Friday, 25 September 2015

மனம் ஒரு குரங்கு



எத்தனை ஆண்டுகள் பித்தனுடன் யானும்
இப்படி வாழ்ந்திடுவேன் - விழி
பொத்தியதாய் இவன் போகும் வழிகண்டு
பொல்லாத் துயரடைந்தேன்
சத்தியம் என்றொரு பத்தியம் உண்டென்று 
சற்று எடுத்துரைத்தேன் - இவன்
புத்துல கென்றொரு அர்த்தமில்லாவழிப்
போக்கினைக் கையெடுத்தான்

வைத்த காலில் முள்ளு தைக்கு தையோவென
எத்துணை சத்தமிட்டேன் - இவன்
சித்தியற்ற வழி நட்ட நடுக் காட்டில்
சென்றலைந்தே சிதைந்தான்
மெத்தப் படித்தவன் என்றொரு போதையை
முற்றும் தலைக்கெடுத்தே - இவன்
நித்தம் நெஞ்சமழ நீரும் விழிகொட்ட
நஞ்செனு மெண்ணமிட்டான்’

சித்தம்மறுகியோன் செய்கலைவண்ணத்தில்
சித்திரம் ஒன்றெழுதிப் - பின்னே
வைத்த எழிலுரு மீது குற்றுமிட்டு
வாழ்வழகைக் கெடுத்தான்
பத்துகுணங்களும் கொண்டவனாய் உடல்
பக்குவம் தான் கெடுத்தே - காணச்
சொத்தெனக் குப்பையும் சேர்த்து மகிழ்வொடு
மெத்தையென்றே கிடந்தான்

கொத்துமலர் கொண்டோர் சோலை பக்கமுண்டு
கூடிநடப்போ மென்றேன் - இவன்
சித்தம்பிளறியே சுந்தரப் பூங்காவைச்
சொத்தையென மறுத்தான்
புத்தம் புதுக் காலை புன்னகை கொள்ளெனப்
புத்தியெடுத் துரைத்தேன் - விட்டே
செத்தேயெரி சுடுகாட்டினைக் கண்டதும்
சென்றங்கு தூங்குகிறான்

வித்தையில்லை ஒரு முற்றும் வலிமைகொள்
விண்ணெழில் மேகத்தப்பால்
நித்தியமாய் ஒளி நிற்குதே எண்ணென்று
நற்செயல் நானுரைத்தேன்
அத்தனைதூர மிருந்தெமை ஆளுமச்
சக்தியை ஏன் மறந்தான் - சொல்ல
எத்தன் விழிமூடி நித்திரைபோலங்கு
ஏனோ பாசாங்கு செய்தான்

காதலா சே.. சே.. எனக்கொன்றும் தெரியாது!


**************
பசியென்றால் உணவுண்டு கொள்வர் - அதைப்
பலநூறு வகையாக்கிப் பார் என்று சொல்வர்
ருசியென்றா லிதுவென்றே மெச்சி - அதை
ரசியென்றே சுவைஆறு வகைசெய்து ஈவர்
பசிகொண்ட உணர்வொன்று கண்டால் - அதைப்
பலவந்தம் செய்தேனும் பதுக்கென்று கூறி
கசிகின்ற துயர் தன்னை தீரா - அவர்
கண்மீது நீர்பாயக் கதறென்று கொல்வர்

உயிர் கொல்லும் உணர்வொன்றும் உண்டு - அது
உன்மத்த மென்றாக்கத் தலை பித்தம் கொள்ளும்
வயிறிங்கே படும்பாடு கொஞ்சம் - இந்த
வலிமை கொள் நினவங்கே பெரும்பாடு செய்யும்
தயிருண்ணக் குடல் வேட்கை தணியும் - இத்
தவிப்புக்கு எது வேண்டும் தரும் பாதைவிட்டே
துயிலுக்கும் இயல்புக்கும் .துன்பம் - தந்தே
தொலையென்று மதிகெட்டே தெருவிலே தள்ளும்

வெயிலுக்குள் நின்றே பாருங்கள் - அதன்
வெப்பத்தில் துடிக்கின்ற சமுதாயம் ஓனறாம்
பயிலுங்கள் எனப் பாடத்தோடு - இங்கே
பத்தென்ற வயதோடு பயிலென்று கூறி
செயலுக்குள் எதுவாக்கம் காமம் - இந்த
செய்முறை கொள்ளும் நின் தேகங்கள் என்றே0
புயலுக்கு பலியாகும் தன்மை - இன்றிப்
புரிந்துள்ள அறியாமை தொலைத் திடச் செய்ய

