Saturday 7 May 2016

மனத்தோட்டம்

 

கவிதை மலர்களும் காணும் மனதெழும்
  கற்பனைத் தோட்டத்திலே
புவியில் புலர்ந்திடும் பொழுதில் முகைவிடும் 
  பூக்களெனும் வகையே
செவியில் மதுவெனப் புகுமே இசையெழச் 
   சேரும் தமிழினிதே
குவியும் மலரிதழ் நெகிழும் விதம் மனம் 
    கொள்ளும் கவிதைகளே!

நிதமும் பூத்திடுமலராய் அழகுடன் 
  நினைவில் சுவை தருமே 
விதமும் உயிரிடை விளங்கும் உணர்வுகள்
  வெளிச்சம் தரும் அகலே
பதமும் பாங்கினில் இதமும் மகிழ்வெழப் 
   புதிதோர் சுகம் வருமே
உதயம் பொழுதெழும் கதிரின் ஒளிமிக
    உடையோர் பெருநிதியே
கவிதை கனிவது கலையின் எழுமனக்
   காட்சி பெருமிதமே
புவியில் கவிஞன்கண் பார்வை தரும்பொருள் 
  படைப்பில் தனிரகமே
குவியும் மனதிடை கொள்ளும் உணர்வுகள் 
   கீதம் இசைத்திடவே
கவிதை எனும்காட் டாற்றுடை வெள்ளம் 
   கட்டை மீறிடுமே

தவிப்பும் இளமையின் தாகம் மனமெழும் 
   துயரம் மகிழ்வுடனே
கவியின் பொருள் சினம் காதல் களிமனம்
   கனிவும் பெருகிடவே
செவிகொள் இழிமையும் சேரும் வியப்புகள்
    செழிக்கும் போதினிலே
குவிவன உணர்வுக் கிளர்வினில் கவிதை
     கொட்டும் அருவியதே

*****************

No comments:

Post a Comment