Saturday, 23 May 2015

புத்தாண்டு 2015

 
மங்கல ஓசை எழுந்துவர 
  மங்கையர் கள் நடமாடிவர
சங்கு ஒலித்திடும் சத்தமெழ 
   சாய்ந்து மரங்கள் சலசலக்க
பொங்கும் தமிழிசை காதில்வர 
   பொய்கை இளந் தென்றல் வாசமிட
எங்கும் மணியொலித் தின்பமெழ 
   ஏழைகள் வாழ்வில் நிறைவுகொள்ள

வெங்கனல் வீசிடும் நீதியெழ 
   விட்டெழுந்து தீமை ஓடிவிட
தங்க ஒளிநிலா ஊற்றிவிட 
    தந்தன தந்தன தாளமெழ
சங்க தமிழிசை சந்தமிட 
    சார்ந்து குயிலிசை கானமெழ
செங்கனி கொண்டதை தேனழைந்து 
    தின்னவென பெண்கள் தந்திருக்க

மங்கிடும் மாலையின் மஞ்சள்வெயில் 
    மாறி இருள் போர்வைமூடிவிட
அங்குமிங்கும் வண்ணம் பூசியதாய் 
    ஆக்கும் வண்ணஒளிக் கோலமிட
பொங்கி விரிவன பூச்சரங்கள் 
    போலும் வெடிக்கும் மாத்தாப்புகளும்
தங்கிடும் இன்பத்தை வாழ்வுனிலே 
   தந்திடப் புத்தாண்டு வந்ததுவோ

வெள்ளி முளைத்து விடியுதென 
   வேண்டுவர் வாழ்வில் உதயமெழ
புள்ளியிட்ட மானும் துள்ளுதெனப் 
   பூவையர் சின்னவர் ஆனந்திக்க
அள்ளி யணைத்திடத் தாயவளும் 
    அன்புகொண்டதந்தை கூடிநின்றே
உள்ளமதில் பெருஆனந்தமும்
    உண்டு செய்யுமோ புத்  தாண்டுமிதே!

..............................
 

பொங்கல்



பொங்கட்டும் செங்குருதி புல்லர்களின் செயல்கண்டே
பொங்கட்டும் வெஞ்சினமும் பேடியரின் போக்கெண்ணிப் 
பொங்கட்டும் மக்கள் நலம் புதுவெண்ணம் புதியவழி 
பொங்கட்டும் புத்துணர்ச்சி போகட்டும் சோம்பல்தனும்
மங்கட்டும் மாயமெனும் மதிபிறளும் வெறியுணர்வு 
தொங்கட்டும் தோரணங்கள் தூய தமிழ்வீதியிலே
எங்கெட்டும் வாறிந்த இன்தமிழின் சுதந்திரத்தை
நன்கொட்டும் முரசினொலி நாலுதிசை காவாதோ

பெண்கட்டும் பூம்பொதியில் பிறந்துவளர்ந்.தோ முயிரை
மண்கொட்டும் உடலிட்டு மாமனிதஉருப்பெற்றோம்
வெண்பட்டும் போலழுக்கில் வீழாது மெய் காத்தோம்
புண்பட்டும் போகவென புல்லர்களின் செயலாலே                                                      ]
எண் கெட்டுப்போ எனவே ஏராளாமாய் இழந்தோம்
தண்குட்டை நீரினிலே தவிக்கின்ற மீனினமாய்
கண்கெட்ட வகையாகி கடுமிருட்டில்நடக்கின்றோம் 
விண்ணெட்டும் வகை இன்பம் விளைவதெப்போ விடைகூறு

இங்கெட்டும் வரை எங்கள் இன்பம் தழைத்திடவும்
திங்கட்கும் இல்லாத தேமதுரசுவை கொண்டு
திங்கட்கும் ஒளியீந்த செம்மலவன் ஒளிதாங்கி 
திங்கட்கும் பின்நாளில் தேனிசைக்கும் தமிழ்பாடி
திங்கட்குள் முன்னோனின் திருநாட் தினமொன்று
எங்கட்கும் வாராதோ இல்லாத மண்மீட்டு
தொங்கட்டும் தூயதமிழ் சுதந்திரக் கொடிபறக்க
சங்கிட்டும் முரசொலிக்க சேதிவான் எழுமாமோ

