Sunday, 5 July 2015

இயற்கையின் கோரம்


தேனாம் தமிழ் சொல்லித் தந்தவள் - அந்தத்
தென்றலினால் மெய்யைத் தொட்டவள்
வானாய் விரிதென்னைக் காத்திட்டாள் - எழில்
வண்ண மலரென வாழ்விட்டாள்
மீனாகத் துள்ளும் இளமையும் - அலை
மேவும் கடலிற் பழமையும்
தானாகக் கொண்டே கவர்ந்திட்டாள் - இந்த 
தாரணி கொண்ட  இயற்கையாள்

வீணாய் பொழுதிடா ஓடினேன் - என்ன 
விந்தை என்றேமடி தூங்கினேன்
காணா எழில்கண்டு போற்றினேன் - இரு 
கண்கள் போதவில்லைத் தூற்றினேன்
பேணாதெழில் கொண்ட பூவனம் - பல
பேச்சை ஒலித்திடும் பாறைகள்
நாணல் வளைந்திட நான்தொட்டே - அங்கு
நாணும் செடிகண்டும் வாழ்த்தினேன்

ஆணாய் உரங்கொண்டு ஓடினேன் - அந்த
ஆசையில் போதைகொண் டாடினேன்
கோணாதென் மீதின்பம் கொட்டினாள் - குளிர்
கூதலிடப் பனி தூவினாள்
தூணாய் நிலைத்திட்ட குன்றுகள் - அதை
தொட்டமுகில் கொண்ட தூக்கமும்
காணாத இன்பங்கள் காட்டின - எந்தன்
கண்ணை  கிறங்கச் செய்தோடின

நன்றே எனப்புகழ் நல்கினேன் - மது 
நாவிலி னித்திடப் பாடினேன்
தென்றல் மலர்நீவ சில்லிட்டேன் - மலர்
தேனிதழின் எழில் கண்ணுற்றேன்
மன்றமதில் கவி சொல்லிட்டேன் - இவள் 
மங்கை இயற்கையைப்  பின்னிட்டேன்
சென்றதுகாலம்,ஆ... வீழ்ந்திட்டேன் - அதோ 
சற்று விதிகள் புரிந்திட்டேன்

சீறி அடித்ததோ ஓர்புயல் - அதில்
சீற்றங் கொண்டோடிய நீர்வெள்ளம் - விதி
மீறி இடித்தன மேகங்கள் - அதில்
மீண்டும்மீண்டும் பல மின்னல்கள் 
ஊறி மணத்ததோ ஊர்நிலம் - அங்கு 
ஊற்றிவழிந்தது போம் வெள்ளம் - அதில்
நாறி மணத்திட்ட பூக்களும் - ஒரு
நாளில் குலைந்து கிடந்தன

மெல்ல இடித்தது யார் விதி - காண
மின்னி வெடித்ததென் வஞ்சனை
சொல்லில் பொழிந்தன பொய்மழை - அதைச்
சுற்றிப்  படர்ந்ததோ ஊழ்வினை
மல்லிகைப் பந்தலைப் போலவே - அந்த
மாயவிதி வாழ்வை சாய்த்திட
நல்லெழில் எங்குமே காணிலேன் - இந்த 
நானில வாழ்வுக்கா ஏங்கினேன் ???

இடைவெளி


தமிழ்தனை மறந்திடத் தரவுகள் மறுத்திடும்
தகமையைப் பெறுவதுண்டோ
குமிழென அலையிடை கொளும் வடிவுடைவென
குறுகியும் சிறுப்பதுண்டோ
அமிழ்திலுமினியது அகமதில்  சுவைதமிழ்
அவனியில் வெறுப்பதுண்டோ
நிமிர்ந்திட சிலதடை நினவுகள் கழிகின்ற
நிதர்சன இடைவெளியோ

பலவித நினைவுகள் பறிமுதலிட விதி
பகலிடை ஒளிநிலவாய்
புலமைகள் சிறுபட புதுமைகள் தலைப்பட
பொழிதொன்று கழிகிறதோ
குலமொளிர் மனமதின் குணநலம் புரியுதல்
குறையெனை இருந்துவிடில்
சலசல அலைகளில் சதிரிடும் ஒலியென
சலனங்கள் எழும் இதுவோ

