Monday, 28 September 2015

ஏக்கத்தில்


நின்னை தொலைவிருத்தி நெஞ்சம் வலியெழுப்ப
நின்றேன் நிமிடம் நகராதோ
பொன்னை மணந்து ஒருபோதும்கலக்கமின்றிப்
போகும் வாழ்வு திரும்பாதோ
இன்னல் பலகொடுத்தேன்  என்னை கரம்பிடித்தாய்
உந்தன் மகிழ்வு பெரிதாக
எனனே செயல் புரிவேன் இந்தோர் உலகமதில்
ஏக்கம் என முடிவும் தகுமோ

செந்தேன் நிலவெழுந்து செல்லும் வானமதில்
சென்றே உனையடைவதென்றோ
தந்தேன் என அருகில் தழுவும் நிலையடைய
தாகமெடுப்ப தெந்தன் தவறோ
பொன்தேர் தனிலிருந்து போகும் வழியில் எழில்,
பொய்கை மலர் நிறைந்த சுனையில்
வந்தே யிருந்து மலர் வாசம்தனை நுகர்ந்து 
வாழ்வைக் கழிக்க வருவாயோ

மந்தம் எழும் மனதில் மாயக் கனவுகளில்
மாற்றம் இனியும் வருமாமோ
சொந்தம் என உனையும் தொட்டே மகிழ்வுகொள்ள
சொல்லும் நாளுமென்று வருமோ
சந்தமிசைக்க கவி  சொல்லும் மனதில் உந்தன்
சிந்தை மலர்ந்து விடுமாமோ
நந்திஎன  விதியும் நடுவில் பிரித்த நிலை
நல்லோர் முடிவைத் தருமாமோ

வந்தே எனதருகில் வாடும் மனதில் சுகம் 
தந்தேன்என்றே மலருவாயோ
விந்தை எனதுவிரல் வீழும் கண்ணீர்துடைத்து 
விம்மல்தனை நிறுத்துமாமோ
பந்தே என எறியும் பல்நேர் விளைமொழியும்  
பதைக்கும் நிலை தருவதுண்டோ 
நொந்தேன் மனம்வலித்து நெஞ்சம் அழுகைவிட்டு
நிகழும் வாழ்வும் திரும்பாதோ
 

Saturday, 26 September 2015

நிதம் சக்தி


ஏனிதோ எண்ணம் மனதிருத்தி -அதை
ஏதோ பொருள கொண்டு தான் வருத்தி
தேனிதழாய்மென் மனம் உறுத்தி - அது
தேம்பியழும் விதமாய்ப் படுத்தி
நானில மீதினில் நானுழன்றும் - நதி
நாடும் கடலென்றுனைக் கலந்தும்
வானிலெழுந்த என் தெய்வ சக்தி -நீயும்
வைத்த பாதை ஏனோ முள்நிறுத்தி

மானில் மருள் குணம் கண்ணில் வைத்தாய் - அந்தி
மாலையில் செங்கதிர் தாளவைத்தாய்
தேனில் நிறைபூக்கள் சத்தமின்றி அதன்
தேகம் மலர்ந்து கொண்டாட வைத்தாய்
வானில் ஒளிர்ந்திடும் வட்டக் கதிர் ஒரு
வீசும் பந்தாய் எழும் வீழுவதுவும்
தானியங்கும் வண்ணம் பூமியினை நிதம்
தன்னைச் சுற்றிச் சுழன்றோடச் செய்தும்

ஆகியதாய் அண்டம்மேவியெழும் எங்கள்
ஆதிசக்தி தனை எண்ணியென்றும்
காகிதப்பூப் படைத்தன்பு கொண்டேன் பலர்
காணக் கவிபபூக்கள் மாலைசெய்தேன்
ஆகிட நீ அதனூடே அசைந்தொரு
அற்புதமான ஒளி கொடுத்தாய்
வேகிட என்னுயிர் வாடும் நிலைதன்னை
வேடிக்கை யாகவோ காட்டிநின்றாய்

வாக்கினில் கொள் விதமாக்கி வைத்து அதை
வாழைக்கனி போலினிக்க வைத்து
போக்கினில் மாற்றக்கள் ஊக்குவித்து அதை
போக்கிப் புதிதென தோற்றுவித்து
ஏக்கக்த்திலெம்மையும் ஆழ்த்தி விட்டு அதை
எண்ணக் கைகொண்டெம்மையும் கிள்ளிவிட்டு
கூக்குரலிட் டழுகையிலே ஏனோ
கொட்டும் கண்ணீர்த் துளி பாராநின்றாய்