அயலுக்கு மேல்நாட்டில் இன்றோ - எங்கும்
அவர்கொள்ளும் கல்விக்குள் காதலும் 0பாடம்,
பயிலென்று தருமெண்ணம் பாரீர் - அது
பலம்கொள்ளும் அறிவென்ப உணர்வினைத்தள்ளி
உயிருக்கு பெரும் வாழ்வு நல்கும் - கொண்ட
உடல்செய்யும் வேட்கைக்கு ஒருபாதை கிட்டும்
பயிருக்கு நீரூற்ற வேண்டும் - இந்தப்
படும்பாட்டுக் கொரு தீர்வு பார்த்தன்பு ஊற்றும்

......................................................................................................................
இத்தோடு நிறுத்திக்கொள்கிறேனே!\
காதல் ஒழித்து மறைப்பதற்கல்ல. பேசுங்கள். தெளிவடையுங்கள்
...................................

என்றும் அருகில் நில்!



நீயிருந்தாய் என்னருகே நினைவெழுமென் கற்பனைகள்
நெஞ்சிலிசை கொண்டினிமையாகவே
தாயிருந்தால் காணும் சுகம் தந்தவள் நீ தந்ததனால்
தானுமெழில் கொண்டொரு சொல்லாகவே
போயிருந்தால் கோவில் சிலை போட்டுடைக்க மண்கலயம்
போகமென்னும் மாயைகொண்ட தேகமே
வாயிருந்தால் வாழ்ந்திடலாம் வாடி நின்றால் தேய்ந்திடவும்
வாழ்க்கைகொண்ட மாயநிலை மாறவே

சேயழுதால் தாயணைக்கும் சேர்ந்தகொடி மரமணைக்கும்
சீறிவரும் மாநதியுமோடியே
தூய கடல் சேர்ந்திணையும் தூக்கம்விழி கொண்டணையும்
துன்பம்வந்து வாழ்வணைக்க முன்னரே
தேயுங் குறைத் திங்களெனத் தோன்றிடாது வாழ்வுதனை
தீயவழி மீண்டு நலம்வாழவே
போயணைப்பாய் உள்ளமதில் பூத்த ஒளி பொலியுவண்ணப்
பேரொளியாம் ஞானசக்தி ரூபமே

கானகத்தில் காணும்மரம் காற்றடிக்க ஊதுமூங்கில்
காட்டருவி கொட்டுமோசை கூட்டியே
வானகத்தில் வெள்ளிசிரித் தாட மறை வெண்முகிலில்.
வீழ்ந்துறங்கிச் செல்லும் நிலா கூடவே
மீனகத்தில் கொண்ட திரை மேவிஎழுங் காற்றினொலி
மீறி எழும் ஆழியலை ஆக்கியே
தானகத்தில் எம்மையெண்ணித் தந்தவுடல் கெட்டுவிட
தாங்கிஎமை ஆட்கொள்ளுவாள் சோதியே

யானை தன் பலமறியா


காலையிலே பரிதிவட்டம் அடிவான்தோன்றக்
கலகலத்தே யாடும் மரக்கிளையின் இலைகள்
ஓலைஇழை தென்னை தருகிடுகால் வேய்ந்த
ஒர்குடிசை யோரத்தில் நின்றேன் யானும்
சோலைமலர்த் தென்றல் வரும் வாசங்கொண்டே
சுந்தரமாய் நாளொன்றின் செழித்தோர் காலை
மேலைவான் உச்சியினுக் கேறும் நாட்டம்
மெல்ல எழும் சூரியன்கொண் டெங்கும் தாவ

சேலையணி மாதொருத்தி சிறிதாம் குடிசை
சேர அயல் நின்றுவிழி சிந்தக் கண்டேன்
வாலையவள் பருவத்தின் வனப்பைக் கொண்டாள்
வாலிபனோ அவள் கணவன் வீம்பில் நின்று
சாலைதனில் போய்வருவோர் சாட்சிநிற்க
சேர்த்தொருகை சிறுதடியால் சீண்டக்கண்டேன்
நூலையிடை கொண்டவளோ நெஞ்சம் விம்மி
நிலையஞ்சி தலைகுனியும் செயலும் கண்டேன்

ஆசைகளைச் சுமந்தின்பம் தேடும் வாழ்வில்
அகத்திடையே உருவாக்கும் வேட்கைதானும்
காசைப் பணம்பெரிதென்றே கண்டே நெஞ்சும்
காணதே அன்பென்ப கருத்தில் கொள்ளா
தேசையுடை திலக நுதல் தீட்டும் மங்கை
திருத்தலங்கள் தெய்வம் எனக் கண்டும் பின்னர்
மாசையுடை வாழ்விலந்தப் பெரிதாம் ஒளியை
மனமெண்ணி உருகிவரம் கேட்டல் வேண்டும்