வலதுகை எழுதிட வருவது இடதுகை
வரைமுறை அறிவதில்லை
பலமது புஜம்கொளப் பதறிடும் பாதங்கள் 
பகைவனுக் குலகல்லவோ
நலமென இருவிழி நடுவழி இடர்தனை
நிகழ்வினில் புரிவதுண்டு
விலகியும் ஒருவிழி வெறுமையை காணென
விலைதரும் செயல் அழகோ

துலங்கிடும் ஒளியது தரும் பொருள் மறைத்திடின்
தொலைவது எழிலுலகே
நலமொடு இருப்பது நடந்திட அருள்தனை
நல்குவ தவள் தனியே
கலகல சிரிப்பெழக் குழந்தையின் குணமல்ல
கொடுவெயி லெரிகிறதே
சில சில அமைதிகள் செறிவென இருந்திடில்
சடவென அதிர்வெழுதே

வழித்துணை யல்லப் பெரு வழக்கமென் றிணைந்தபின்
வகுப்பது கழித்தலொன்றே
குழிக்குள்ளும் விழுத்திடும் குவலயத்திடை மனம்
கொடுப்பது கரமல்லவே
விழிப்பது விழியல்ல வெகுமன மெனிலதை
விகடமென் றெடுத்திடவோ
செழிப்பது பயிரெனில் சிறிதெனும் உயிர் வகை
சிரித்திட நசுக்குவதோ

////////////////////////

ஓவியப்போட்டி பகுதி 1


ஓவியத்தில் போட்டியொன்று செய்தார்
உத்தமநற் கலையினிமை காணத்
தேவியவள் சந்நதியின் முன்னே
திகழ்ந்தததைக் கண்டிடுவோம் வாரீர்
பூவிதழைப் போலும் எழில் மென்மை
பொற்கலைஞர் உள்ள மென்பதுண்மை
ஓவியர்கள் கூடி அங்குநின்றார்.
ஒளி நடந்து மேலை ’வானில் வீழ

மூன்றென் றோவியர் கலந்துகொண்டார்
முன்வருவோன் இரண்டு மூன்று நிலைகள்
சான்றுகளின் ஆக்க நிலைகாணின்
சற்றும் இவர் மேன்மை கீழென்றில்லை
தோன்றும் திறன் சமநிலையிற் காணும்
தூயகலை இறைவன் தந்ததாலே
சான்றோரும் போற்றும் இவர் பெருமை
சற்றும்குறைவற்ற எழில்தரும் கை

மண்டபத்தில் போட்டி ஆரம்பிக்க
மன்னவன் அங்கெழுந் தருளி நின்றான்
கண்டவுடன்மூன்று ஓவியர்கள்
கரம்குவித்து வணங்கிப் பக்கம் சென்றார்
பண்ணிசைத்தோர் அழகிநடம் ஆடப்
பசுங்கிளிகள் சோலையில் இசைபாட
மண்ணின்மலர் மாலைத்தென்றல் வருட
மஞ்சள் வெயில் மனதை ரம்மியமாக்க

கண்ணழகை கவரும் காட்சி தன்னைக்
கையிலெடு துச்சநிலைகாட்டும்
வண்ணங்களின் வித்தை கற்றவர்காள்
வடிவமைப்பீர் ஓவியத்தை இன்றே
மண்ணில்காணும் ஏதும் கருவாகும்
மனம்பிடித்த காட்சியொன்றை ஆக்கி
எண்ணமதை ஆளவென்று ஈவீர்
என்றவனோ மன்னன் அங்கு சொன்னான்

என்ன வண்ணம் தூரிகை கொண்டாலும்
எழுதுகையில் உண்டு விந்தை ஆற்றல்
முன்னிலைக்கு முடிவில் யார் வந்தாரோ
மிகுந்த பணப் பரிசு வென்றுசெல்வீர்
மன்னன்கூறி மூவரையும் பார்த்தான்
மனம் மனிழ்ந்து ஓவியர்கள் கூடி
தன்திறனை முற்றும் முன்னர் வைத்துத்
திரைவிரித்து வண்ணம் பூசலானார்

(பகுதி2ல் முடியும்)

ஓவியப் போட்டி (கவிதை) தொடர் 2

விடை தெரியுமா? 2
********************
ஓவியர்கள் உவகையுற்றுத் தூரிகை கொண்டு 
உள்ளத்தில் தோன்றுமோர் காட்சிப் பொருளை
காவியத்தில் காணுமின்ப வெள்ளம் போலும்
கற்பனை எனும் சுகத்தைக் கலந்தே செய்தார்
தூவி மலர்ப் பஞ்சணையில் தூக்கம் கொண்டே
தொலை மறைந்த ஆதவனும் தோன்றும்காலை
போவிரைந்து காணென்று உள்ளம் கூறப்
புன்னகைத்து மன்னன் கலைமாடம் சென்றான்