வலிக்கு தடீ


***************************************
நெருஞ்சி முள்ளும் வலிக்க வில்லை தங்கமே தங்கம் - உனை
நினைந்து மனம் கொதிக்கையிலே தங்கமே தங்கம்
வருஞ் செயல்கள் பலிக்கவில்லை தங்கமே தங்கம்- உள்ளம்
வருந்தி யுடல் துடிக்குதடி தங்கமே தங்கம்
பெருஞ்சினமே பொங்குதடி எதனிலும் எங்கும் - இதன்
பெயரெதுவோ மனம் கசந்தேன் இருளடி எங்கும்
விரும்பி யுள்ளம் துடிக்குதடி விளைவயல் நெல்லும் -எனும்
விதம் வளரும் மன எண்ணமோ வெறுமையில் காணும்

அரும்பும் மலர் சிறுமுகைபோல் அவிழ்ந்திடும் அன்பும்- அதில்
அழகுடனே சிரிக்கும்முகம் அதனையும் எண்ணும்
குரும்பைகட்டி தேரிழுத்து கொண்டது அன்றே -இன்று
குழைந்தஎழில் சிதையுமுன்னே கலைந்ததேன் இன்னும் ‘
தெருவில் மனம் அலையுதடி திரும்பிடநீயும்- என்னை
தொடும்விரல்கள் தொலைந்ததென்ன விழிமூடி நானும்
தரும்வகையில் உனதுஅன்பு தவறிட காணும் -இங்கே
திரும்பி நின்றே தனியுலகம் ரசிக்கவோ நாளும்

வரம்புகட்டி வாழ்ந்தவகை மனமெண்ணி நானும் அந்த
வளர்மதியின் முழுமை கொள்ள வாழ்த்துவ துள்ளம்
பிரமை கொள்ளும் பொழுது கொண்டேன் பேரிடியொன்றே என்னைப்
புறம் விழுத்தி அழவிட என் பெருமை கொண்டாயோ
நிரம்பி உள்ளம் நிம்மதியில் நேர்ந்திடும் வாழ்வில் - எனை
நிர்க்கதியாய் விடுவதிலே நிலைப்பதும் ஏனோ
கரம்பிடித்தால் கைவிடலாம் காரணம் கொண்டால் - அது
கடைசியென ஆகும்வரை காத்திரு கண்ணே

நீரா நெருப்பா`


பூமுடித்தாள் பொட்டுவைத்தாள்
. பூவிதழின் வாச மிட்டாள்
வாகுடிக்கத் தேன் எனவே
. வந்தவண்டைச் சுட்டெரித்தாள்
யார்முடிகொள் காவலனோ
. யௌவனத்தில் கால் பிடிக்கும்
தேர்முடிக்கு ஒப்பஎழில்
. தேகமதில் வார்த்தெடுத்தாள்

பார்வியந்து போற்றுமவள்
. பார்வை யதன் சாயல் பட்டால்
எர்பிடித் துழுவதெலாம்
. எங்கிருந்து கற்றுவந்தாள்
வார் பிடித்து வானஎழில்
. வண்ணமதி மேனிகொண்டாள்
ஊர் பிடித்துத் தூற்றமுதல்
. ஓர்வழியைக் காணுமென்றாள்

கார் விரிந்த கூந்தல்தனைக்
. கோதி யகில் வாசமிட்டா:ள்
மார்பி லெனைத் தாங்கியவள்
. மையல் தந்து போதையிட்டாள்
கீர் எனவெ தேகம் சுற்ற
. கேட்டகாமல் ஆடவைத்தாள்
நேர் பார்த்துவா அழைத்தேன்
. நெஞ்சுக்குட் புகுந்துவிட்டாள்

தூர் எடுத்த மண்ணெனவே
தேகம்குளிர் தோற்றம் கொண்டாள்
தீர் பிடிக்கும் துன்பமென்றால்
. தென்றலென ஆகி வந்தாள்
பூர்வீக புண்ணியமோ பேதை
. எந்தன் மாலை கொண்டாள்
நீரூறும் கண்களினி
. நிச்சயம் காண் ஆனந்தமே

பாசக் குருவிகள்!


