Saturday 17 October 2015

ஆட்கொள்வாள் எம்மை

நீயிருந்தாய் என்னருகே
. நினைவெழுதும் கற்பனைகள்
. நெஞ்சிலிசை கொண்டினிமைகாணவே
தாயிருந்தால் காணும் சுகம்
.  தந்தவள் நீ தந்ததனால்
.  தானுமெழில் கொண்டகவிகூறவே
போயிருந்தால் கோவில்சி.லை
. போட்டுடைக்க மண்கலயம்
. போகமென்னுமாயைகொண்ட தேகமே
வாயிருந்தால் வாழ்ந்திடலாம்
.  வாடி நின்றால் தேய்ந்திடலாம்
.  வாழ்க்கைகொண்ட இந்தநிலை கண்டுமே

சேயழுதால் தாயணைக்கும்
.  சேர்ந்தகொடி மரமணைக்கும்
.  சீறிவரும் மாநதியு,மோடியே
தூய கடல் சேர்ந்திணையும்
.  தூக்கம்விழி கொண்டணையும்
.  துன்பம்வந்து வாழ்வணைக்க முன்னரே
தேயுங் குறைத் திங்களெனத்
.  தோன்றிடாது வாழ்வுதனை
.  தீயவழி மீண்டு நலம்வாழவே
போயணைப்பாய் உள்ளமதில்
.  பூத்த ஒளி பொலியும்வண்ண
.  பேரொளியாம் ஞானசக்தி ரூபமே

கானகத்தில் காணும்மரம்
.  காற்றடிக்க ஊதுமூங்கில்
.  காட்டருவி வீழுமெழில் கூட்டியே
வானகத்தில் வெள்ளிசிரித்
.  தாட அயல் வெண்முகிலில்.
.  வீழ்ந்துறங்கிச் செல்லும் நிலா கூடவே
மீனகத்தில் கொண்ட திரை
.  மேவிஎழுங் காற்றின்சத்தம்
.  மீறி எழும் கடல்தனையும் ஆக்கியே
தானகத்தில் எம்மையெண்ணித்
.  தந்தவுடல் கெட்டுமென்ன
.  தகிக்கவைத்து ஆட்கொள்ளுவாள் எம்மையே

சக்தி என்று சொல்லுவோம்

சக்தி என்று சொல்லுவோம் சரித்திரத்தை வெல்லுவோம்
பக்தி கொண்டும் ஆடியே பரத்தி லின்பங் காணுவோம்
எக்கதிக் கென் றாகினும் இயற்கை தந்த தாயவள்
சக்கரம் கை சுற்றுவாள் சந்ததிக்கென் றாகுவோம்

செக்கிழுத்த மாடென சுழன்றுலாவி வாழ்விலே
சக்கையாகிப் போய்விடா சக்திபெற்று வாழுவோம்
சுக்குநூ றுடைந்திடும்  சுந்தரப் பொன்வெள்ளிகள்
எக்கனல் பொறித்தழல்  ஏகுமந்த வான்வெளி

பக்குவத்தைக் காத்துமே பனிக்குளிர்ந்த சூழலில்
உக்கிரத்தை கொண்டொளி ஒளிர்ந்திடும் வெம்சக்தியை
விக்கினத்தைப் போக்கிடு விரைந்து வா தமிழ்படும்

துக்கமும் துயர்கொள்ளும் துடிப்பினை நிறுத்தியே

மக்களாம் பழங்குடி மாந்தர் கெட் டழிந்திடா
செக்கச்செந் நிறம்பட சிந்தை யேங்கிச் செத்திடா
வக்கணத்தில் சூழ்ந்தெமை விசக் கொடும்பல் பாம்புகள்
எக்களித்துக் கொத்தியே இடர்படுத்தும் பூமியில்

நக்கவும் இனித்திடும் நல்லதேன் சுவைப்பென
மிக்க அன்பு பொங்கிட மேன்மை கொள்ளும் வாழ்வு தா
தொக்கி வான் சுழல்புவி சுதந்திரத்தில் வாழ்ந்திடச்
சிக்கல் தீர்த்துச் சக்தியே, செய்நலமென் றாடுவோம்