சென்றாங்கே முடித்து வைத்த ஓவியங்களைச்
செய்தஎழிற் பொன்னிகர்த்த சித்திரக்காட்சி
தேன்சுரந்த பூஎன்றும் திங்கள் போலும்
தித்திக்கும் அமுதத்தை ஒத்தாற் கொள்ள
என்னென்ன வடிவங்கள் எதனைச் செய்தார்
எவரதற்குள் ஏற்றவிதம் வண்ணம் கொண்டார்
மேன்மைதனை அறிவேனென் றுள்ளம்கொண்டே
மேவிநடை துரிதமுற்றே முன்னாற் சென்றான்

பொன்னெடுத்துப் பெண்ரசித்து மண்ணை ஆளும்
பெருமிதத்தில் தனைநிறுத்திப் பேசும்மன்னன்
முன்னிருந்த ஓவியத்தின் வண்ணம் கண்டான்
மேனிசிலிர்த்தான் எழில்சார் மலர்கள் கொத்தாய்
பன்னிறத்தில் பூத்த எழிற் பூங்காவனம்
பனிபடர்ந்த இதழ்பொலிந்த பருவக் காட்சி
முன்னிருந்த பூக்கள் வெறும் ஓவியமல்ல
முற்று முயிர் கொண்டதுவோ மங்கை கொண்ட

கண்கள் இமை துடிப்பதெனக் காற்றின் ஆடும்,
கரம் தொட்டால் நாணமுறும் கனிவாம் மென்மை
உண்ணமலர் இதழ் கொண்ட கள்ளோ மின்ன
இடையழகில் உன்மத்தம் ஆக்கும் வண்ணம்
வெண்மை யதோ வைரமென்ப் பவளம் முத்தும்
விளங்குமெழில் மாணிக்கம் போலும் வண்ணம்
எண்ணமதை மயக்கிவிட எழுதித் தந்தான்
இவன்படைப்பில் இறைவனையும் மிஞ்சிக்கொண்டான்

என்றெண்ணும் மன்னன் ஆங்கின்னும் கண்டான்
இழைந்த அவ் வண்ணத்தின் இயற்கைக்கோலம்
தன்னில் அவை மலர்ந்திட்ட உண்மை பூக்கள்
தானிடையில் தேன் காணும் என்றே வண்டும்
கன்னங்கரு தன்னுடலைக் களிப்பில் ஆக்க
கலகலத்து ரீங்கார ஓசைகொண்டே
முன்பறந்து மோதியந்த வண்ணத்திரையின்
மூர்க்கமுடன் வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும்

எண்ணி யந்த உண்மைதனை ஏற்காநெஞ்சாய்
இன்னுமின்னும் மோதும்நிலை கண்டான் அடடா
திண்ணமிது வண்டினையும் நம்பச்செய்யும்
தீட்டிய இவ்வோவியமே தேர்வில் வெல்லும்
எண்ணமதில் ஈதெடுத்து இரண்டாமவனின்
எழுதும் கைஆக்கியது எதுவோ காண
விண்ணிருக்கும் தேவர்களும்வியக்கும் அழகை
வைத்திருப்பதோ என்றே காணச்சென்றான்

{இரண்டில் முடியவில்லை இன்னுமுண்டு)

ஓவியப்போட்டி (கவிதை) 3



விடைதெரியுமா? தெரிந்தால்கூறுங்கள் 3
****************

மற்றவனின் ஓவியத்தைக் கண்டான் மன்னன்
மரகதமாம் பச்சையெனும் புல்லின்மேடை 
சற்றயலில் நிரைகொண்ட மரங்கள்காணும்
சாற்றினவை சேனை படை யணிபோல்நேரே
நிற்பதுவும் பின் நீல நிர்மலவானம்
நெடுந் தூரம் ஒடிவரும் வெண்முகில் ஒன்றாய்
அற்புதத்தைக் குழைதங்கே தீட்டியும் வைத்தார்
ஆகாகா மெய்மறந்தேன் அழகிலென்றான்