*****************
நேசங் கொண்ட குருவிகளே
. நீளப் பறக்கும் வானத்தில்
தேசங்கொண்ட நிலையென்ன
. திரும்ப வந்தால் கூறுங்கள்
வாசங் கொண்டு மலரங்கே
. வண்ண இதழ்கள் விரிப்பதிலை
பேசுங்கிளியும் கிள்ளை மொழி
. பேசா திருக்கு தென்றார்கள்

வீசும் தென்றல் விளையாடா
. வேப்ப மரத்துக் குயில் பாடா
நாசம் எல்லை மீறியதாய்
. நாட்டில் மக்கள் வாழுகிறார்
கூசுங் கொலைகள் களவோடு
. குமரி மேனி கலைத்தாடும்
நீசம் எல்லை காணுவதால்
. நிலவேநீயும் வருவதுண்டோ

மாசும் கொண்டோர் மனமெல்லாம்
. மருகிப் பிறழ்வாய் மனத்தாகம்
பூசும்முகங் கொள் வேடங்கள்
. புரிவோர் மலியப் பொருளுண்டோ
காசுக் கடிமைக் கயவர் கைக்
. காணும் பொம்மை போற்சிலரும்
நேசம் கொள்ளும்மன மின்றி
. நிற்கும் இடமும் மாறியதென்

தேசங்கெட்டே காமுகர்கள்
. திக்கில் எங்கும் திகழுங்கால்
மாசற்றோர் தன் மேனிதனை
. மறைத்தே கரியை முகம்பூசி
வேசம் மாற்றி வெறியோடு
. விலங்காய் திரியும் கயவர் கை
நாசம் தவிர நடைபோடும்
. நம்மூர்ப் பெண்கள் காண்பாயோ

பூசி மஞ்சள் நீராடும்
. பெண்ணின் வதனம் பங்கயம்தன்
பாசிக் குளத்தில் காணும் போல்
. பரந்த கூந்தல் அலையாட
நேசிக்கும் தன் பதியெண்ணி
. நீரின் தழுவல் நாணித்தான்
கூசிச்சிவந்த கன்னத்தில்
. கொய்யா தெடும் கிளி மூக்கு

வாசப் பூவின் மிருதுவினை
. வளைத்தே எடுத்த வாய்மொழியின்
பாசப் பொழிவில் பைங்கிளியின்
. பழமைத் தமிழைப் பயமின்றி
தேசம் மீட்ட திருமகனும்
. திங்களொளியில் கைகோர்த்து
பேசும் போது அச்சமின்றிப்
. பக்கம் இருத்தல் எக்காலம் ?

**************************

Friday, 25 September 2015

வாழப் பழகுவோம்

                                      'வாழப் பழகுவோம்

அறிவோடு விளையாடி வெல்லும் வாழ்க்கை 
.  அறமென்ற நிலை கொள்ள வேண்டும்
குறியோடு நம் வாழ்க்கை கொண்டே - நல்ல
.  குணவானாம் இவனென்றே எவர்கூற வேண்டும்
வறியோரை யாம் காக்க வேண்டும் - இன்னும் 
.  வசதியென் றுள்ளோர்கள் தனமீய வேண்டும்
பிறிதென்ற மனமின்றி என்றும் - வாழ்வில்
.  பிறர்மீது அன்போடு மொழிகூற வேண்டும்

களிகொண்டு முகங் காணவேண்டும் - எதைக் 
.  கருதாது துயரின்பம் சமமாக வேண்டும்
வெளிவானின் பிரகாசம் வந்தே - உந்தன் 
.  விழிமீது ஒளியூட்டும் விதம்வாழ வேண்டும்
எளியோரின் சொல் கேட்க வேண்டும் - அன்பை 
.  இறைஞ்சும் நல்வாழ்வுக்கு இறைவேண்டு நாளும்
புளியோடும் அதனோடு போலே - உந்தன் 
.  புறவாழ்வு இருந்தாலும் மனமொன்ற வேண்டும்