பெண்ணின் சக்தி


காலையிலே பரிதிவட்டம் அடிவான்தோன்றக்
கலகலத்தே யாடும் மரக்கிளையின் இலைகள்
ஓலைஇழை தென்னை தருகிடுகால் வேய்ந்த
ஒர்குடிசை யோரத்தில்  நின்றேன் யானும்
சோலைமலர்த் தென்றல் வரும் வாசங்கொண்டே
சுந்தரமாய் நாளொன்றின் செழித்தோர் காலை
மேலைவான் உச்சியினுக் கேறும் நாட்டம்
மெல்ல எழும் சூரியன்கொண் டெங்கும் தாவ

சேலையணி மாதொருத்தி சிறிதாம் குடிசை
சேர அயல் நின்றுவிழி சிந்தக் கண்டேன்
வாலையவள் பருவத்தின் வனப்பைக் கொண்டாள்
வாலிபனோ அவள் கணவன் வீம்பில் நின்று
சாலைதனில் போய்வருவோர் சாட்சிநிற்க
சீராக்கி சிறு பிரம்பினைக் கொண்டவள் சீண்ட
நூலையிடை கொண்டவளோ நெஞ்சம் விம்மி
நிலையிலஞ்சி தலைகுனியும் செயலைக் கண்டேன்

ஆசைகளைச் சுமந்தின்பம் தேடும் வாழ்வில்
அகத்திடையே உருவாக்கும் வேட்கைதானும்
காசைப் பணம்பெரிதென்றே கண்டே நெஞ்சும்
காணதே அன்பென்ப கருத்தில் கொள்ளா
தேசையுடை திலக நுதல் தீட்டும் மங்கை
திருத்தலங்கள்  தெய்வம் எனக் காணும்போதும்
மாசையுடை வாழ்விலந்தப் பெரிதாம் ஒளியை
மனமெண்ணி உருகிவரம் கேட்டல் வேண்டும்

தேசமெங்கள் தூயமண்ணில் தோற்கா பெண்கள்
தினமெடுத்த வாழ்வில் பெரும் திண்மைசக்தி
மோசமற முற்றும்துயர் மறைந்தே போக
முடிவினிலே வெற்றிதனைக் கொள்ளத்தானும்
வீச வருங்காற்றுக்கோர் வலிமை உண்டாம்
வெகுண்டெழவும் புயலாகும் வீரம் உண்டு
நாசமெலாம் அழிந்து பெரு நன்மைகூட
நாளுமவள் சக்தியினை வேண்டிக்கொண்டால்;

பெண்ணவளில் பெருஞ்சக்தி பிணைந்தே காணும்
பேதைகளோ தன்வலிமை தாமேயறியா
மண்ணிடையே மாகரியை ஓட்டும் பாகன்
மனதில் அவன் வலிமைகொண்டான் என்றேயெண்ணி
புண்-படவே அங்குசத்தால் குத்தும்போது
பிளிறி யதன் வேதனையைதாங்கும் யானை
கண்படவே பெண்டிர் தமை கடையில் வைத்துக்
கச்சிதமாய் தன்வலிமை கொண்டே பகன்று

வெண்ணெய் என உருகியவள் துன்பங்கொண்டு
வேண்டும் பலம் என்றெண்ணா விதியைநோகும்
வண்டதனை தாங்குமலர் வண்ணம் கொண்டே
வலிமை குன்றி உள்ளோமென் றன்னையர் எண்ண
உண்டுசெயும்மனித வர்க்க உறவைக் கொண்டாள்
ஒளியவளைச் சக்தியினை வேண்டிக் கொண்டால்
பாண்டுபல காலமெலாம் பணிந்தே நின்றார்
பாடு ஒழிந் தாற்றலதும் பெருக காண்பீர்

Tuesday 13 October 2015

காலம் வராதோ?

