Thursday 24 December 2015

இசை மீட்டல்

கலைப் பூக்கள் புவிமீது மலர்கின்றதோ
கனிவான இசைநாதம் எழுகின்றதோ
இலையேதும் இதைவெல்ல எனுமோசையோ
இளநெஞ்சம் புகழ் பூக்க ஒளியாகுதோ
அலையாக எழுந்தாடும் உணர்வானதோ
அறியாத  இறையன்பு வரம் காணுதோ
விலையற்ற வெகு தொன்மைத் தமிழ்வாழுமோ
விளைகின்ற அருஞ்செல்வம் மிகையாகுமோ

வலை கொண்ட  கயல் ஏங்கும் உணர்வானதோ 
வடிவத்தின் புலமைக்கு மனமேங்குதோ
தலைகொண்ட எண்ணத்தின் விளைவாகவே
தருமத்தின் நிறைவாழ்வு தனை மாற்றுமே
குலை போன்று பழம் இங்கு குவிந்தாலுமே
குரங்கான ததன் கையின்  மலர்மாலைபோல்
நிலைஎன்ப தடுமாற்றம் நிகழாமலே - வாழும்
நேர்கொண்ட கலைவாழ நெறிகொள்ளுவோம்

கலைதேரும் உளம்கொள்ளும் பெருமாற்றலில்
கரம் மீட்டும் பெரும் ஞானச் சுவை யூற்றெழும்
சிலைதன்னும் எழுந்தாடும்  சிறப்போங்கிடும்
சிறு கைகள் எனும் பூக்கள் இதழ் தேனிடும்
வலைபாய்ந்து பெரிதாகி நதி ஓடவும் - பாயும்
உயர் கொண்ட நிலைவீழ்ந்து கடல்சேரவும்
மலை மீதுஎழும் காற்றின் சுகமாகவும்
மனம் கொண்ட நிலையான துடன் மாறட்டும்

தொலைவானில் தெரிகின்ற கதிரோங்கவே
தொடும் வாசல் நிறையின்ப ஒளிச்சேரலாய்
புலைகாணும் பெருஞ்சோர்வும் பிறிதாகட்டும்
புதிதாகும் ஒளித்தூண்டல் பெரிதாகட்டும்
தலை காலும் தெரியாமல் தடுமாறிடும்
தவிக்கின்ற இருள் ஓடி ஒளி மேவட்டும்
இலைகொண்ட செழுமைக்கு இணையாகட்டும்
இன்பத்தின் மலர்காடென் றெழில் தேடட்டும்

அழகான இசைக் காடு மரவங்களாய்
அவரூதும் இசைகேட்டு மனமாடட்டும்
எழவீழ அதுவாக்கும் இரைகூச்சலும்
உயர் ‘வான ஓங்கார’  இசையேற்றமும்
முழமென்ப வளர்தெங்கும் மிகுந்தானதே
மெருகேறும் இசைபொங்கி  மெல நீளடட்டும்
அழ வந்துசொரிகின்ற விழிநீர் மட்டும்
ஆனந்தம்தரு தென்ற விதியாகட்டும்!

No comments:

Post a Comment