகழ் நல்கினேன் - மது 
நாவிலி னித்திடப் பாடினேன்
தென்றல் மலர்நீவ சில்லிட்டேன் - மலர்
தேனிதழின் எழில் கண்ணுற்றேன்
மன்றமதில் கவி சொல்லிட்டேன் - இவள் 
மங்கை இயற்கையைப்  பின்னிட்டேன்
சென்றதுகாலம்,ஆ... வீழ்ந்திட்டேன் - அதோ 
சற்று விதிகள் புரிந்திட்டேன்

சீறி அடித்ததோ ஓர்புயல் - அதில்
சீற்றங் கொண்டோடிய நீர்வெள்ளம் - விதி
மீறி இடித்தன மேகங்கள் - அதில்
மீண்டும்மீண்டும் பல மின்னல்கள் 
ஊறி மணத்ததோ ஊர்நிலம் - அங்கு 
ஊற்றிவழிந்தது போம் வெள்ளம் - அதில்
நாறி மணத்திட்ட பூக்களும் - ஒரு
நாளில் குலைந்து கிடந்தன

மெல்ல இடித்தது யார் விதி - காண
மின்னி வெடித்ததென் வஞ்சனை
சொல்லில் பொழிந்தன பொய்மழை - அதைச்
சுற்றிப்  படர்ந்ததோ ஊழ்வினை
மல்லிகைப் பந்தலைப் போலவே - அந்த
மாயவிதி வாழ்வை சாய்த்திட
நல்லெழில் எங்குமே காணிலேன் - இந்த 
நானில வாழ்வுக்கா ஏங்கினேன் ???

No comments:

Post a Comment