Thursday 24 December 2015

சிறு பெண்ணே


சின்னப் பெண்ணே சின்னப் பெண்ணே
சிரிக்கும் மலரம்மா
அன்னை தந்த அழகிய கண்ணே
அன்பின் பரிசம்மா
பொன்போல் கன்னம் பூவிதழ்முல்லை
பொருந்தும் வகையம்மா
புன்னகை யென்றும் புதிதாம் உதயம்
பொழுதும் நினையம்மா

அன்பை என்றும் அகமுள் கொள்வாய்
அதுவுன் பலமாகும்
இன்பம் எங்கே உள்ளது வாழ்வின்
எளிமைத் தனமாகும்
தென்பைக் கொள்ளு தினமும்வாழ்வு
தேனில் இனிதாகும்
தன்னல மெண்ணி தன்னலம் விட்டால்
தகமை உயர்ந்தோங்கும்

கல்விநற் செல்வம் காசொடு பொருளும்
காண்பது பின்னாகும்
வல்வினை யாற்று வளமொடுவாழ
வகுத்திடு விதிதானும்
தொல் திருநாட்டின் சுகமெழு வாழ்வும்
திரும்பிடத் தான்வேண்டும்
அல்லது தீர்ந்தே அறமெழுந் தாட
அடுத்து எதுவாகும்

சிங்கமும் புலிகள் வாழ்வது இன்று
சேர்ந்தோர் வனமல்ல
செங்கணை தீயின் அம்புகள்யாவும்
சிரம்மேல் எரிதூவும்
பொங்கிட வழியும் பாலென் றுள்ளம்
புதிதோர் நிலை காண
நங்கையின் உறவே நாடுன தானால்
நலமே  வாழ்வெய்தும்

தென்னவர் பக்கம் தித்திப்புண்டோ
சிறுமைக் கரமேந்தி
என்னவர் நாட்டில் ஏழ்மைப் பஞ்சம்
இயல்பென் றுருவாக்கி
பொன்னெழில் காணப் புரளும்மதியை
பெரிதோர் வரமென்றே
தன்னினம் தாழத் தனிவழிகாண்போர்
தமிழுக்குரி யோரில்

வெண்ணெய் மலரே விடிவுக ளென்றும்
வெளிச்சம் தனைத்தாரும்
விண்ணிடை காற்றில் விரியும்சுதந்திர
வேட்கை மனம்காணும்
கண்ணிடை போற்றும் கருமணிபோலுன்
கடமைகள் தனையாக்கு
பெண்ணவளே நீ பெரிதோர்சக்தி
புரிவாய் பலம் கொண்டே!

**********************

No comments:

Post a Comment