Thursday 24 December 2015

மனம் காணும் துயர் மாற்று!

நிலவுகாயுது தனிமையிலே -அந்த
   நீலவிண் ணோரத்திலே
நெஞ்சம் காய்ந்திடவோ மகளே -அந்த
  நிலவினைப் போலவுமே
உலவுதென்றலும் காயம்வர- என்றும்
   உரசியும் வீசுவதோ
உள்ளம் காயமென்றான தெனில் -அதன் 
    உணர்வுக்கு தீயெதுவோ?

கனவு பலவிதம் காண்பதெல்லாம் -அது
   கற்பனையாம் மனமே
கவலை வாழ்வினில் நிலைப்பதில்லை -அது
  காற்றென ஓடிடுமே
மனமும் வானத்தில் பறந்துவிடும் -ஒரு
   மாபெரும் வேகத்திலே
மாறிவருவது துன்பமென்றால் -அதை
   மறந்திடு விரைவினிலே

தீயில் கைகளை வைக்கமுன்பு -அதை
     தெரிந்திடு பொன்மகளே
தீய்ந்ததாயினில் யார்தவறு -அந்த
      தீயது வெறும் சடமே
கோயில் புஷ்பங்கள் நீமகளே -அந்த
     குலதெய்வம் கால்களிலே
கூடியிருந்திட நீபிறந்தாய் -இது
      குடிசையின் வெறுந் தரையே

காய்ந்த மலர்பின்னர் மலர்வதில்லை -மனம்
   காயினும் சாவதில்லை
காணும் காட்சிகள் மாற்றிவிடும் -புது
   கனவெழும் களித்திடுமே
தேய்ந்த நிலவது வளர்வதுண்டு -அந்த
      திங்களும் முழுமைகொளும்
தேனில் இனிய நல்லொளிபரவ -அது
     தினம்தினம் உலவிடுமே!

சேர்ந்த உறவுகளோடுதினம் -நீ
   சிரித்திடு பழகிவிடு
சிந்தை பழகட்டும் தாமரையின் -இலை
     சிந்திடும் நீருறவு
நேர்ந்த நினவுகள் பள்ளியிலே -எந்த
     நாளுமே சொல்வதில்லை
நீயே கற்றிடவேணுமடா -இந்த
     நிஜமெனும் வாழ்க்கையதே!

வானத்தொலைவிலே நீயிருந்தா- லென்ன?
     வண்ணஒளிவருதே
கான நெடுமரக் கூடலிலே -நான்
    காணும் பெரி தொளியே
நானுமிருப்பது காட்டுக்குளே -எனை
      நாடி விலங்குகளே
ஊனைவிரும்பியே சூழ்கையிலே -உனைக்
    காணவும் முடியலையே

No comments:

Post a Comment