தேசமெங்கள் தூயமண்ணில் தோற்கா பெண்கள்
தினமெடுத்த வாழ்வில் பெரும் திண்மைசக்தி
மோசமற முற்றும்துயர் மறைந்தே போக
முடிவினிலே வெற்றிதனைக் கொள்ளத்தானும்
வீச வருங்காற்றுக்கோர் வலிமை உண்டாம்
வெகுண்டெழவும் புயலாகும் வீரம் உண்டு
நாசமெலாம் அழிந்து பெரு நன்மைகூடும்
நாளுமவள் சக்தியினை வேண்டிக்கொண்டால்!

பெண்ணவளில் பெருஞ்சக்தி பிணைந்தே காணும்
பேதைகளோ தன்வலிமை தாமேயறியா
மண்ணிடையே மாகரியை ஓட்டும் பாகன்
மனதெண்ணி வலிமைகொண்டான் என்றேயஞ்சி
புண்-படவே அங்குசத்தால் குத்தும்போது
பிளிறி யதன் வேதனையைதாங்கும் யானை
கண்படவே பெண்டிர் தமை கடையில் வைத்துக்
கச்சிதமாய் தன்வலிமை கொண்டே காண்பர்

வெண்ணெய் என உருகியவள் துன்பம் நீக்கு
வேண்டும் பலம் என்றெண்ண வந்தே சேரும்
வண்டளையும் மென்மலரின் வண்ணங் கொண்டே
வலிகுன்றி உள்ளோமென் றன்னையர் எண்ணா
உண்டுசெயும் மனித வர்க்க உரிமை கொண்டாள்
ஒளியவளைச் சக்தியினை வேண்டிக்கொண்டால்
பண்டுபல காலமெலாம் பணிந்தே வாழ்ந்த
பாடு ஒழிந் தாற்றலுடை பெண்மை தோன்றும்

சக்தி தருவாள்!



சக்தி என்று சொல்லுவோம் சரித்திரத்தை வெல்லுவோம்
பக்தி கொண்டும் ஆடியே பரத்தி லின்பங் காணுவோம்
எக்கதிக் கென் றாளினும் இயற்கை தந்த தாயவள்
சக்கரம் கைச் சுற்றுவாள் சந்ததிக்கென் றாகுவோம்

செக்கிழுத்த மாடெனச் சுழன்றுலாவி வாழ்விலே
சக்கையாகிப் போய்விடாச் சக்திபெற்று வாழுவோம்
சுக்குநூ றுடைந்திடும் சுந்தரப் பொன்வெள்ளிகள்
எக்கனல் பொறித்தழல் ஏகுமந்த வான்வெளி

பக்குவத்தைக் காத்துமே பனிக்குளிர்ந்த சூழலில்
உக்கிரத்தை கொண்டொளி ஒளிர்ந்திடும் வெம்சக்தியை
விக்கினத்தைப் போக்கிடு விரைந்து வா தமிழ்ப்படும்
துக்கமும் துயர்கொள்ளும் துடிப்பினை நிறுத்தியே

மக்களாம் பழங்குடி மாந்தர் கெட் டழிந்திடா
செக்கச்செந் நிறம்பெறச் சிந்தை யேங்கி வெந்திடா
வக்கணைச் சொல் பேசியே வந்த நச்சுப் பாம்புகள்
எக்களித்துக் கொத்தியே இடர்படுத்தும் பூமியில்

நக்கவும் இனித்திடும் நல்லதேன் சுவைப்பென
மிக்க அன்பு பொங்கிட மேன்மை கொள்ளும் வாழ்வு தா
தொக்கி வான் சுழல்புவி சுதந்திரத்தில் வாழ்ந்திடச்
சிக்கல் தீர்த்துச் சக்தியே, செய்நலமென் றாடுவோம்

எப்போது வேண்டும் எது

......................................
1.
பேசா மௌனம் கொள் - உன் 
பெரிதாம் வாழ்வை இறை நோக்கும்
பேசா மௌனம் கொள் - உன்
பின்னால் ஞானத்தொளி தோன்றும்
‘பேசா மௌனம் கொள் - உன்
பிறழ்வும் முரண்வும் பலியாகும்
பேசா மௌனம் கொள் - உனைப்
புகழும் பெருமை தேடிவரும்

பேசா மௌனம் கொள் - உன்
புலமை ஆற்றல் பரந்துவிடும்
பேசா மௌனம் கொள் - உன்
பிழைகள் புரிந்தே வழிகாண்பாய்
பேசா மௌனம் கொள் - அந்தப்
பெரிதாமொளியும் உனில்சேரும்
பேசா மௌனம் கொள் - உன்
பிறவி பயனென் றறிவாய் காண்

