Sunday 5 July 2015

மோகனம் இசைப்போம்


மலர்களிலே வண்டுவரும் மகிழ்ந்து கொண்டாடும்
மதுவருந்தும் மறுகணமே மறந்ததை ஓடும்
புலருமுன்னே பெருமரத்தில் பறவைகள் காணும்
பொழுது வெயில் பிறந்துவிட்டால் பறந்திடும் வானம்
நிலமதிலே மழைவிழுந்து நீர்நிலை தோன்றும்
நீர் நினைந்து மறுபடியும் நீலவிண்சேரும்
இலது மனம் எவரும் அன்னை இருத்திய மடியும்
எண்ணிஉள்ளம் ஏக்கமுற்றே இருவிழி சோரும்

எடுத்த அடி நிலத்தில் வைக்க உருளுது உலகம்
ஏற்றமுடன் நடைபயில இயற்கையும் மாற்றும்
நடுக் கரும்பி லிருந்தும் அடி கடித்திடச் சுவைபோல்
நானிலத்தில் வாழ்வின்முறை நன்கறிந்தாலும்
கொடுக்கும் கணம் கோபமென்றால் கொள்தடுமாற்றம்
கூடை தனைத் தலையிருத்திக் கூட்டிடும் பாரம்
விடுத்து மனம் அமைதிகொண்டால் விண்வளைவாகும்
வெளியின் அப்பால் தலைகுனிந்து வான்நிலம் கொஞ்சும்

செழுமைநெஞ்சம் சிறிதும் அன்பை சிதைப்பதுமில்லை
சிரிக்கும்முல்லை நறுமணத்தை சேர்த்திடுமுண்மை
பழுத்த பழம் பலர் வயிற்றில் பசியெழச் செய்யும்
பறிக்கவில்லை யாயின் மண்ணில் பயனற்றுப்போகும்
இழுத்ததென்ன இயற்கைகொண்ட உலகெனும்காந்தம்
இருத்தியவள் உரிமைகொண்டாள் இது எங்கள் வாழ்வும்
முழுதும் மனம் வெறுப்பதுண்டோ முயன்றிடும் வாழ்வில்
மோகனமே இசைத்திடுவோம் விடியட்டும் காலம்

No comments:

Post a Comment