Monday, 1 June 2015

இயற்கை என்னும் அழகோவியம்


மலைமுகட்டில் நிலவு நின்று மன்னவனாம் புவியை
மறைமுகிலின் திரைவிலக்கி மெல்ல எட்டிப்பார்க்கும்
கலைவடியும் ஒளிபரந்து காண மரத் திலைகள்
கண்டபடி கதையுரைத்து கலகலத்துச் சிரிக்கும்
அலையெழுந்ததே ஆர்ப்பரிக்கும் அடக்கமற்ற பெண்ணாய்
அதிவிரைந்து கரையடைந்தும் அல்லலுற்று மீளும்
குலை யிழந்த கனியெனவே கொள்ளொருவர் இன்றி
கொடுமை சின்னஞ்சிறு வயதர் குழம்பி மனம்சோரும்

தனமிழந்த ஒருவன்போலத் தாழ்ந்து வீசுங்காற்று
தனிமையிலே இனிதிலையென் றுடல் தடவி ஓடும்
மணமெழுந்த நிலையிலாடி மயங்க எம்மை தொட்டும்
மதுவின் போதை இல்லையென்று புழுதியள்ளி வீசும்
கனமிழந்த நெஞ்சினோடு கனிவுவரும் என்று
கருதிவான வெளியிலோடிக்கலையும் மேகம் சொல்லும்
பனியெழுந்து குளிர்இரவில் பச்சைப்புல்லைச் சேரும்
பகல் பிறக்கப் பனியுலர்வில் புல்நுனி நீர் சிந்தும்

குளிர்ச் சுனையும் கொடிமலரும் குங்குமத்து வண்ணம்
கொண்ட மலர்த் தாமரையும் குள அலையின் சத்தம்
வெளியலையும் வீசுமிளம் விண்பரந்த காற்றும்
விடுதலையென் றுலகமெங்கும் வலம்வருவெண் முகிலும்
தளிர் அழகும் தவளைகளும் தங்கும் எழிற்சோலை
தனிமையிலும் தருங்கனவும் தாவும்மனங் காணும்
ஒளிர்கனவும் உரைதமிழும் உன்னதமாம் கண்டேன்
உலகமதில் இயற்கைதனை உரைக்கும் `கவி மேன்மேல்

Sunday, 31 May 2015

அடடாவோ அடடா

தேன் கனிக்குள் நாவினிக்கும். தித்திப்பிட்ட தாரோ 
தெங்கிள இன் நீரருந்தத் தீஞ்சுவை இட்டாரோ
வானமதை நீலமென்றும் வையகத்தைப் பச்சை
வண்ணமுடன் தீயெரியும் விண்ணமைத்த தாரோ
ஊன் படைத்து ஓசைகொண்ட உள்ளிதயப்பேழை
ஓடித் தினம் சூடுஏற்றும் உள் உதிரக் கூட்டை
மேன் எழுந்த வான சக்தி விந்தையுறச் செய்தே
மேதினியில் ஆக்கும்வாழ்க்கை அடடாவோ அடடா

மீன்தெறித்து நீர் விடுத்து மேகம்காணத் துள்ளும்
மேலெந்தழுந்த வேகத்ததிலே மீண்டும்நீருள் ஆழும்
வான்பறந்த புள்ளினங்கள் வந்து மாலைசேரும்
வாழ்வதற்கு வானமல்ல பூமியென்று கூறும்
தானுயர்ந்த நேரமென்று சுற்றியாடும் பட்டம்
தன்னிலையில் வாலறுந்து தாவிச்சுற்றி வீழும்
ஏன் மனிதம்மட்டும் இன்னும் ஏழை மண்ணில் காண
ஏய்த்தும் உண்ணும் எத்தருக்கோ என்றும் வானம் சொந்தம்

தேன்சுரக்கும் பூவைத்தொடத் தென்றல் வந்துசேரும்
திங்கள் வானில் பொன்னிறத்துத் தேசு கொண்டு வீசும்
மீன் விழிகள் கெஞ்சல் கண்டு மோகம் தேகம் கொள்ளும்
மின்னல் மழை நீர்பொழிந்து தண்மை ,கொண்டு மாறும்
மான்பிரித்த மாயம்போலும் மங்கும் மாலைவாழ்வில்
மையல் கொண்டுழன்ற தேகம் மஞ்சம் காடு காணும்
தானறிந்த இன்பம்கண்டு தூரமென்ற உண்மை
தன்னிலை மறந்த விந்தை அடடாவோ அடடா