2.
வேண்டும்போதே சொல் - விட்டால்
வினைகள் முற்றிக் கலியோங்கும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விலகும்நேர்மைவிதி சாடும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விட்டேமதியும் உறங்கும் காண்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விவரம் அறியாப் பகைகூடும்

வேண்டும்போதே சொல் - விட்டால்
வீணாய் பழிகள் உனதாகும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
வீழ்ச்சிக் கேதாய் மதிசோரும்
வேண்டும்போதே சொல் - விட்டால்
விளைவோ நடைகொள் பிணமாவாய்
வேண்டும்போதே சொல் - விட்டால்
‘வீடும் தள்ளக் காடேற்கும்

3.
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சில் உதயத்தொளி் காணும்
பேசிக்கொண்டெழுவாய் - உனைப்
பார்த்தே யுலகம் துயில் நீங்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
மூச்சில் உணர்வே மொழிகூறும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சும் மேலாம் சபையேறும்

பேசிக்கொண் டெழுவாய்- உன்
பேச்சின் உண்மை வலுசேர்க்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சின தீரம் பகை வெல்லும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
பேச்சின் உண்மை அணிசேர்க்கும்
பேசிக்கொண் டெழுவாய் - உன்
வார்த்தை சுதந்திரப் பரிசீயும்

********************************
சாரம் :
(பேசாதிரு ஆனால் தேவைப்படும்போது பேசாமல் இருக்காதே!)

Thursday, 24 September 2015

நம்பிக்கை கொள் நலமாகும்

(வலைப்பதிவர் திருவிழா மற்றும் தமிழ் மினிலக்கிய கவிதைபோட்டி 2015 க்காக எழுதப்பட்டது)

விண்ணெழுந்த புள்ளினங்கள்  வானெழுந்து தேடும்
வீறெழுந்து மேனிசுட்ட வெய்யில் மீண்டும் தோன்றும்
மண்பிறந்த மென்மலர்கள்  மஞ்சள்செம்மை வண்ணம்
மாற்றமென் றிதழ் பிரிந்தும் மாலை யொன்றில் கூடும்
தண்ணலைகள் நிம்மதியைத் தேடியோடி மாளும்
தாங்கிடும் நீர் தாமரைக்குத் தந்தனத்தோம் போடும்
எண்ணவே இனிக்கு மாங் குயில் படித்தகீதம்
இத்தனை எழில்படைத்தாள் அன்னை சக்திதானும்

வெண்ணொளிக் கதிர்சிறந்து வானமேறக் காணும்
வீழ்ந்த  சின்னத் தூறலை விரும்பித் தோகை ஆடும்
விண்வளை விதானத்தோடு வில்லின் ஏழுவண்ணம்
விந்தை காண் உன்வாழ்வு மெந்தன் விம்பம்கொண்டதென்கும்
பெண் குழைந்து பேச நெஞ்சம் பூவில் வண்டென் றாகும்.
பேதை உள்ளம் போதைக் கள்ளை பார்வைமொண்டு வார்க்கும்
அண்மைகண்டு திண்மைகெட்டு ஆணின் நெஞ்சம்வேர்க்கும்
அச்சம் விட்டு பெண்மை கிட்ட ஆனந்த வாழ்வேங்கும்

கண்ணில்காணும் காட்சிகொண்ட காலம்செய்யும் மாயம்
காதலின் இயற்கையின்பக் காட்சியை யும் மாற்றும்
எண்ணம்மீது வேட்கைபற்றி இச்சை கொண்டு பாயும்
இல்லை யென்றபோது துன்பம் ஏணி வைத்தேஏறும்
தண்ணலைத் தடாகத் தூடு தாக்கும் கற்கள் வீழும்
தன்னைமீறி நீரெழுந்து தன்மை கெட்டேமூடும்
புண்ணெழுந்த தாக நெஞ்சம் புன்மை கொண்டுவாடும்
புத்துணர்வுகொள்ளச் சக்தி அன்னைவேண்டு ஆகும்


இது எனது சொந்தப்படைப்பாகும். இப்படைப்பு, “வலைப்பதிவர் திருவிழா-2015” மற்றும் தமிழ்இணையக் கல்விக்கழகம் நடத்தும் “மின்தமிழ் இலக்கியப்போட்டிகள்-2015“க்காகவே எழுதப்பட்டது.இது  வேறு எந்த இடத்திலும் வெளியிடப்ப்டமாட்டாது என்ற உறுதிமொழிகளை வழங்குகிறே]ன் 
----   கிரிகாசன்.