Wednesday 25 November 2015

மனம் செல்லும் தனி வழி


பனிவிழும் மலை தனும் சுடுமா - நடுப்
பகலவனொளி குளிர்ந்திடுமா
கனி கொண்ட சோலையின் முதிர்மா - தரும்
கனிந்திடும் பழம் கசந்திடுமா
இனி மனம் இனித்திடத் தருமா - நல்
இயற்கையின் ஊற்றெழும் விதமா
மனிதமும் திளைத்திட வருமா - என்
மன திறைமகள் தரும் தமிழ்ப்பா

மனமது  தனி வழிசெல்லும் - அது
மயங்கிடும் மதியொளி கண்டும்
தனதெனும் வழியொன்று கொள்ளும் - ஒளி
தவிர்ந்தொரு இருள்வழி கண்டும்
மனம்கெட இருவிழி அஞ்சும் - அதை
மதிப்பதில்லை எண்ணம் மிஞ்சும்
இனமதில் குரங்கதன் சொந்தம் - அது
இடர் கொள்ள உயிரது துஞ்சும்

தனமது தேடி நெஞ்சேங்கும் - அது
தவறெனும் வழி யென்று கண்டும்
எனதென உரிமையும் கொள்ளும் -அதை
எதிர்பவர் பகைஎனத் துள்ளும்
கனவுகள் பலபல காணும் - அக்
கனவதன் நிலைகொள ஏங்கும்
புனிதமென் றெதனையும் அள்ளும் - அவை
பிறிதெனக் கண்டுபின் வெம்பும்

சினமது நிலைதனை வெல்லும் - அதில்
சிரிப்பிபெனும் உணர்வினைக் கொல்லும்
வனமுள்ள மாவிலங்கென்னும் - கொடும்
வகையுடன் கொடுமைகள் செய்யும்
சுனைதனில் எழில் மலர்க் கமலம் - அது
சுழல்விரி அலை தள்ளும் அவலம்
எனை யொரு தருணமும் தள்ளும் - பின்
இள வளர்மதி நிலை கொள்ளும்

விழுந்தனன் வேறில்லை வழியில் - மனம்
வலித்திட கிடப்பவன் கதியில் \
எழுந்தவை இடர்தரும் எண்ணம்,- அது
இங்கில்லை எனதரும் உள்ளம்
வழுந்திய பெருவினை கொண்டும் - என்
வாழ்வினில் பொழிந்த கண்,மழையும்,
அழுந்திட பிறந்ததும் ஆகும் - அதை
அதி பெருந் தீ புடம் போடும்

--------------------

No comments:

Post a Comment