மேனெடுக்கும் வாழ்விலேது மாற்றத்தோ டேமாற்றம்,
மிஞ்சும் இன்ப மேதுமில்லை மேகத்தூறல் போலும்
கானகத்தின் காயும்நிலா கண்டதென் ஒன்றாகும்
கல்லறை செந்தீயழிக்கும் காத்ல்மேனி யாவும்
தேனகத்தில் கொண்டுமென்ன சிந்தை நேர்மைமாறின்
சென்றபாதை யெங்கும் மண்ணில் தீயெழுந்து வேகும்
ஆனதென் எடுத்துவேகம் அல்லல் போக்க அன்பாம்
ஆயுதந் தனைக் கொள்ளின்பம் அடடாவோ அடடா

சாணுயர்வில் முழஞ்சறுக்கும் செய் வினைகள்கூடி
சடசடவென் றிடிமுழங்கும் சுற்றிமுகில் ஓடி
தானுயர்ந்த நீர்வழிந்து வெள்ளமென்று ஓடி
தண்திரை கொள்சாகரத்தின் தன்மை வேறென்றாகி
பேணுகின்ற மாந்தர் கூட்டம் பிரித்தழிக்குமாடி
பேரழிவைக் கொள்ளும் இனம் ஏழைகளென்றாகி
காணுகின்றபோது தெய்வம் கொண்டதென்னநீதி
காலமென்னும் காரணம் கணக்கில் கொள்வதோடி?

கங்கைபோலும் பொங்கும் நீரும் கன்னங்களில் ஓடி
கன்னி வாழ்விர் கண்டதென்ன காமுகர் கையோடிப்
பொங்கிடும்,தமிழ்க் குலத்துப் பூவையர்க்ள் மேனி
பூவெனும் தன் மைவிடுத்துப் போவதெங்கு மாறி
அங்கவன் அழிக்க இன்னும் அஞ்சலென்ன கூடி
அன்னையின் நிலம் மறக்க ஆகும் துன்பம்கோடி..
செங்குலம் சினத்தல்கண்டு சொல்லவேண்டும் பூமி
’ செந்தமிழ் மெய்வீரம் கண்டோம் அடடாவோ அட்டா’

பெண்மை(ஆகா அடடா) -கற்பனை கவிதை

சந்தன வாடை யெழுந்துவர அயல்
சாமரை வீசிநிற்க
செந்தமிழின் இளமென்குரலில் இன்பத்
தேனிசை கானம்வர
அந்தபுரத்திரு மங்கையர்கள் வந்து 
ஆடிக் களித்திருக்க
சிந்திநின்றேன் இளம் புன்னகையை மன்னன்
சிம்மாசனத் திருந்தே

கந்தரூப கன்னிப் பெண்ணொருத்தி கையிற்
கொண்ட திராட்சைக்கனி
முந்திப் பழுத்த நல்முந்திரியும் அதை
முற்றும் மதுவிலிட்டு
வந்து நின்றாள் எந்தன் முன்னிலையில் வஞ்சி
வார்த்தை மறந்தவளாய்
செந்தேன் வதனத்தில் சின்னத்தனம் கண்டு
சென்றிடு என்றுரைத்தேன்

வண்ண ஒளிச்செறி வாடிடவும் அந்த
வட்ட முகத்து நங்கை
எண்ணப் புரிவற்ற சேதியொன்றை வந்து
ஏனோ வெளியுரைக்க
கண்ணும் கண்ணும் மோதிக் கொண்டனவோ அதன்
காரணம் ஏதறியேன்
அண்ணளவில் மனம் ஆனந்தமோ
அடடா ஈதென்னுரைப்பேன்

(வெள்ளிச் சலங்கைகள் ஆடிய வேளையில்)
வீர முரசொலிக்க
(துள்ளியிரு பாவை நர்த்தனம் ஆடிட)
தொம் தொம் எனநடந்தே
குள்ளச் சிரிப்புடன் முன்னெழுந்தான் பகை
கொண்டோன் பிறநிலத்தோன்
எள்ளிநகைத்தவன் முன்னே வந்தான் அட
என்னையும் வென்றுவிட்டான்