பொட்டுவைத்தாள் தீஎழவும் 
. புன்னகைத்தே சுட்டுவிடப்
பட்டெரியும் வீறுடனோர் 
. பாங்கு மமைத்தாள்
ஒட்டவைத்தாள் ஓருயிரை
. உள்மனதில் அன்பை இட்டாள்
கட்டி வைத்தால் காலிரண்டை
. காதல் என்றிட்டாள்
.
தொட்டுவிட்டால் தோலுணர்வில்
. சொர்க்கம் என்றே இன்பமிட்டாள்
தோளில் ஒரு மாலை யானை
. போடவும் வைத்தாள்
கட்டில் அர சேறவைத்தாள்
. கற்பனையில் மோகமிட்டே
காற்றுடனே பார்த்திருக்கக்
. கரைந்திடச் செய்தாள்
மொட்டு இதழை கட்டவிழ்த்தாள்
. முன்மதுவை இட்டுவைத்தாள்
மெட்டிசைக்கும் வண்டினத்தை
. தொட்டுண்ண விட்டாள்
திட்டமிட்டாள் தேடி வந்தே
. தேவைஎனும் போதினிலே
தட்டுமிட்டாள் தட்டில்பணி
. தக்கது மிட்டாள்
மட்டுமட்டாய் வாழ்வினிலே
. மாறி அந்தம் ஆகையிலே
கொட்டிவைத்தாள் சக்தி எனும்
. கொள்கையைக் கூட்டி
விட்டமதைக் கூடச் செய்தாள்
. விரிவானின் எல்லையின்றி
வட்டமென வான் வளையும்
. அற்புதம் செய்தாள்
கெட்டுவிடச் செய்வதென்ன
கீழ்குடிகள் காவல்கொள்வோம்
கட்டவிழ்த்துக் கண்துலங்கச்
, காணவை என்றால்
முட்டவிழி மலர வைத்தாள்
.. முன்னிருந்து ஆக்குவித்தாள்
மூவுலகும் தோற்றமெழக்
முன்னி றுத்தினாள்
வட்டமெனச் சுற்றுமந்த
. வான்வெளியின்கோளங்களை
விட்ட வழிசென்றெழிலைக்
. விழி கொள்ளுவேனோ
அட்ட திக்கும் சென்றவளின்
. ஆற்றலுடன் நானிணைந்து
ஆன இருள் தான் விரட்டும்
. காலம் வராதோ
**************

காப்பாய் தீயே

அச்சமும் கொள்ள வைத்தாய் - தேவி
ஆசை பெருக விட்டாய் - உள்ளே
நிச்சய மற்ற குணம் - கொண்டே
நீரலை பொங்க வைத்தாய் -இன்னும்
உச்ச உணர்வு கொண்டும் - என்னை
ஓடிக் கலங்க வைத்தாய் இன்னும்
மிச்சமுமுண்டோடி - தாயே
மீள அருள்கொடடி
புத்தி கலங்கி நின்றேன் - கூறும்
பேச்சில் அரற்றிக் கொண்டேன் - நின்னை
எத்திசையும் அறியா - நெஞ்சில்
ஏக்கமும் கொண்டலைந்தேன்- வல்ல
சித்திதரும் ஒளியே - என்னைச்
சேர்ந்த வாழ்வோங்க வெனக் - கண்டே
நித்தமுனைத் தொழுவேன் - அன்பை
நெஞ்சில் விருத்தி செய்வாய்
பட்டவை துன்பமெலாம் - இனியும்
பங்கு கொளாதபடி - என்னை
சுட்டபொன் போல் மிளிரச்- செய்தே
சூனியத்துள் சுழலும் - இந்த
வட்டப் புவியிடையே - வைத்தே
வாஞ்சையில் நான்முழுகிக் - கொண்ட
விட்ட பணி மறவா - தென்றும்
வீறெழும் வாழ்வு நல்காய்
இச்சையகற்றி விடு - எண்ணம்
இன்பத்தி லாழ்த்தி விடு -கொள்ளும்
பச்சை யுணர்வுகளைப் பாவம்
பார்த்தெரி அன்பைக் கொடு - என்னைத்
துச்சம் என்றே நினையா - உன்னில்
தூரம் நிறுத்திவிடா - திங்கே
கச்சிதமாய்க் கவிதை - சொல்லக்
கைகொடு காத்துவிடு