வெற்றியென் றொலிக்கட்டும் வீரத்தில் புதுப்பானை
பெற்றவராய் விடுதலையும் பெற்றின்பத் தீமூட்டி
முற்றிலுமெம் சுற்றமுடன் மற்றவரும் ஒன்றாகிக்
கற்றவரும் கன்னித்தமிழ் கல்லாக் குடிமகனும்
குற்றமற்ற தாயிருக்கக் கொடுமைசெய் பழிநீங்கி
விற்றுப் பகையுணர்வை வீறுடனே தமிழ்காத்த
அற்புதமென்றோர் காலம் ஆகாதோ அந்நாளில்
நற்றமிழின் சுவைபொங்க நாமுண்ண மாட்டோமா?
***********************************************

திங்கட்கும் -- தின் கள்ளுக்கும் (தேனுக்கும்)

திங்கட்கும்  --- சந்திரனுக்கும்

திங்கட்கும்  -- திங்கட் கிழமை--

திங்கட்குள்  -- மாதங்களுக்குள்

Thursday, 21 May 2015

யார் கொடுத்தார் ?


கொட்டிவைத்து மின்னுஞ்சிறு தாரகைகளை - வானில்
கெட்டியாக ஒட்டிவைத்து விட்டவர் யாரோ
முட்டி இடிமேக மழை கொண்ட மின்னலில் - ஒளிக்
கட்டி நிலா தான்பிடித் துருட்டி வைத்தாரோ 
வட்டநிலா அந்திவேளை எட்டிப் பாரென - முகில் 
முட்டவொரு மாமலையும்  கட்டிவைத்தாரோ
ஒட்டுரசி ஓடிவரும் வெண்முகில் கூட்டம் - அதை
விட்டு நிலா பஞ்சணையில் தூங்கச் செய்தாரோ 

கட்டழகு ஓவியமாய் காலைவானிலே - அந்த
கண்கவரும் காட்சிஎழில் தீட்டியதாரோ
மெட்டுநெகிழ் மென்மலரைக் கட்டவிழ்த்தாரோ - அதில் 
மோகமெழும் வண்டினத்தைத் துய்க்கவிட்டாரோ
தொட்டிழையும் தென்றலினால் பட்டுமேனியில் - இதழ்
தொக்கும்மலர் பட்டசுகம் கிட்டவைத்தாரோ
தட்டிஉளி கற்சிலைசெய் சிற்பியின் கைபோல் - விரல் 
தாங்கும் வீணைநாதம் மீட்டல் தந்ததும் யாரோ

வட்ட அலை நீர்க்குளத்தில் ஆடும் தாமரை - அதை 
விட்டெழுந்த பட்சி யோடிப் போம் வயற்கரை
தொட்டுவிட வான்சரிந்த தூரத்தோற்றமும் - மழைத்
தூறல் தந்ததேக்க நீரில் வீழ்ந்த வானமும்
கட்டைப் பசும்புல் வெளியில் பச்சை பூசியும் - பல 
கற்பனையின் அற்புதங்கள் செய்வதும்  யாரோ
சுட்டவெயில் நீர்தெளிக்கும் சின்ன வான்முகில் - கண்டு
சொல்லிஏழு வண்ணமிட்ட வில்லமைத்தாரோ

விட்ட துளி வானிறைந்து கொட்டியதேனோ - அது
அட்டகாச மிட்டதிரச் சத்தம் இட்டதோ 
பட்டு விழுந்தோடி மண்ணில் பாயுது வெள்ளம் - அதைப் 
பக்குவமாய் ஓடவழி பார்த்த மைத்தாரோ
நட்டமரம் நீளுயரச் செய்தவர் யாரோ - அதில் 
நட்சத்திரப் பூக்களினைத் தொங்கவிட்டாரோ
மட்டுமல்ல பூமலர்வில் வாசமிட்டவர் - அதில்
மாலையிளங் காற்றெடுத்துமயக்க விட்டாரோ

பட்டுவண்ண மேகமிட்டுப் பக்குவஞ்செய்து - அதன் 
பால்நிலவும் கூர்கதிரும்  பார்வைதந்திட
வட்டமெனச் சுற்றும்புவி செய்தவர் யாரோ - அவர்
வாழ்க்கைஎனும் சக்கரமும் சுற்றவைத்தாரோ
தொட்டிலாடும் பிள்ளையாகித் தோல்சுருங்கிடும் - இந்தத்
தோன்றலென்ற மானுடத்தை கட்டியாள்வரோ 
ஒட்டிஉடல் உள் நின்றோடும் இரத்தமோர்நிறம் - ஆயின் 
உள்ள தோற்றம் வண்ணபேதம் வைத்துவிட்டரோ