எந்தன்நிலை கையில் வாளுமிலை அங்கே
ஏவலர் யாருமில்லை
அந்தோ மடிந்தனன் இன்றெனவே யானும்
எண்ணீய வேளையிலே
இந்த நிலையினில் ஏந்திழையாள் கணம்
ஏதென எண்ண முன்னே
தந்தமெனும் எழிற்கைகளிலே கொண்ட
தோர் சிறு வாளெடுத்தாள்

வந்தவன் செந்தமிழ்க் கன்னியிடம்தோற்று
வீழ்ந்து கிடக்கக் கண்டேன்
செந்தமிழர் தன்னை என்ன நினைத்தனை
சென்றுவிடு என்றவள்
அந்தோ அதிசயித்தே நிலை கண்டனன்
ஆகா என்னேபெருமை
நந்தவனப் பூக்கள் தேன்சொரியும் அவை
தீயும் சொரிவனவா?

மன்னவனே இந்த அன்னிய நாட்டினன்
மாறும் வேடம் தரித்தே
நின்னிடம் வஞ்சனைகொண்டு நெருங்கியே
நிர்மலமாக்க நின்றான்
இந்நிலை சொல்லவே வந்திருந்தேன் தாங்கள்
இன்னிசையில் லயித்தீர்
அந்தநிலையினில் காத்திருந்தேன் ஆனால்
ஆனால் அதற்குள் என்றாள்

நல்லது பெண்ணே உன் வீரந்தனைஇன்று
நான் எதிர்கண்டுகொண்டேன்
மெல்லியலாள் எண்ணம் வல்லவளாம் இந்த
மேதினியில் உயிர்கள்
எல்லையற்றே உருவாக்கும் பெருஞ்சக்தி
ஏற்றவளாயினும் தன்
இல்லமதில் வெகு மென்னுணர்வில் இன்பம்
ஈயும் குணத்துடையாள்

பெண்ணவள் மெல்லிய பேச்சுடையாள் அச்சம்,
பேதமை வெட்கம் கொண்டாள்
கண்மணியாய் எமைக் காத்து நிற்பாள் கணம்
கையிலும் வாளெடுப்பாள்
எண்ணமதி லின்பம்,தந்திடுவாள் இடி
மின்னலு மாகிடுவாள்
உண்மையிலே அன்பு வீரத்திலும் பெண்மை
என்றும் உயர்ந்தவளாம்

துன்பத்தில் காணும் இன்பங்கள்

இன்பமலர்த் தோட்டமென்றே இவ்வுலகாக்கி - அதில்
. ஏரியொடு ஆறு மலை புல்வெளி கூட்டி
மென்மலர்கள் பூவனமும் மாமரச்சோலை - யென
. மேதினியில் இன்பம் நிலைக்காட்சி யமைத்தாள்
அன்புவழி செல்லும்வலைக் காந்தமமைத்து - அதில்
. ஆடியோடும் போதுமுள்ளே பாசமிழைத்து
தன்னுணர்வில் கூடுமொரு இனபமும்செய்தாள் - பின்
. தவித்திருக்கப் பிரியுமொரு வேதனைதந்தாள்

எங்கும் ஒளி பாயும் இளஞ் சூரியோதயம் - பின்
. ஏகாந்த நிலவொளிரும் பொன்னெழில் தோற்றம்
மங்கைமனம் சேர்ந்திசைக்க மன்மதராகம் - என
. மாற்றங்களும் மாறுதலில் மாமகிழ்வீந்தாள்
பொங்கிவரும் ஆறெனவே பூம்புன லூற்று - அது
. போகும்வழி கூடல்மரம் பூந்தளிர் நீட்சி
தொங்கும்சுவை மாங்கனிகள் தின்றிடும் பட்சி - கூட்டித்
தேமதுர கோலமென வாழ்வை யமைத்தாள்

சிங்கமொடு சீறும்கொடுபாம்புகள் காணும் - இன்னும்
. சொல்லடங்கா கோரமுக தோற்றங்கள்தானும்
பங்குபெறும் காட்டிடையே புள்ளியிட்ட மான்
. பதுங்கி வாழச் செய்யும் வகை அச்சமு மீந்து
இங்கவைகள் ஒன்றெனவே வாழவும் விட்டாள் - அதில்
. இனிமைதனை. தேடும்வழி இடர்களும்செய்தாள்
அங்கம் அறுத்தழிவில் இன்பம் காண்பர் தம்மைக்
. ஆதரித்துக் காப்பதிலே ஆனந்தமுண்டோ

