Saturday 7 May 2016

வாழ்க்கை வாழ்வதற்கே



வண்ண மலர்த் தாமரைகள் கண்டேன் - அங்கு
   வந்து வளைந்தோடும் அலை தொட்டு விளையாட
கண்ணெதிரே  கோபுரமும் கண்டேன் - பக்கம்
   கற்கை நெறி ஓதுங் கலைக் கூடமொன்றும் கண்டேன்
விண்ணுயர்ந்த மாமலைகள் கண்டேன் - சுற்றி
   வீசிவருங் காற்றினொலி சத்தமிடக் கேட்டேன்
எண்ணமதில் இச்சை கொண்டு நின்றேன் அங்கு
  என்னை யொளி கொண்டயலில் ஏற்றமிடக் கண்டேன்
.
தண்ணிலவில் பொன்னொளித் தடாகம் - எழில்
   தன்னில் அது மின்ன அலை தென்றல் தொடஓடி
வண்ணமலர் .வாசனையும் ஏந்தி - அயல்
   வந்தெனையே தொட்டுவிட வாயடைத்து நின்றேன்
மண்ணிலிதை விட்டுமொரு வாழ்வா - என்று
    மங்கலமாய் உள்ளம்களி கொள் மயக்கம் கொண்டேன்
பண்ணி சைக்கும் ஆவலுடன் நானும்  ஒரு
  பாடும் குயிலன்ன வகை பாவம் கொண்டு நின்றேன்

உண்ணும் வகை தேனும் கனிவெல்லம் சேர்ந்து
   உள்ளதெனக் கொள்ளரிய தீஞ்சுவைப்பைக் கொண்டே
அண்ணளவாய் சொர்க்கமதை மேவும்- 0 ஒரு
   ஆற்றலுற உள்ளமதில் அழியலை போலும்
எண்ண மெழும் வேளை உயர்ந்தோடி அங்கு
   ஏற்றமிகு தோற்றமெழும் இன்பமதைக் கொண்டேன்
திண்ணம் ஒளிச்சக்தி தரும் வாழ்வில் - நானும்
   தென்றலெழும் திக்கிருந்து பாடுகிறேன் கீதம்


கண்ணருகில் தோன்றும் ஒருகாட்சி - அது
   காலமெனும் வெண்திரையில் தீட்டிதோ பார்நீ
வண்ணமெழ வானடியும் கொள்ளும் - அயல்
   வந்து மனம் பொங்கிடவே வீசும் எழில் காற்றும்
மண்ணிடையே மாண்பு கொண்டுவாழும் - மக்கள்
   மாற்றமின்றி அன்புகொண்டு வாழுகின்ற காலம்
எண்ணிலாத இன்ப வளம் சேரும் - அங்கு
    இட்டவிதி துன்பங்களை இடையிடையே தாரும்

விட்டுமதி கெட்டிடாது நாமும் - அந்த
   வேளைதனில் நம்மிடரை நாமெதிர்த்து மீண்டும்
பட்ட துயர் போக்கி வாழ்வு கொள்ளும் - ஒர்
    பக்குவத்தைப் போக்கினிலே கொண்டிருந்தால் நன்மை
சுட்ட சட்டி வல்லமை கொண்டாகும் - போல்
   சேர்ந்த துயர் தீயெரிக்க வெந்தெழுந்து வாழும்
இட்ட சக்தி தந்த வாழ்வில் தானும் - என்றும்
   எண்ணியிறை வேண்டிமனத் தீரம்கொள் நன்றாகும்

*

No comments:

Post a Comment