Wednesday 25 November 2015

சக்தி கொடு 2





விண்ணெழுந்த புள்ளினங்கள்
. வானில் நின்று தேடும்
வீறெழுந்து மேனிசுட்ட 
. வெய்யில் மீண்டும் தோன்றும்
மண்பிறந்த மென்மலர்கள்
. மஞ்சள்செம்மை வண்ணம்
மாற்றமென் றிதழ் பிரிந்தும்
. மாலை யொன்றில் கூடும்
தண்ணலைகள் நிம்மதியைத்
. தேடியோடி மாளும்
தாங்கிடும் நீர் தாமரைக்குத்
. தந்தனத்தோம் போடும்
எண்ணவே இனிக்கு மாங்
. குயில் படித்தகீதம்
இத்தனை எழில்படைத்தாள்
. அன்னை சக்திதானும்
வெண்ணொளிக் கதிர்சிறந்து
. வானமேறக் காணும்
வீழ்ந்த சின்னத் தூறலை
. விரும்பித் தோகை ஆடும்
விண்வளை விதானத்தோடு
. வில்லின் ஏழுவண்ணம்
விந்தை காண் உன்வாழ்வு மெந்தன்
. விம்பம்கொண்டதென்கும்
பெண் குழைந்து பேச நெஞ்சம்
. பூவில் வண்டென் றாகும்.
பேதை உள்ளம் போதைக் கள்ளை
. பார்வைமொண்டு வார்க்கும்
அண்மைகண்டு திண்மைகெட்டு
. ஆணின் நெஞ்சம்வேர்க்கும்
அச்சம் விட்டு பெண்மை கிட்ட
. ஆனந்த வாழ்வேங்கும்
கண்ணில்காணும் காட்சிகொண்ட
. காலம்செய்யும் மாயம்
காதலின் இயற்கையின்பக்
. காட்சியை யும் மாற்றும்
எண்ணம்மீது வேட்கைபற்றி
. இச்சை கொண்டு பாயும்
இல்லை யென்றபோது துன்பம்
. ஏணி வைத்தேஏறும்
தண்ணலைத் தடாகத் தூடு
. தாக்கும் கற்கள் வீழும்
தன்னைமீறி நீரெழுந்து
. தன்மை கெட்டேமூடும்
புண்ணெழுந்த தாக நெஞ்சம்
. புன்மை கொண்டுவாடும்
புத்துணர்வுகொள்ளச் சக்தி
. அன்னைவேண்டு நாளும்
***********************

No comments:

Post a Comment