Monday 11 January 2016

காதல் கொள்ளுவளோ? கொல்லுவளோ?

தெண்ணிலவு வானுலவத் தேகங்குளிர் கொள்ளும்
கண்மயங்கிக் காதல்கொளக் கன்னியரைத்தேடும்
பண்ணிசையோ காற்றெழுந்து பாடுமொலி கேட்கும்
அண்ணளவாய் இன்பந்தரும் அந்திவேளை தன்னில்
மஞ்சள் வெயில் மாலைசுகம் மயங்கு மந்தவேளை
மஞ்சமதில் சாய்ந்தவனோ மதிமயங்க நின்றேன்
கொஞ்சுமிளங் குருவிகளின் குறுகுறுத்தஓசை
கூடிஅவை மகிழுகின்ற குரல்வெளியே கேட்டேன்
சின்னதொரு கிண்ணமதில் திராட்சை ரசம் உண்டேன்
செவ்விழிகள் நீர்வழிய சிற்றிடையாள் அவளோ
கண்கலங்கி நிற்பதனைக் கண்டணைக்கச் சென்றேன்
கரமெடுத்து சென்றவனோ கணம் வியந்து நின்றேன்
வண்ண மலர்க் கண்ணழகுப் பெண்ணவளோ முன்னால்
வாசமெழக் குளிரெடுத்த பூவெனவே நின்றாள்
எண்ணமதிற் சித்திரமோ இல்லை சிலைதானோ
எழில்வடிவம் தீட்டியதோர் இயற்கை மகள்தானோ
பொன்னுதட்டிற் பூஅலர்ந்து பொங்குமெழில் வண்ணம்
புதுமெழுகில் வார்த்தமுகம் பஞ்செனவே கன்னம்
தென்னையிலை தென்றலுக்கு தலைஅசைத்து மின்னும்
தன்மையிலே இடையசையத் தாகமுடன் பார்த்தாள்
வஞ்சிமனம் வைத்த துள்ளே என்னவென்று அறியேன்
வாசனைக்கு பூமறந்து வந்த வண்டைக் கண்டேன்
நெஞ்சிலெழும் இச்சைதனை நீலவிழிப் பார்வை
நெளிபுருவ வில் வளைத்து நினைவழிய எய்தாள்
தேரிலேறி திங்களுலா தோன்றும் எழில்வண்ண
திருமகளின் ஒரு உறவு திரும்பியெனைக் காண
போரிலேதும் இல்லையெனப் பிழைத்தவனைப்போல
பேச்சிழந்து மூச்சிரைத்து பேசும்குரல் கேட்டேன்
சின்னவளே இப்படிநீ சீறும்விழி கொண்டு
செந்தணலாய் நிற்பதுஏன் சென்றுவிடு உந்தன்
புன்னகையிலற் கொல்லுகிறாய் போதுமடி பெண்ணே
பூவுடலில் காணுமெழில் பித்தமிடக் கண்டேன்
கன்னியவள் நேர்திரும்பி கண்களெனைப் பார்த்து
கனியுதடைக் கடித்து ஒரு கள்ளநகை பூத்து
என்னிதயங் கொண்டவரே இன்றுமது வாழ்வு
எல்லைவந்து சேர்ந்ததடா கொல்லுகிறேன் என்றாள்
அஞ்சி மனம் பதைபதைக்க அவளெழுந்துமுன்னே
ஆடுமொரு பாம்பெனவே  அகமெடுத்த நஞ்சும்
வஞ்சியொரு கையில் சிறு வாளெனவே கத்தி
வைத்தபடி காலெடுத்து வந்துவிடக் கண்டேன்
அத்தனையும் சொத்து பணம் ஆசைகொண்டு வந்தேன்
ஆடுவரை ஆடியுனை அன்பு கொள்ளவைத்தேன்
இத்தரையில் எண்ணியதை இறுதியிலே வெல்வேன்
இறைவனைநீ தொழுது நில்லு இறுதி மூச்சுஎன்றாள்
புன்னகைத்த பொன்னிலவோ பேரிடியாய் நிற்க
பூவிழிகள் மின்னியொரு புயலெனவே கண்டேன்
இந்தவேளை பார்த்தவரோ இனித் ’தொடரும்’ போட்டார்
எழுந்து தொலைக்காட்சி தனை எரிச்சலோடு அணைத்தேன்

No comments:

Post a Comment