Saturday 17 October 2015

சக்தி என்று சொல்லுவோம்

சக்தி என்று சொல்லுவோம் சரித்திரத்தை வெல்லுவோம்
பக்தி கொண்டும் ஆடியே பரத்தி லின்பங் காணுவோம்
எக்கதிக் கென் றாகினும் இயற்கை தந்த தாயவள்
சக்கரம் கை சுற்றுவாள் சந்ததிக்கென் றாகுவோம்

செக்கிழுத்த மாடென சுழன்றுலாவி வாழ்விலே
சக்கையாகிப் போய்விடா சக்திபெற்று வாழுவோம்
சுக்குநூ றுடைந்திடும்  சுந்தரப் பொன்வெள்ளிகள்
எக்கனல் பொறித்தழல்  ஏகுமந்த வான்வெளி

பக்குவத்தைக் காத்துமே பனிக்குளிர்ந்த சூழலில்
உக்கிரத்தை கொண்டொளி ஒளிர்ந்திடும் வெம்சக்தியை
விக்கினத்தைப் போக்கிடு விரைந்து வா தமிழ்படும்

துக்கமும் துயர்கொள்ளும் துடிப்பினை நிறுத்தியே

மக்களாம் பழங்குடி மாந்தர் கெட் டழிந்திடா
செக்கச்செந் நிறம்பட சிந்தை யேங்கிச் செத்திடா
வக்கணத்தில் சூழ்ந்தெமை விசக் கொடும்பல் பாம்புகள்
எக்களித்துக் கொத்தியே இடர்படுத்தும் பூமியில்

நக்கவும் இனித்திடும் நல்லதேன் சுவைப்பென
மிக்க அன்பு பொங்கிட மேன்மை கொள்ளும் வாழ்வு தா
தொக்கி வான் சுழல்புவி சுதந்திரத்தில் வாழ்ந்திடச்
சிக்கல் தீர்த்துச் சக்தியே, செய்நலமென் றாடுவோம்

No comments:

Post a Comment