Wednesday 25 November 2015

தீவிழி வேண்டும்


சங்கரனின் கண் வேண்டும்
.  சற்றே இப்புவிதன்னில்
    சாம்பல் ஆக்க
பொங்கி மன வெறி கொண்ட
.   புல்லோரின் தீயமனம்
.   பொசுக்க வேண்டும்
அங்கமெலாம் நஞ்சாகி
.  அகம் வந்தே இனம் கொன்றும்
.  அடிமையாக்கி
எங்குமவர் கொடி பறக்கும்
   இச்சைகொள்வோர் கண்டுவிழி
.   இமைக்க வேண்டும்

மங்கை தமிழ்ப் பெண்ணவரை
.    மணமேடை இல்லாது
.    மஞ்சம் கொண்டே
செங்குருதி முகம் கொழிக்கச்
.    சினம் மேவும் நிலைகண்டு
.    சிவந்தே அழுதோர்
அங்கம்படச் சேறிட்டும்
.    அவர்பெண்மை இழிந்தூற்றி
.     அவலம் செய்தோர்
எங்குளரோ அங்கவர்முன்
.     என்விழியும் திறந்தனலை
.     இறைக்க வேண்டும்

வந்துபிறந் தோம்வாழ்வில்
.    வகையறியாத் தவழ்ந்தோடி
.    வீழ்ந்தே எழுந்தோம்
அந்தோ எம்அன்னைகரம்
   அணைக்க மனம் மகிழ்ந்தேநல்
.   அன்பைக் கண்டு
விந்தை யுலகென்றோடி
.   வியந்தே அறிந்த நம்
.   வாழ்வை யின்றோ
இந்தவகை தீயவரும்
.    எடுக்க அவர்மீதுகனல்
.    எறிய வேண்டும்
 
வஞ்சகமாய் வந்து தமிழ்
.   வரலாற்றைத்  திரித்தெழுத
.   வழியும் கோலி
கொஞ்சி மகிழ்ந்தே குலத்தை
.    கொடியறுக்கும் விதமாகக்
.    கெடுக்க வெண்ணி
நஞ்செடுத்தே அமுதமதில்
.    நடுவூற்றிக் கலப்தென
.    நல்லோர் தூங்க
தஞ்சமென்று இருந்தோரைத்
.    தான்கருக வைத்தோரும்
.    தகிக்க வேண்டும்

சிம்மாசனம் ஆட்சி
.    செங்கோலும் திறைசேரி
.    செம்மை வாழ்வு
அம் மாபெரும் படைகள்
.    அலங்காரம் அந்தபுரம்
.    ஆடும் நங்கை
செம்மாதுளை பிளந்த
.     சிரிப்போ நகைசிந்தும்
.     சிறுவர் கூட்டம்
இம்மா சுகம் கொண்டே  
.      இருந்த இனம்அழித்தோர் கண்
..     டிமைக்க வேண்டும்

No comments:

Post a Comment