எங்கெதுதான் இல்லையென்றால் ஏக்கமுண்டாகும் -மனம்
. எண்ணியது கையில்வர இன்பமென்றாகும்
பொங்குமின்பம் கண்டுமனம் ஆனந்தம்மேவ - இந்தப்
. பூமியிலே துன்பம்தனை கொஞ்சமாக்கினாள்
தொங்குமுயர் வானிடையே தோரணங்களாய் - முகில்
.. துரத்தமதி ஓடியொளித் தேகவிட்டவள்
கங்குல் விடி காலையிலே கதிரினை ஓட்டி -ஒளி
. காணும்பல மாற்றங்களாய் கணித்தபின் ஏனோ

தோற்றம் பெறும் மேனிதனும் இன்பம் காணவே என்று
,. துன்பம் தனை கொள்ள விடக் குவலயமாந்தர்
தூற்றியேவே றினமழித்து துடிதுடிக்கையில்`
. துன்பமுறும் வலிமரண ஓலம்கேட்டதில்
வீற்றிருக்கும் மன்னர் படை குடிகள்யாவுமே
. வெறிபிடித்து இன்பங்கண்டே வெற்றியென்றாறடி
ஆற்றும்செயல் அகிலமதில் எப்படி வந்தே
. அன்பழித்து இன்பமும்கொன் றெழுச்சிகொண்டதோ

பெண்ணிலையேல்.!

ஆணைப் பெண்ணையிங்கு ஏன்படைத்தாள் மனம்
ஆனந்த மேவிடும் அன்பு வைத்தாள்
வீணையின் நாத வுணர்வு செய்தா ளந்த
வேகுமுடல் தன்னில் விந்தையிட்டாள் 
ஆணையிட்டே வாழ்க்கை நாடகத்தி லவர்க் 
கேற்ற பலகுண வேடமிட்டாள்
துணை நிகர்த்தன தோள்வலிமை யெண்ணத்
தூசியென்றே அந்தமாக்கி வைப்பாள்

வானை நிலாவினை வெண்முகிலும் மழை
வந்தே மறைந்திடும் வானவில்லும்
தேன்மலர் வைகறை, தீப ஒளி ரதம்
திக்கு கிழக்கெழும் சூரியனும்
ஆனை படை அரசாளுமிள மகன்
ஆக்கி அனைத்தையும் காக்கவிட்டே
பூனை எலியுடன் காணும் பகை நிகர்
பூமியில் இம்சைக்கும் பாதை வைத்தாள்

காலை யரும்பிடும் பூவைக் கொள்ள வைத்துக்
கால்நடைப் பாதையில் முள்ளுமிட்டாள்
மேலைத் திசையினில் வாழ்வில் பயங் கர
முள்ளதென்றோ செம்மை வண்ணமிட்டாள்
சேலையணி மாதர் கூந்தலென எம்மை
சேர்த்து அறியாமை பின்னலிட்டே
ஓலைதனில் எழில் பாடுங்கவி நயம்
ஏற்ற இலக்கியம் காண வைத்தாள்

கல்லோடு கல்லை அடுக்கிய கோட்டையில்
காற்றுப் புகச்சிறு சாளரங்கள்
துல்லிய மாயொளி தூறும் நிலாவெழில்
தோன்றிட மாடங்கள் கட்டிவைத்தே
செல்லும்வழி தனில் வண்ணச்சரம் தொங்க
சிற்ப வினோதச் சிலை யரங்கம்
பன்னரும் பேரெழில் பார்த்து செய்துமென்ன
பெண்மை கலப்பின்றி ஏகாந்தமே!

அல்லன வென்றதைத் தள்ளுவதென் அன்னை
யானவளை இறை பாதிகொண்டார்
சொல்லுங்கவி சூடும் பூவைகொண்டாளவள்
சுட்டி எழில் சொலல் பாவமென்றோ
நல்ல தமிழ் எந்த நாட்டில் கொள் சேற்றிடை
நட்டநடுவே விளைந்திடினும்
அல்லி செந்தாமரை போலும் அழகினில்
ஆடிநிற்கும் அது இன்பமன்றோ !

