Thursday, 21 May 2015

தந்தவிழும் சிந்தைவளம்


தந்தவளும் தந்தவளம் தந்தவிழும் தீங்கவிதை
சந்தமெழா நின்றுவிடலாமோ
வந்துலவும் தென்றலெனும் சிந்துகவி நின்றுவிடக்
குந்தகமும் கொண்டுவிழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
இந்தமொழி எந்தனுயிர் என்றுயரம் நின்றபடி
வந்தவழி சென்று விடலாமோ
சிந்தனையில் இன்பமிடும் நந்தவனத் தென்றல் தனும்
வந்துடலை மென்வருடும் இன்றோ
மந்தமெனக் கொண்டுகவி சுந்தரமுமின்றி அவை
முந்தும்விளை வின்றி விழுவேனோ
வெந்தகதிர் கண்டுகுளச் செங்கமலம் மென்னவிழும்
இன்தமிழைக் கண்டுமனம் அன்றோ
உந்தும் அலை தன்னில் அது தந்தனதோம் என்றுநடம்
விந்தை கொளல் என்று முடிவுண்டோ
பொன்னெனவும் மின்னுமொளி அந்தியில் மறைந்தசுடர்
பின்னரொளி கொண்டுதயம் காணும்
சின்ன ஒளிச் சந்திரனோ தன்னில் நலிந்தென்ன பயம்
முன்னையெனப் பொன்னுடலும் விம்மும்
அன்னவகை புன்னகையை என்னிதழில் தந்தவளும்
சொன்ன விதியென்ன வகையாமோ
என்னதடை செய்திடினும் ஏங்கும்மனம் தண்மைத்ரும்
தென்பொதிகை தென்றலென் றாகாதோ
எண்ணமலர் கண்மலரப் பண்ணுமிளங் கற்பனைகள்
மண்ணிலழ கின்கவிதை தாரும்
விண்ணிலசை வண்ணமெழும் வேகவிசை காந்த அனல்
திண்மைவலி சக்தியென் தீதானும்
பெண்ணெனுமோர் அன்னைதனைப் பெற்றவளைத் தந்தவளைக்
கண்ணெனவே போற்றும் உளம்கொண்டேன்
மண்ணிலெனைக் கண்டிளகும் உள்ளமதைக் கொண்டவளே
மென்கவிபொ லிந்தெழச் செய்வாயோ
கற்கைநெறி விற்றலுண்டோ விட்டகலா,, பொற்குவையாம்
தற்பெருமைகொள்ள வைத்தபோதும்
சற்குருவென் றிற்றைவரை உற்றகவி செய்மனதை
சற்றும்விடா தட்டி யெழச் செய்தோர்
நற் குணத்தை நானறியா நாவிலெழும் வார்த்தைகளை
இற்றைவரை கொண்டதமிழ் ஏடும்
சுற்றி இழை கொண்டுருட்டி கட்டிஅயல் வைத்துவிடக்
காணுவனோ கண்விழிப்பனாமோ

நிலா மங்கை

செவ்வானத் தில் நிலா சிரிக்கின்றதே - அதன்
சிங்காரச் செவ்வண்ணம் ஜொலிக்கின்றதே
கொவ்வைச் செவ்வாய்க்கென்ன முன்னானதோ இதழ்
கொஞ்சும் புன்னகைத் திங்கள் எனும்போதையோ
அவ்வை அங்கிருந்தாளோ நிழலாடுதே - அந்தோ
அவள்கூனல் விழிகாண முயலானதென்
இவ்வாழ்வின் எழில்பொங்கும் பொன்னூர்வலம் - இது
என்னாசைப் பெண்கொண்ட எழிலார்வதனம்

பொன்னிற் செங்கோல் கொண்ட அரசென்பதா - இங்கே
பொழியும் நல் நிலவெங்கும் நுழைகின்றதா
தன்னாட்சி பெரிதென்று தரைகொண்டதா - அது
தடுமாறா ததிகாரம் பெறுகின்றதா
மென் மாதர் தனைவெலல மலர்கொண்டதா - அதை
மதனேந்தும் வில் கொண்டு எறிகின்றதா
வன் னாண்மை தனைமுற்றம் வசங்கொண்டதா - உலா
வரும்போது திருமங்கை இதுவென்பதா