துள்ளிவரும் இசை பாடும்குருவி அன்றோ
தெள்ளமுதக் கீதமதை சொல்லா மௌனம்
அள்ளமுகம் பார்க்கும் மொரு கண்ணடியோ
அதிர்ந்து பலதூண்டாகும் முகத்தின் விம்பம்
வெள்ளை யலைமிதக்கும் அம்மென்னீரோடை
விளையாடும் மான்கள் தன் மிரளும்பார்வை
கள்ளமிலா மீன்கள் சுனை துள்ளும் காட்சி
காணும் அலைநெளிந்தோடக் காணும் சலனம்

எள்ளளவும் ஐயமிலா இயற்கைக் காட்சி
எழுதி வைத்த விதம்கண்டே ஏக்கம்கொண்டான்
கொள்ளைஎழில் கொண்ட பசும்புல்மேடையில்
கொண்டு வளர் புல்விரும்பிக் குதித்தே வந்தோர்
துள்ளியந்த ஓவியத்துள் செல்லக்கேட்கும்
துணிவெடுத்த கன்றொன்றின் துடிப்பைக்காக்கும்
தள்ளியதை நிறுத்தவெனப் பாடுபட்டே
த்டுமாறும் ஒருகூட்டம் தனையும்கண்டான்

இல்லையிதில் குறைவென்ப தியற்கை ஆற்றல்
எழுதிவைத்த இரண்டதிலும் எல்லாம்சமமே
வல்லமையில் போட்டியிடுமிரண்டைகண்டோம்
வைத்திருக்கும் மூன்றாமவன் வரைந்தோர் அழகை
சொல்லிமனம் வேண்ட அவன் நடையும் கொண்டான்
தூரிகையின் வண்ணத்தை தீட்டிச்செய்தும்
எல்லோர் கண்பார்வைக்கும் ஏற்றோர் வண்ணம்]
இட்டதனை மறைத்தமுன் திரையைக்கண்டான்

முன்னிலையிற் சென்றவன்கோ மூன்றாவதை
மூடிவைத்த ஓவியத்தை காணவந்தேன்
உன்கலையைக் காணுமிச்சை கொண்டேன் 

திரையை ஒதுக்கிவிடும் என்றவனை திகைத்தே நின்றே
தன்னிலையில் மிரளுமவன் முகத்தை நோக்கி
தான்வியந்தும் கலக்க்முற்ற தன்மை நோக்கி
என்ன சொல்வ தறியாது இருப்போன் விட்டே்
இதை விலக்க ஏன் தயக்கம் என்றே கையால்

தள்ளித்திரை விலக்கிவிடக் கையும்கொண்டே
தயங்காது முயற்சித்தவேளை யாங்கே
உள்ளதொரு திரை உண்மை அன்றேயென்றும்
உணர்ந்தவனோ திடுமென்று பின்வாங்கினான்
குள்ளமனம் கொண்டாங்கே திரையைப்போலும்
குழைத்தழகாய் தீட்டியதோர் ஓவியத்தைக்
எள்ளி நகையாடும்படி இழைத்தவமானம்
இவன் வரைந்த ஒவியத்தால் இருக்ககண்டும்

யாரங்கே என்றலறப் பணியாள் தானும்
ஆற்றும்செயல் ஏதுமன்னாஆணையிட்டால்
கூரங்கே கொண்டவளை கொடும் வாள்கொண்டே
குதூகலிப்பில் குரரல்வளையைத் துண்டாக்கவா
பேரங்கே உச்சரிக்க பின்னால் நின்றே
பிறிதென்றே முண்டம் சிரசெடுப்பேன் இன்னும்
வேரெங்கே வெட்டிக்குலம் வீணாக்க வா
விளையாடிப் பந்தடிக்கத் தலை சீவவா

என்றவனை உள்நோக்கி சினந்தான் மன்னன்
இதுதவிர வேறொன்றும் அறியா உள்ளம்
மன்னனுக்கே கேடு என்றவனைக் வைது
முடிச்செங்கே எடுத்துவா மூடா என்றான்
பொன்னிறைந்த கிழியினையே பரிசாய் கொள்ளும்
பொதுவில் நிறை தந்ததிந்தப் பெரிதாம் ஓவியம்
முன்னிருக்கும் திரைமறைவைப் போலே தீட்டி
மெருகடைந்த உன்கலையின் திறமை கண்டேன்