தந்தவிழும் சிந்தைவளம்

தந்தவளும் தந்தவளம் தந்தவிழும் தீங்கவிதை 
சந்தமெழா நின்றுவிடலாமோ
வந்துலவும் தென்றலெனும் சிந்துகவி நின்றுவிடக்
குந்தகமும் கொண்டுவிழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
இந்தமொழி எந்தனுயிர் என்றுயரம் நின்றபடி
வந்தவழி சென்று விடலாமோ

சிந்தனையில் இன்பமிடும் நந்தவனத் தென்றல் தனும்
வந்துடலை மென்வருடும் இன்றோ
மந்தமெனக் கொண்டுகவி சுந்தரமுமின்றி அவை
முந்தும்விளை வின்றி விழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
உந்தும் அலை தன்னில் அது தந்தனதோம் என்றுநடம்
விந்தை கொளல் என்று முடிவுண்டோ

பொன்னெனவும் மின்னுமொளி அந்தியில் மறைந்தசுடர்
பின்னரொளி கொண்டுதயம் காணும்
சின்ன ஒளிச் சந்திரனோ தன்னில் நலிந்தென்ன பயம்
முன்னையெனப் பொன்னுடலும் விம்மும்
அன்னவகை புன்னகையை என்னிதழில் தந்தவளும்
சொன்ன விதியென்ன வகையாமோ
என்னதடை செய்திடினும் ஏங்கும்மனம் தண்மைத்ரும்
தென்பொதிகை தென்றலென் றாகாதோ

எண்ணமலர் கண்மலரப் பண்ணுமிளங் கற்பனைகள்
மண்ணிலழ கின்கவிதை தாரும்
விண்ணிலசை வண்ணமெழும் வேகவிசை காந்த அனல்
திண்மைவலி சக்தியென் தீதானும்
பெண்ணெனுமோர் அன்னைதனைப் பெற்றவளைத் தந்தவளைக்
கண்ணெனவே போற்றும் உளம்கொண்டேன்
மண்ணிலெனைக் கண்டிளகும் உள்ளமதைக் கொண்டவளே
மென்கவிபொ லிந்தெழச் செய்வாயோ

கற்கைநெறி விற்றலுண்டோ விட்டகலா,, பொற்குவையாம்
தற்பெருமைகொள்ள வைத்தபோதும்
சற்குருவென் றிற்றைவரை உற்றகவி செய்மனதை
சற்றும்விடா தட்டி யெழச் செய்தோர்
நற் குணத்தை நானறியா நாவிலெழும் வார்த்தைகளை
இற்றைவரை கொண்டதமிழ் ஏடும்
சுற்றி இழை கொண்டுருட்டி கட்டிஅயல் வைத்துவிடக்
காணுவனோ கண்விழிப்பனாமோ

பாரில் வாழ்வைப் பார்


பட்டு விரிவானில் விட்டே இருள் போகப்
பார் உதயக் கதிர் பார்
மொட்டு விரிந்தது மல்லிகையும் முல்லை 
முற்றத்தில் பூத்தன பார்
சிட்டுகுருவிகள் செட்டையடித்து வான்
சுற்றிப் பறப்பதைப் பார்
சுட்டுவிடும் காலைச் சூரியன் வானிலே
செக்கசிவந் தெழப் பார்
.
சட்டசட என்று செட்டைஅடித்தொரு
சேவலும் கூவுது ஏன்
வட்ட கதிரவன் வானில் எழக் கண்டே
வாழ்த்தியும் கூவுது பார்
குட்டிப் பூனை ஒன்று கட்டைச் சுவரேறிக்
கொட்ட விழிக்குது பார்
எட்டிப்பாய மனம் இங்கோ அங்கோஎன்று
ஏங்கித் தவிப்பதும் ஏன்?
.
தட்டத் தட்டச் சத்தம் ’டும்’மென் றடிக்குது
கொட்டும் முரசொலி கேள்
திட்டி குரைத் தொரு நாய் அயல் ஓடுது
தட்டும் ஒலிக் கஞ்சித்தான்
நெட்டை மரத்தினில் நீண்டகிளையொன்றில்
நின்ற பச்சைக்கிளி பார்
எட்டிபிடித்ததில் உண்ணப்பல கனி
உள்ளது ஆயினுமோர்
.
வட்டப் பழமொன்றை வெள்ளையணில் ஒன்று
வந்து ருசிப்பதைப் பார்
திட்டம் இட்டு கிளி சென்|று கலைத்ததை
தின்ன தொடங்குதுகாண்
தட்டிப் பறிப்பது தர்மமல்ல பிறர்
தன்னை வதைப்பது கீழ்
கொட்டிகிடக்குது பூமியில் ஆயிரம்
கொண்டு மகிழ்ந்தென்றும் வாழ்!