Thursday 11 February 2016

இயற்கை, தமிழ், இனிமை


சலசல வெனும் நதி யலைகள்
சரசர வெனவிழும் இலைகள்
கலகல வெனும் இனம் பட்சி
கடகட வெனும்நடை வண்டி
சிலுசிலு விழும்மழை சத்தம்
சிதறிடும் அலைகட லோசை
பலதிவை  ஒலிதரும் சந்தம்
பைந்தமிழ் கொண்டது மன்றோ
குலுங்கியும் தளம்பிடச் சுனைநீர்
குதிகின்ற சிறுகய லோசை
தளதள எழிற்தா மரைகள்
தாவிடும் தவளையின் சத்தம்
வளமுற இதழ் சுகம் தேடும்
வந்திடும் தும்பி ரீங்காரம்
துளையிடும் மூங்கிலில் வண்டு
தருமெழிற் சந்தங்க ளென்னே !
மலைகளில் எதிரொலி அதிரும்
மரமிருந் தொருகுயில் பாடும்
சிலை பொழி சிற்பிகள் உளியும்
சிறுவரின் அழுகுரல் ஒலியும்
வலையிழு மீனவர் சொல்லும்
வடிவெடு மாதரின் நடையில்
குலுங்கியே சிணுங்கிடும் மெட்டி
குவலய மிடைஇசை யன்றோ
தாய்மடி கருவினுள் சிசுவும்
தருமவள் இருதய ஒலியும்
சேயெனப் பூமியில் பிறந்து
சீருறத் கேட்கும் தாலாட்டும்
மாயவிண் வெளி தனின்ஓசை
மனிதனின் மாவுடல் மண்ணிற்
சாயவும் போடும் ஒப்பாரி
சகலதும் தமிழிசையன்றோ