Monday 11 January 2016

என் அன்னை, என்தேசம், என்கனவு 2

பகுதி 2
அந்தோ படுந்துயரம் அத்தனையும் என்சொல்வேன்
நிந்தை புரிந்தவரோ நெஞ்சழவே கேடுசெய்தார்
இந்தோர் நிலையடைய இன்னலிட்ட எத்தர்தனை
வந்தே விரட்டிவிடு வாய்மை நிலைநாட்டிவிடு      .
எங்கே உலகநீதி எங்கே உரிமையென்று,
செங்கோல் பிடித்தவர்கள் செய்வதென்ன கேட்டுவிடு
பொங்கும் தமிழ்க்குரலை பேச்சை நெரித்தழித்து
சங்கை எடுத்தூதி சாவைஎமக் கீந்ததென்ன
பொன்னால் மணிமுடியும் பெற்றதோர் வாழ்வும்
தன்நேர் நிகரற்ற தமிழ்வாழும் தேசமென
மின்னேர் விளைபுயலின் வேகமெடு மைந்தர்களும்
முன்னே துணையிருக்க முத்தமிழின்மூச்செடுத்து
பன்நூற் கலைவளங்கள்; பண்ணிசைகள் நற்றமிழாம்
முன்னோர் செய்காவியங்கள் மூத்தோர் பழங்கலைகள்
என்னை மகிழ்வுசெய்ய எத்தனையோர் இன்பமுடன்
மன்னர் மணிமுடிகொள் மாவீர ஆட்சிகண்டோம்
அணிகொள் அழகோடு அறத்தின் வழிநடந்தோம்
பிணிகொள் அரசுசில போரென்று நீதிகொன்றார்
பணியா உளஉரமும் பாதையிலே நேர்நடையும்
துணிவோ டுயர்மறமும் துள்ளிவரும் போர்முடித்து
குனியா துணர்வுபொங்க கொள்கைவழி நீதியுடன்
தனியாய்அரசுகண்ட தாயின்நிலை இன்றறிவாய்
இனியேன் மௌனமடா இன்னலிடும் பாதகரை
தனியோர் இனமழிக்க தட்டிப்பதில் கேட்டிடடா
ஈழமகள் கண்களிலே எழுந்தோடும் நீராறு
ஆழமன துன்பமதை ஆற்றாமை தான்விளக்க
வீழுமீர் பூங்கரங்கள் வீரமகள் கால்கள்தனும்
பாழும் பகைபிணைத்து பாடுபெருந் துன்பமிட்டார்
கேழாயென் சின்னவனே கீழாம்நிலை யடைந்தோம்
நாளுமவர் திட்டமிட்டே நாட்டின் குடிகொன்றார்
மாளுமிந்த மக்களுயிர் மகனேநீ காத்திடடா
வாழுமிக் காலமதில் வாசல்வரை தள்ளிவைத்தார்
நாளைஎமை வீதியிலே நாட்டோரம் ஆழ்கடலில்
சூழைதனில் தள்ளியெமை சுற்றிவரத் தீயிடுவார்
மாளமுழு தாயெரித்து மண்ணதனை கொண்டிடுவார்
வாழவென நீஎழுந்து வையகத்தை கேட்டுவிடு
இல்லையெனில் நீயறிவாய் எமதழகுத் தமிழ்த்தேசம்
வல்லோர் அரசுகளின் வாயிலுண வாகிவிடும்
மெல்லத் தமிழழியும் மேதினியில் என்பதனை
பொல்லாப் பெரும்புழுகாய் பூமியிலே ஆக்கிவிடு
துள்ளியெழு உன்னுயிரும் துடிக்கத் துணிவுடனே
தெள்ளுதமிழ் வெல்லுமொரு திக்கைக் கருத்திலெடு
கள்ளினிமை பூமென்மை காற்றின் சுகம்யாவும்
உள்ளதமிழ் வாழஇனி உன்கடமை ஆற்றிவிடு
மங்கும் மதியொளியில் மங்கையவள் சொல்லிவிட
எங்கோ இருந்தெழுந்த  இடியோடு புயலெனவே
பொங்கும் பெருஞ்சுழலோ பூவையவள் முன்னுருள
தங்கஒளி தானுருக்க தலைமறைந்து போயினளாம்
--அன்புடன் கிரிகாசன்

No comments:

Post a Comment