வந்துபெறு உன்பரிசை என்றேயந்த
வாடிநிற்கும் ஓவியரில் மூன்றாம் ஆளை
சிந்துமெழிற் புன்னகையை உதட்டில் கொண்டே
சிறப்படைந்த ஓவியத்தை விரும்பிக்கண்டேன்
வந்துகொள்வாய் என்றவனை மீண்டும் கேட்டான்
வகையறியா நின்றவர்கள் சலனமிட்டே
இந்த முடிவேனோ வண்டார்க்கும் மலரும்
இட்டமுடன் புல்வேண்டி இருந்த கன்றும்

ஓடிவந்தே வியப்பினையே ஈயக்கண்டோம்
இதுவென்ன திரைமூடித் தோன்றும் வண்ணம்
நாடி வரும் மன்னனையே நகைப்பில் ஆக்கி
நல்ல உளம்புண்ணாகச் செய்தோன் தன்னை
மூடிவைத்த திரைக்காட்சி பரிசைப் பெற்றால்
முடிவென்ன நீதியிங்கே பிழைத்த தென்றே
கூடியிந்த செயலுக்குக் காரணமேது
கொற்றவனைக் கேட்போம் என்றுள்ளம் கொண்டார்

(மன்னன் என்ன பதில்சொல்லியிருப்பான்
விடை உங்கள் ஊகம் சரியானதே கூறுங்கள்)

(முடிந்தது)



மற்றைய இரண்டு ஓவியங்களும் ஐந்துஅறிவுக்கும்  குறைந்தவைகளையே ஏமாற்றின . ஆனால் அரசனையெ  தடுமாறவ் வைத்த சித்திரம் தத்ரூபமாக இருந்ததால் அவனுக்கே பரிசு

மீண்டும் துன்பங்களா?


வெட்டவெளி வானத் திட்டென் றிருள் உள்ளே 
கொட்டியதார் முத்துக் கள்ஒளிர
வட்டமதிகென்ன பட்டதுவோ வந்து 
நெட்டைப் பனைபின்னே ஒட்டிநிற்க
தொட்டு மலையினை முட்டிக் களித்திட்ட 
இருட்டு முகில் மெல்ல நீர்பொழிய
விட்டு வழிந்திட்ட ஆறும் அணைகட்டை
தொட்டுங் குமுறித்தன் பாதைசெல்ல

பட்டு வதனத்தில் எய்த கணைதொட்டு
விட்ட மலரம்பு மோகமிட
சுட்டுவிழியுடன் கன்னம் செம்மை படச் ’
சேதி கொண்டே அவள் முன்னிருந்தாள்
சுட்டெரித்தே மங்கை வட்டமுகம் செம்மை
பட்ட கறை தன்னின் குற்றமென்றே
நெட்டெழும் வீழலை நெரெதிர் தண்மை கொள்
நீரினுள் ஆறிட வீழ்ந்த கதிர்

பட்டு நீலத்திரை ஒட்டொளி மங்கிடப்
பாரில் தீபநாளும் வந்ததென
தொட்ட இடமெல்லாம் வைத்த அகல்விளக்
கென்றொளிர் தாரகை கண்சிமிட்ட
கட்டை வயல் கீழை தொட்ட அடிவிண்ணில்
செட்டைஅடித்திளம் பட்சிகளும்
முட்டவளர் வயல்நெற்கதிர் கண்டதை
எட்டிப் பறித் தில்லம் ஒடிவர

சிட்டுக் குருவியின் குஞ்சுகள் சட்டென
அட்டகாசமிட்டே உண்ணவர
விட்டுவிடென்று தாய் ஊட்டிவிட கண்டு
வட்டமிட்டே யோர் பருந்தசைய
நட்டுப் பயிரிட்ட கத்தரிதோட்டத்தில்
வெட்டிமண் `கோலியும் நீரிறைக்க
சுட்ட வள்ளிக் கிழக் கிட்டொரு வாசனை
முட்டப் பசிதூண்ட நானிருந்தேன்

அட்டமா திக்கிலும் அன்னை சக்தியவள்
கட்டி யெழுப்பிய நீதியென்ன
விட்டவர் மெய்யுடன் வீணெனும் பாவங்கள்
கொட்டிச் சாம்பலிட்டுத் தீபொசுக்க
தட்டினை யேந்தியும் தாவென்று புண்ணியம்
குட்டிதலை கொண்டே கேட்டுநிற்க
இட்டதுஎன்னவோ கொட்டும் அருவியுள்
மூட்டை உப்பையிட்டுக் காத்திடென