எட்டியடி போடுபவன் ஏய்ப்பவன் தன்னை - நீ
இத்தரையில் வாழு என்று இன்பமிட்டாரோ
பட்டிதொட்டியெங்கும் பகை பாய்ந்திடச்செய் தும் - அப்
பாவிகளை இம்சைசெயப் பார்த்திருந்தாரோ
கெட்டமனம் நல்லகுணம் கேடுகள் நன்மை - இவை 
கொட்டி புவிமக்களிடை தூவிவிட்டாரோ
நட்டமென வாழ்வின்வினை நாசமும்செய்து - அதில்
நன்மைகொண்டு வாழ நாலுபேரைவிட்டாரோ

சட்டமெலாம் செய்பவரின் பக்கம்நின்றாரோ - அதில் 
சற்றுமுலாம்பூசி மெய்யில் பொய்யொழித்தாரோ
கட்டிஉடல் தீயிலிட சுட்டெரிப்பாரோ - அதைக்
காவலென்று பேருமிட்டு காத்திடுவாரோ
வெட்ட வந்து கொட்டுதிரம் வேட்கை கொள்பவர் - பொய்யை 
விற்றுப் பல இரத்தினங்கள் கொள்ள வைப்பாரோ
கட்டழகே பொற்தமிழே காணும் இன்னலை - நின்றன்
கையளித்து விட்டவர்கள் யாரெவர் யாரோ

வட்டியுயோடு வாழ்விற்துயர் கொட்டவைப்பாரோ - அதில்
வந்துசில பேரைமட்டும் எட்டவைப்பாரோ
இட்டமுட னாடி என்ன பாவம் செய்யினும் - இந்த  
ஏழைகளை நீசமிட்டுத் தாழ்வு செய்யினும
குட்டி மிதித்தேறி அவர் கொல்வராயினும் - அது
குற்றமிலைக் கொள்ளிறைமை கோட்டுள் என்பரோ
விட்டுமனம் வேகிநின்றே நானும்கேட்கிறேன்  இந்த
விந்தையோடு வேதனைகள் யார் கொடுத்தார் யார் ?

’’’’’’’’’’’’

அழகு உலகம்


தேயாத முழுமதியின் திகழ்வானத் தெழிலும்
திரிகின்ற முகில் விலகத் தினகரனின் ஒளியும்
காயாத புல்வெளியும் கனிதருமா மரமும்
கனல் மேவுங் கடும்வெயிலில் காண்நிழற் சோ லைகளும்
பாயாக விரியழகுப் படர் கடலின் திரையும்
பாய்ந்து விழும் மலையுச்சி பிறந்தவளாம் நதியும்
தாயாக இயற்கை அன்னை தரும் உலகின் அழகே
தனை மறந்து மனம்மகிழத்  தகுமியற்கை எழிலே

நேராக நிமிர் தருவும் நீட்டியதோர் கிளையும்
நின்று குரல் தந்தினிக்க நெஞ்சிணையும் கிளிகள்
கூரான ஏர் துளைத்துக் கொத்தி மண்ணை உழுது
கொட்டியபொன் தேறுமெனக் கொள் பயிரும் காணத்
தீராத நாணமுற்று தலை குனிநெற் கதிர்கள்
தென் திசையின் காற்றணைக்கச் சல சலக்கு மழகே
வேராக நாட்டில்வளம் விளைக்கு மிடம்தானும் 
வெகு வனப்பே அழகிலிது விலைமதிக்கா வகையே 

தேராக அசைந்துவரும் தேவதையோ பெண்ணில்
தினம் ஒளிரும் அழகுதனும்  தேர்வினி லோர்வகையே
நாராக மலர் தொடுத்து நறுமணத்தில் மாலை
நாம் வணங்கும் தெய்வ மிட நேர்வதும் ஓரழகே
தாராத இன்பமுடன் தென்றல் வந்து நீவும்
தண்பொழில் நீர் துள்ளும் கயல் தாமரையின் பூவும்
சேராது நீருருளச் செய்யும் அதன் இலையும் 
சொல்லின் எழில் மேதினியில் சிறப்புடைத்தன்றோ