சின்னவர்நல் அமுதுண்ணக் கண்ணாடியுள் - அது
சிறைப்பட்டும் விளையாடிச் சிரிக்கின்றதா
நன்நீரின் சிறுஓடை இதன்மஞ்சமா - இவள்
நடம்செய்யக் குளிர்ப் பொய்கை எனும்மேடையா
என்னாகும் அல்லிக்குத் துணையல்லவா - எண்ணி
இரவோடு உறவாட நிலம் வந்ததா
தன்னாவல் தான்மேவி தவழ்கின்றதா - அதை
தலையோங்கும் அலைதுண்டாய் உடைக்கின்றதா

என்னாகும் இறை பாதி தலைமீதிலே - அதை
இருவென்று சொன்னாலும் வருகின்றதே
பொன்வானத் திடை நீந்தும் புது அன்னமா - நிலா
பிரபஞ்சச் சாம்ராஜ்ய இள நங்கையா
மன்னாதி மன்னர்க்கு மகளானதா - அது
மதுஏந்தும் மலர்வண்ண நிகர் கொண்டதா
பின்னாலே விரிவான எழில்தாரகை - கண்டு
பேசாது விழிகொட்டும் அழகல்லவா

Wednesday, 20 May 2015

அக்கரை சிவப்பு



அழகென்று தமிழ் சொல்லி அரங்கேறவா - இல்லை
அழவென்று நிலை கண்ட கதை கூறவா
எழவென்று மனம்கொண்ட இசைபாடவா - இல்லை
எழுந்தோடி நிலம் வீழ்ந்த தொகை கூறவா
குழுவாகி இனம்காத்துக் குலம் ஓங்கவே - கொண்ட
குறிதன்னும்  தவறித்தோள் உரம் போனதும்
தழுவென்று மரணத்தாய் மடி தந்ததும் - அதில்
தலைவைத்து இளம் பிஞ்சு தனை ஈந்ததும்

உளம்மீதில் வடுவாகி இருந்தேகொள்ளும் - எங்கள்
உயிர் செல்லும்வரை துன்பம் இ|ணைந்தே வரும்
களவென்று வழிகண்டு கயமை கொண்டோர் - எங்கள்
கடை வாசல் வழிகண்டும் கண்மூடினோம்
வளம்கொண்ட தமிழ் மண்ணில் நிலம்கொள்ளவும் - இங்கே
வந்தேயெம் குடிமண்ணில் விசமாகவும்
நிழல் கூட எமைவிட்டுப் பிரிகின்றது - இங்கே
நிலை கெட்டு தமிழ் வாழ்வு சிதைகின்றது

வயல் தோட்டம் கை விட்டுப் போகின்றது - அதை
வரும்கூட்டம் தனதென்று சொல்கின்றது 
இதைக் கண்டே உலகமுள் சிரிக்கின்றது - இவர்
உதைவாங்கும் இனமென்று பெயர் தந்தது
கனவுக்கு நிறம் தீட்டி அழகென்றது - அதைக்
கைமீது கொள்ளென்று பொய் சொல்லுது
மனதுக்குள் வெறிகொண்ட உலகம் இது - வெறும்
மரியாதை உடைபோட்டுத் திரிகின்றது

நடந்தே நாம் செலும்பாதை இருள்கொண்டது - அதில் 
நெளிந்தோடும் விச யந்து உயிர் வாழுது
கடந்தே நாம் செல்கின்றோம் கடிக்கின்றது -கால்
கடுத்தே நம் உதிரங்கள் வழிகின்றது
கிடந்தே நாம் துடிக்கின்றோம் குரல்மங்குது - இதை
கேட்போர்க்கு இதயங்கள்  தொலைவாகுது
திடங்கொண்டு வாழ்வெண்ணி கலங்கும் நெஞ்சம் - அதி
தொலைதூரம் வரை இல்லை மனிதம் ஒன்றும்

Sunday, 10 May 2015

இப்போய்

c
      இப்போது இல்லை, பின் எதற்கு?

தேகம் கறுத்துக் கிடந்ததென்ன - அந்தத்
திங்கள் ஒளியை இழந்ததென
ஆகப்பெ ருத்தும் அவ் வாழியுயர் - திரை
யாகி எழுந்தும்பின் வீழ்வதென்ன
போகம் உடம்பினைத் தின்பதென்ன  அது
போதுமெனும்வரை கொண்டதென்ன
தாகம்  எடுதத இம் மேனியிலே பேயும்
தாவிப் பிடித்தாடிக் கண்டதென்ன

