Saturday 7 May 2016

நானா அவன்


 
எனக்குள் ஒருவன் இருகின்றான் - அவன்
இன்பமும் துன்பமும் ரசிக்கின்றான்
கனக்கும் துயர்மனம் கொண்டாலும் - அவன்
களிப்பில் பஞ்சென மிதக்கின்றான்
தனக்கெனப் பாதை வகுத்தவனாம் - அவன்
தனிவழிப் பயணம் நடப்பவனாம் 
வனத்தில் மானென வாழ்பவனாம் - பகை’
வரும்போ தஞ்சா வீரனுமாம்

குணத்தில் கோட்டையின் மன்னவனாம் - அவன் 
குலவும் தென்றலின் இளமகனாம்
கணக்கில் கவிதையின் ஆற்றோட்டம் - இவன்
கனவை ஆக்கிடப் போராட்டம் 
மணக்கும் மல்லிகை வாசமதோ - இவன் 
மனமும் வாய்மைசொல் பூவனமோ 
கணத்தில் கற்பனை ரதமேறி - அவன்
கைதொடும் தாரகை ஒருகோடி

தடைகள் வருவது தானுடையும் - அவை
தண்ணீர்க் குளத்திடை குமிழிகளாம்
நடைகொள் பாதையில் குளிர்காற்று - அதில் 
நந்த வனம் எனும் உணர்வூற்று 
இடையில் ஒருமயில் நடமாடும் -அது
இன்னிசைக் கூத்திடக் குயில்பாடும்
விடைகள் தேடியே ஓடும்நதி - என
விளங்கும் வாழ்வின் போக்கினிலே

இடையே விதியும் எழுந்தாட  - இவன் 
எண்ணத் திசையினில் காட்சிமுரண்
மடையும் உடையா நீர்த் தேக்கம் - எனும்
மதியின்  பொறுமை தோற்றாலே
உடையின் உண்மைப் பிரவாகம் - அதை
உணர்வோ கண்டால் வலி சேர்க்கும்
படைகள் கொண்டெழுந் தணிசேர்வாய் - உன்
பழமைத் தமிழ்க்கவி இடர் வெல்லும்

*************************

No comments:

Post a Comment