Saturday 26 September 2015

பாசக் குருவிகள்!


*****************
நேசங் கொண்ட குருவிகளே
. நீளப் பறக்கும் வானத்தில்
தேசங்கொண்ட நிலையென்ன
. திரும்ப வந்தால் கூறுங்கள்
வாசங் கொண்டு மலரங்கே
. வண்ண இதழ்கள் விரிப்பதிலை
பேசுங்கிளியும் கிள்ளை மொழி
. பேசா திருக்கு தென்றார்கள்

வீசும் தென்றல் விளையாடா
. வேப்ப மரத்துக் குயில் பாடா
நாசம் எல்லை மீறியதாய்
. நாட்டில் மக்கள் வாழுகிறார்
கூசுங் கொலைகள் களவோடு
. குமரி மேனி கலைத்தாடும்
நீசம் எல்லை காணுவதால்
. நிலவேநீயும் வருவதுண்டோ

மாசும் கொண்டோர் மனமெல்லாம்
. மருகிப் பிறழ்வாய் மனத்தாகம்
பூசும்முகங் கொள் வேடங்கள்
. புரிவோர் மலியப் பொருளுண்டோ
காசுக் கடிமைக் கயவர் கைக்
. காணும் பொம்மை போற்சிலரும்
நேசம் கொள்ளும்மன மின்றி
. நிற்கும் இடமும் மாறியதென்

தேசங்கெட்டே காமுகர்கள்
. திக்கில் எங்கும் திகழுங்கால்
மாசற்றோர் தன் மேனிதனை
. மறைத்தே கரியை முகம்பூசி
வேசம் மாற்றி வெறியோடு
. விலங்காய் திரியும் கயவர் கை
நாசம் தவிர நடைபோடும்
. நம்மூர்ப் பெண்கள் காண்பாயோ

பூசி மஞ்சள் நீராடும்
. பெண்ணின் வதனம் பங்கயம்தன்
பாசிக் குளத்தில் காணும் போல்
. பரந்த கூந்தல் அலையாட
நேசிக்கும் தன் பதியெண்ணி
. நீரின் தழுவல் நாணித்தான்
கூசிச்சிவந்த கன்னத்தில்
. கொய்யா தெடும் கிளி மூக்கு

வாசப் பூவின் மிருதுவினை
. வளைத்தே எடுத்த வாய்மொழியின்
பாசப் பொழிவில் பைங்கிளியின்
. பழமைத் தமிழைப் பயமின்றி
தேசம் மீட்ட திருமகனும்
. திங்களொளியில் கைகோர்த்து
பேசும் போது அச்சமின்றிப்
. பக்கம் இருத்தல் எக்காலம் ?

**************************

No comments:

Post a Comment