வானாற நடைபயிலும் வளை முகிலின் ஓட்டம்
வந்திடையில் மின்னுகின்ற இடிமழையின் தூறல்
பூநாற மலர் தேடும் புள்ளினமும் வண்டும்
போகு மெழில் வான்பரப்பில் புள்ளியெனக்காணும்
வீறாக நடைபோட்டே விரைந்து காளை ஓடும்
வெகுண்ட யலில் இருந்தஒரு வான்குருவி ஓலம்
ஆநூறாய் அற்புதங்கள் ஆக்கியதார் உலகில்
அழகு தனும் இயற்கையதன் அழகு பெரும் அழகே

*******************

மாறும் இயல்போ


மலை போலும் நிலைகொண்டு
.. மாறாது எதுதானும்
.. மாவுலகில் நிலைப்பதுண்டோ
கலை கொண்ட வாழ்வதிலும்
. காணுபவை எல்லாமே
.. கரைகாணும் வரை நிற்குமோ
அலை என்று மனம்கூறி
.. ஆக்கியதோ இந்நாளில்
.. அக்கரை பச்சை யென்றே
நிலைகொண்டு திசை மாறின்
.  நீதியிலை எனநீயும்
.  நெஞ்சமே அழுவதேனோ

தலைகொண்ட விதியென்று
.  தகுதிக்கே ஒவ்வாத
..  தரம்காண ஏற்றும் விதியே
விலையென்று வகைகூறி
. விற்கவெனப் பொருளீந்து
. விற்றபின் வேண்டிநின்றால்
குலையென்றே ஒன்றாகக்
. கூட்டாக வாழ்ந்தும்பின்
. கூறாமல் விட்டும் ஓடும்
நிலைகொண்ட வாழ்வுமிது
. நெஞ்சமே  நீ ஓடும்
. நிலை தன்னைக் குறை கூறவோ

சிலையென்று கணம்தானும்
. செய்வதும் அறியாது
. சிந்தனை மருகி நின்றே
உலையென்று கலைபேசும்
.  உள்ளமென்ப தோய்வின்றி
.  உலகெங்கும் தேடிஓடி
இலையென்றும் ஆனபின்னே
..  இருப்பதுமென் இல்லாமை
.  இருப்பதே இயல்பொன்றாக
தொலை தூர அடிவானில்
.  திகழும் அனல்கூடும்வரை
.  திடமும் கொள் எந்தன்மனமே

விதியும் மதியும்


நில வொளிர்ந்திட வெண்முகிலதை மூடும் - நல் 
  நினை வெழவொரு விதி யெழுந்ததைச் சாடும்
பலமிருந்திடும் போதிலு முயிர் தானும் - ஒரு
  பழிசுமந்தெமை பாரென உளம் வாட்டும்
நிலமிருந்துமென் வாழ்வதிலென்ன லாபம் - எனும்
  நினை வெழுந்துயிர் விடமனமதும் நாடும்
குலமழித்திடப் போய் முடியெனும் தாகம் - வந்து 
  குமைந் தழியுமவ் வேளையில் ஒளிவேண்டும்

மதி மறைந்திடக் கதிர் விடியலில் தோன்றும் - நம்  
  மதியிழந்திடும் வேளையில் ஒளிவேண்டும்
புதிதென அடிவான் சிவந்தொளி ஏறும்  - அங்கு
  பூவிதழ் தொடப் போய்வரும் தென்றலோடும்
முதிர் அலைசுனை தனில்சல வென ஓடும் -  ஒளி
  முகமதில் நதி யெனப் புரளு முற்சாகம்
கதியிழந்த தன்  நிலை திரிந்திடும் போதும்  - அங்கு
  காண் மனதிடை ஓங்கிடும் பெரு ஞானம்

அறிவென்ப தெது மனதிடை எழும்சூர்யன் -  அது
  எழ விடிந்திடும் இருள் மறைந்திடும் வாழ்வும்
நெறிகொளும் நெஞ்சில் நிறைவொடு வரும் காலம் -அது 
  நெடுவிரி பெருவானிடை  அளவாகும்
குறிகொண்டு பெரும் அறிவெனும் இறைதானும் - இந்தக்
  குவலயமதில் நினை அறிவினை ஈயும்
பொறிமனதினில் உணர்வுகொண் டுமெந் நாளும் - நீ
  பொலிந்திடும் சுகம் வேண்டி நில் கரம் சேரும்