காகம் குயில் கறுத் தேயிருந்தும் அந்தக்
காகம் குயிலிசை பாடிடுமா
நாகம் நளினம் கொண்டே யசையும் - அதை
நாமும் ரசித்துற வாடிடவா
வேகமெடுத்த இவ்வாழ் வினிலே - விடை
வேண்டித் திரிந்துள்ளம் காண்பதில்லை
யாகம்முடித்து வான் வீதியிலே எங்கள்
யாத்திரை யின்பின்னர் கண்டுமென்ன

சோகம் மனதினைக் கவ்வுவதும் அது
சேர்ந்து வரும் வாழ்க்கைப் பாதையெங்கும்
பாகமெனப் பங்கு கொண்டபழி - செயல்
பண்ணும் மனதினை வென்றுவிடும்
ஏகம் அனேகமென்றான ஒளி- அந்த
ஏற்ற மிழந்துபின் வாடுகையில்
பூகம்பமாய் உ:ள்ளும் மேலிருந்தும் எங்கள்
பேணி வளர்த்தமெய் தீய்த்துவிடும்

மேகம் பொழிந்திட நீர் வழியும்  இந்த
மேனிமலர் சுகபோதை யெழும் பி0ர
வாகம் என புரண்டே மகிழும் - -முடி
வாக உணர்வுகள் தானடங்கும்
ஆகும் தனிமைகொண் டாணவமும் அது\
ஆட்டிவதைதிட்ட  மேனிதனும்
தீ‘கும்’மென்றோடித் எரித்தபின்னர் மனம்
தேடும் அமைதி கிடைத்துமென்ன !!

Friday, 8 May 2015

துஞ்சும் நெஞ்சம்



அன்புடை நெஞ்சங்கள் ஆவி துடித்திட
  ஆக்குவன்  பேரென்னவோ  - பகை
வன்புய லாய்வந்தே உள்ள உயிர் கொல்லும்
     வாடிக்கை தான் திறையோ
தென்புலம் வந்துபொன் தேடிக் கொள்ளை யிட்டுத்
   தேவைகள் தீர்த்திடவோ  - அவர்
தென்புறத் தேனடை தீந் தமிழ் காவியத்
     தென்றலாகித் தொடவோ

எண்புலி என்னிலென் ஏகாந்த சூழலில்
  எண்ணக் கிடைப்பதென்ன  - அவர்
கண்புகை பட்டு கலங்கலின்றி உடல்
  காணும் வதைக்கென்னவோ
பண்புள்ளம் கொண்டு பழகும் தமிழ்மகன்
  பார்வைகே மாளி யென்றோ - காணும்
புண்படும் உள்ளத்தில் கொண்ட புயல்தன்னும்
  பூமியில் பொங்கிடுமோ

செண்பகம் ஒன்று சிறுமரத்தில் நின்று
  சேதியும் கூறியதே - இந்த
மண்பகை வன்கொள்ள மாடுகளாய் உழும்
   மானிடம் ஆகுமென்றே
தண்புனல் தன்னும் தருணமென்றால் ஊருட்
  தாவிப் பலி எடுக்கும் - பகை
பெண்புதுமைத் தமிழ் பேரழகு சிதைத்
   தின்புற ஏன்கிடந்தோம்

கட்டி விறகிட்டு தீயெரித்தால் உடல்
  கையளவே கிடைக்கும் - அதை
வெட்டி உதிரத்தை வேருக் கிறைத்திட
  வீரப் பயிர் முளைக்கும்
தட்டிப் பறித்தவர் தம்மைவிட்டு மண்ணை
    எட்டிப் பிடித் திழுக்கும் - செயல்
திட்ட முடன் தெளிவோங்கிடச் செய்திடத்
   தேவை தலைமையொன்றும்

வட்டமுரசறைந் துற்ற வெற்றிதனை
    எப்போவிண் ணும் ஒலிக்கும் - நின்று
கொட்டும், தாளமெழக் கட்டழகுப் பெண்கள்
   சுற்றிக் கோல் கொண்டடித்தும்
சட்ட மெழுதித்தன் எல்லையிலே கொடி
   சட்சட் பட்டென் றடிக்கும் -  நிலை
கொட்ட மடித்தின்பக்  கும்மாளம் போட்டிடும்
    கோலங்கள் காண்பதெப்போ

மனம் செல்லும் தனி வழி

        

பனிவிழும் மலை தனும் சுடுமா - நடுப்
பகலவனொளி குளிர்ந்திடுமா
கனி கொண்ட சோலையின் முதிர்மா - தரும்
கனிந்திடும் பழம் கசந்திடுமா
இனி மனம் இனித்திடத் தருமா - நல்
இயற்கையின் ஊற்றெழும் விதமா
மனிதமும் திளைத்திட வருமா - என்
மன திறைமகள் தரும் தமிழ்ப்பா

