Tuesday 13 October 2015

காப்பாய் தீயே

அச்சமும் கொள்ள வைத்தாய் - தேவி
ஆசை பெருக விட்டாய் - உள்ளே
நிச்சய மற்ற குணம் - கொண்டே
நீரலை பொங்க வைத்தாய் -இன்னும்
உச்ச உணர்வு கொண்டும் - என்னை
ஓடிக் கலங்க வைத்தாய் இன்னும்
மிச்சமுமுண்டோடி - தாயே
மீள அருள்கொடடி
புத்தி கலங்கி நின்றேன் - கூறும்
பேச்சில் அரற்றிக் கொண்டேன் - நின்னை
எத்திசையும் அறியா - நெஞ்சில்
ஏக்கமும் கொண்டலைந்தேன்- வல்ல
சித்திதரும் ஒளியே - என்னைச்
சேர்ந்த வாழ்வோங்க வெனக் - கண்டே
நித்தமுனைத் தொழுவேன் - அன்பை
நெஞ்சில் விருத்தி செய்வாய்
பட்டவை துன்பமெலாம் - இனியும்
பங்கு கொளாதபடி - என்னை
சுட்டபொன் போல் மிளிரச்- செய்தே
சூனியத்துள் சுழலும் - இந்த
வட்டப் புவியிடையே - வைத்தே
வாஞ்சையில் நான்முழுகிக் - கொண்ட
விட்ட பணி மறவா - தென்றும்
வீறெழும் வாழ்வு நல்காய்
இச்சையகற்றி விடு - எண்ணம்
இன்பத்தி லாழ்த்தி விடு -கொள்ளும்
பச்சை யுணர்வுகளைப் பாவம்
பார்த்தெரி அன்பைக் கொடு - என்னைத்
துச்சம் என்றே நினையா - உன்னில்
தூரம் நிறுத்திவிடா - திங்கே
கச்சிதமாய்க் கவிதை - சொல்லக்
கைகொடு காத்துவிடு

No comments:

Post a Comment