அறியென மனங்  கூறிடு மொளிதானும் - அந்த 
அருள்தரு மொளி பெரிதெனும் சக்தியாகும்
பொறி பறந்திடும் எரிமலையதன் வேகம்  - இன்னும்
புதுமலர் பெறும் எழிலெனும் மெருகோடும்
எறிதுளிவிரி பேரலை யெழும் ஆழி - அதில்
ஒளிபட அலைமினுங் கிடும்  எழிற்காட்சி
அறியிவை செயும் அருங்குணம் கொண்ட ஆட்சி - அது
அகிலமென் னுமிந்  நிலமிடை வருங்காட்சி

உயிர்தனும் எமதுடலுட னொன்று சேரும் -  நிலை
  உணர்வெனு மொருசூடெழு மசைவாகும்
பயிரென வளர்பாங்குடன் எமையாக்கிப் - பின்
 பறித்திடும் வரை நடந்திடும் செயலாற்றி
வயிற்றிடைப் பசி வெந்திடும் தீயூற்றி -  அதை 
  வழிந்திடும்தேன் சுவைகனி கொண்டும் ஆற்றி
கயிறென அன்புக் கட்டிட ஊஞ்சலாட்டி - அதில்
 கனவொடு  வாழ் கணி எனும்  நிலையாக்கி

ஓளியென நமதறிவினை மிஞ்சும் அறிவே - அந்த 
  உயர்வெழு பெரு வெளி யெனும்பிர பஞ்சம் 
ஒளிர்வது திண்ணம் உள்ளிடை அன்புகொண்டே - அதை
  உயிரென நினை ந்தெழு தொழு நிதமென்றும்
களிகொள்ள நின தரிதெனும் புவி வாழ்வில் - அருள்
   கரம்கொடுஎன  தரும் வரமதைக் கேட்டால்
ஒளிபெறும் நல முயர்ந்திடும்  புகழ் ஞானம் - உடன்
  ஒருபெருமறி வெனும் இறை வரம் நல்கும்

**********

அழகானது



வனைந்த கலயமும் உடைந்த நிலையென
வானிற் பிறைநில வேக
முனைந்து மறைமுகில் இருண்ட குறைதர
உருண்டு மதிவெளி யோட                
நனைந்த குளமலர் விரிந்த மலரல்லி
நினைந்து மகிழ்வினி லாட
வினைந்த எழிலிலும் புனைந்த தமிழ்க்கவி
விளங்கும் அழகழ கன்றோ

தனிச்சு கம்தரும் இனித்த மிழ்வழி 
இறைந்த ஏடுகள் கற்றே
பனிக்கு ளிர்தனில் மதுக்கொ ளும் மலர்ப்
படுக்கையமர் வண்டாகி
நனிச்சுவை தமிழ் இழைத்த கவிதனை
நினைத்துப் படித்திட வென்றே
இனிச்சை கொளுமனம் இயற்கையின் வரம் 
எடுத்த உணர் வழகன்றோ

கனிந்த மரமதி லிருந்த குயில்தனும் 
கிளர்ந்த மகிழ்வொடு கூவ
நனைந்த நறுமண மெழுந்த மலர்வன
மிருந்து தென்றலுமோட
குனிந்த கதிர்களும்  நிறைந்த கழனியில்
குலவக் கலகலத் தாடும்
முனைந்து சுவைதரப் பிறந்த கவிதைகள்
மேன்மை  அழகழகன்றோ

விளைந்த தாமரை விடிந்த வேளையில்
வெளுத்து வானடி காண
குழைந்தை கையிடை அளைந்த குங்குமம் 
குழைத்துப் பூசிய  தாக
நெளிந்த முகில்தனும் சிவந்து வானடி
எழுந்த ஆதவன் போற்ற
தழைந்த எழிதனும் திளைந்த மனமகிழ்
தரினும் தமிழ் அழகன்றோ

இழைத்த வலியொடு திகழ்ந்த வீரமும் 
எடுத்த தமிழ் மற வீரர்
நுழைந்த துயர்தனை நிறுத்தித் தமிழெனும்
நிறைந்த வளம்தனைக் காக்க
எழுந்தும் ஒருமுகம் இழைந்த பொழுதினில்
இறைமை தமிழ் வலி கொன்றார்
இழந்த உரிமையை எடுக்கும் நாளது
என்று மழகழ கன்றோ