மனமது  தனி வழிசெல்லும் - அது
மயங்கிடும் மதியொளி கண்டும்
தனதெனும் வழியொன்று கொள்ளும் - ஒளி
தவிர்ந்தொரு இருள்வழி கண்டும்
மனம்கெட இருவிழி அஞ்சும் - அதை
மதிப்பதில்லை எண்ணம் மிஞ்சும்
இனமதில் குரங்கதன் சொந்தம் - அது
இடர் கொள்ள உயிரது துஞ்சும்

தனமது தேடி நெஞ்சேங்கும் - அது
தவறெனும் வழி யென்று கண்டும்
எனதென உரிமையும் கொள்ளும் -அதை
எதிர்பவர் பகைஎனத் துள்ளும்
கனவுகள் பலபல காணும் - அக்
கனவதன் நிலைகொள ஏங்கும்
புனிதமென் றெதனையும் அள்ளும் - அவை
பிறிதெனக் கண்டுபின் வெம்பும்

சினமது நிலைதனை வெல்லும் - அதில்
சிரிப்பிபெனும் உணர்வினைக் கொல்லும்
வனமுள்ள மாவிலங்கென்னும் - கொடும்
வகையுடன் கொடுமைகள் செய்யும்
சுனைதனில் எழில் மலர்க் கமலம் - அது
சுழல்விரி அலை தள்ளும் அவலம்
எனை யொரு தருணமும் தள்ளும் - பின்
இள வளர்மதி நிலை கொள்ளும்

விழுந்தனன் வேறில்லை வழியில் - மனம்
வலித்திட கிடப்பவன் கதியில் \
எழுந்தவை இடர்தரும் எண்ணம்,- அது
இங்கில்லை எனதரும் உள்ளம்
வழுந்திய பெருவினை கொண்டும் - என்
வாழ்வினில் பொழிந்த கண்,மழையும்,
அழுந்திட பிறந்ததும் ஆகும் - அதை
அதி பெருந் தீ புடம் போடும்

அழகோ நிறைவோ

             

பொழிமழை பெருகிடும் பொழுதினில் மலைதனில்
பிறந்திடும் அருவிகள் அழகோ
வழிநெடு கிலும்விளை கதிர்களும் பசுமைகொள்
வயலிடை உலவிடல் அழகோ
விழிமொழி பகிர்ந்திடும் விதங்களும்இளமையின்
வளம் மலரிதழ் எனும் அழகோ
மொழிதமி ழினிதென முதன்மையி லிருவென
முனைந்திடப் பெறும்நிலை அழகோ

விளைகடல் திரவியம்.விரவிய அலையிடை
விழுந்தவர் பெறும் குவை மகிழ்வோ
முளைவரும் பயிர்களில் தளிர்வரும் தொடுமதை
மலர் மணம் தருந் தென்றல் மகிழ்வோ
வளைபுகு சிறுநண்டு வலம்வருங் கரையினில்
வனிதையர் எழில்நடை விதமோ
களையெனத் தமிழ்மறந் தெதிரிடை புகுஞ் சிலர்
கருத்திசைந் திடும்கணம் மகிழ்வோ

இனிகனி யெனும்சுவை இருந்திடு மமுதெனில்
எடுத்துண்ணு மவர்பசி விடுமோ
தனிமையில் துயரினைக் கொளும்மகன் சதியென
பெறவுடல் பெரும்பசி விடுமோ
முனிவரும் துறவறம் தனிலிறை வரம்பெற
முனைவதில் அவர்பசி விடுமோ
இனியெம தமிழ்கொளும் இழப்பிலைச் சுதந்திரம்
இதுவெனும் வரைபசி விடுமோ

மழலையின் குரலினை  மகிழ்வொடு விரும்புவர்
மடியினில் கனம்கொள நிறைவோ
தழலெனும் பெரும்பிணி சுடுமுடல் கருகிடத்
தணிக்குமௌ டதம்தரும் நிறைவோ
குழலெனும் இனிமைகொள் குரல்தரு இசைநயம்
குலவிட மனம்பெறும் நிறைவோ
பழமைகொள் புகழ்தமிழ் பகைவிடுத்தொரு நிலம்
பகிர்ந்திடும் நிறைவொன்று வருமோ