தொட்டுச் சேரவைத்துப் பாவங்கள் பூமியில்
எத்தனை காலமென் றெண்ணமுன்பே
பட்ட துயர் வாழ்வில் கிட்டுவதென்னவோ
மட்டுஇ்லையெனும் தேடல்களே
கெட்டது தானே எழுந்துவர இன்பம்
கிட்ட நில்லா தூரம் ஓடிவிட
செட்டை அடித்திடும் குஞ்சுகளாய் காலம்
இட்ட உணவெண்ணி காத்திருக்க

சட்டம் ஒருபுறம் தான் நசுக்க அதை
சற்றும் `உணராது வாழ்வெடுக்க
கொட்டியதென்னவோ பூக்களல்ல வெந்து
கொள்ள இழையனல் துண்டங்களே
பட்டபடும்பாடும் பாவங்கள் தீர்ந்திடப்
பாவிமனதினில் ஏக்கங்கொள்ள
விட்ட உயிருக்கு வேடிக்கை மீளது
வேண்டி யணைவது துன்பங்களே!

கவியென்றேன் கலங்கினாள்


*****
(கவி -- கவிஞனையும் குறிக்கும் அதற்கு இன்னொருபொருள் உண்டு அதை வைத்து நகைச்சுவைக்காக.. எழுதப்பட்டது
**************
******************
பூவிரியும்பொற்காலை புதுவெயிலும் கீழ்க்கரையில்
கோவரிந்த படையணியின் கொடுங்குணத்தை கொண்டுமெழ
சாவரிந்து கொள்ளெனவே சாற்ற இருள் ஓடியெங்கும்
ஓவிரிந்த பேரண்டம் உள்ளே தொலைந்து விட

மாவரித்த மங்கையின்கை மச்சவிழி மூடும்வகை
போயுரித்த தாய்கதிரின் புகழ்மறைத்து முகில்நகர
தீஎரித்த வீறுகொண்டு திங்கள் முகம் கடுகடுக்க
பாவரிக்குள் சந்தமெனப் பழகுநடை கொண்டசைந்தாள்

ஆவிரித்த கூந்தல்தனும் அஞ்சும்மழை மேகமொத்த
தோசரித்து தோள்விழுத்தி தொங்கும்மணி மாலைமின்ன
காடெரித்த தீ பரந்து கானகத்தை மூடுவதாய்
ஊடெரித்த உணர்வுதகித் துள்ளம் பதைபதைத்தேன்

மானுரித்த மென்மைநடை மகிழ்வெடுத்த நெஞ்சமதை
ஏனுரித்துக் காயவைக்கும் இன்னல்தனைத் தந்திடுமோ
தானுரித்துப் பார்க்கவொரு சூனியம்வெங் காயமதில்
காணுரித்த பாட்டில் என் கனவுகளும் ஆவதுவோ

ஊனரித்தும் உணர்வெரிய உள்ளக் குறுகுறுப்பில்
நீசிரித்த போதிலெல்லாம் நெஞ்சு தடுமாறி நின்றேன்
மாகரித்த நிறமெடுத்தேன் மஞ்சள்வெயில் மேனியளை
வாஹரிக்கு திருமகளாய் வாழ்ந்திடுவோம் என்றழைக்க

நாபரிந்து நல்லாளே நறுந்தேனே நங்கையுனைத்
தேவரிந்த பூவுலகின் தெய்வமகள் என்றுரைப்பர்
வாதெரிந்த வகையிலொன்றி வாழ்ந்திடுவோம் என்றவனைப்
பாவரியும் கவி இவனாம் பாரடிநீ என்றழைக்க

மூவரிந்த மேதினியில் முயன்றே வளர்த்த தமிழ்
தோலுரிந்த முக்கனிகள் தொட்டசுவை யின்குரலால்
வாளரிந்த வகையுடலை வருத்திக் கிழிப்பதெனத்
தேன் சொரிந்த பூஅனலைத் தீசொரிந்த தாய் பகன்றாய்

(அவள்:)

நீபுரிந்ததேது சொலாய் நெடுமரத்தின் கொப்பிழக்கா
போயிருந்து தாவும் கலை பூவையிவள் பயிலவென
வாதெரிந்து கொள்ளென்றே வஞ்சியெனைக் கேட்டனையோ தோகைவிரி மயிலாடத் துணைகவியோ போவென்றாள்