அழகான மனை எண்ணவேண்டும் - என்றும் 
.  அவளோடு மனம்விட்டு எது தானும் பேசும்
வழமைகொண் டறிவோடு சிந்தை - தன்னில்
.  வருங்கால நிலையெண்ணி வளம் கொள்ள வேண்டும்
உழவென்று வயலோடி நின்றே - கதிர் 
. எழுந்தாடும் நிலைகாண மகிழ்வானே அவனை
விழுகின்ற நதிபோலவன்றி  அந்த 
.  வெளிவானைத் தொடுகின்ற மலையாக்க வேண்டும்

அளவான குழந்தைகள் எங்கள் - அன்பின்
.  அறம்கொள் இல் லறவாழ்வை இலகாக்கும் எண்ணி
களவோடு பொய்ப் பேச்சுமின்றிக் - கேடு 
.  கயமைகொள் இருள் நீங்கிக் காணுள்ளம் வேண்டும்
தளம்பாத உயரெண்ணம், தாங்கி - நிதம் 
.  தனை நம்பும் மனைகூடி ஒருபாதை கண்டே
இளமை என்றின்பத்தில் வாழ்வை - என்றும்
  .எழுகின்ற கதிர்காக்கும் ஒளிதன்னை வேண்டு!'



அறிவோடு விளையாடி வெல்லும் - வாழ்வில்
. அறமென்ற நிலை கொள்ள வேண்டும்
குறியோடு நம் வாழ்க்கை கொண்டே - நல்ல
. குணவானாம் இவனென்றே எவர்கூற வேண்டும்
வறியோரை யாம் காக்க வேண்டும் - இன்னும்
. வசதியென் றுள்ளோர்கள் தனமீய வேண்டும்
பிறிதென்ற மனமின்றி என்றும் - வாழ்வில்
. பிறர்மீது அன்போடு மொழிகூற வேண்டும்

களிகொண்டு முகங் காணவேண்டும் - எதைக்
. கருதாது துயரின்பம் சமமாக வேண்டும்
வெளிவானின் பிரகாசம் வந்தே - உந்தன்
. விழிமீது ஒளியூட்டும் விதம்வாழ வேண்டும்
எளியோரின் சொல் கேட்க வேண்டும் - அன்பை
. இறைஞ்சும் நல்வாழ்வுக்கு இறைவேண்டு நாளும்
புளியோடும் அதனோடு போலே - உந்தன்
. புறவாழ்வு இருந்தாலும் மனமொன்ற வேண்டும்

அழகான மனை எண்ணவேண்டும் - என்றும்
. அவளோடு மனம்விட்டு எது தானும் பேசும்
வழமைகொண் டறிவோடு சிந்தை - தன்னில்
. வருங்கால நிலையெண்ணி வளம் கொள்ள வேண்டும்
உழவென்று வயலோடி நின்றே - கதிர்
. எழுந்தாடும் நிலைகாண மகிழ்வானே அவனை
விழுகின்ற நதிபோலவன்றி அந்த
. வெளிவானைத் தொடுகின்ற மலையாக்க வேண்டும்

அளவான குழந்தைகள் எங்கள் - அன்பின்
. அறம்கொள் இல் லறவாழ்வை இலகாக்கும் எண்ணி
களவோடு பொய்ப் பேச்சுமின்றிக் - கேடு
. கயமைகொள் இருள் நீங்கிக் காணுள்ளம் வேண்டும்
தளம்பாத உயரெண்ணம், தாங்கி - நிதம்
. தனை நம்பும் மனைகூடி ஒருபாதை கண்டே
இளமை என்றின்பத்தில் வாழ்வை - காண
.எழுகின்ற கதிர்காக்கும் ஒளிதன்னை வேண்டு!

'எண்ணங்களே வாழ்க்கை

எண்ணங்களே நம்வாழ்க்கை - அட
. இதிலெது ரகசியமில்லை
எண்ணங்கள் கற்பனையாகும் - ஆம்
. இதிலொரு புதுமையுமில்லை
எண்ணங்கள் மழை நீர்க்குமிழி - அதன்
. எதுவரை நிலைகொளக் காணும்
மண்ணிடை விழித்திடக் கனவும் - விழி
. மூடிடக் கற்பனை முடியும்

தண்ணொளி வீசிடும் நிலவு - இத்
. தாரகை பொறித்த ஆகாயம்
விண்ணெழில் கீழ்த்திசைப் பரிதி - இருள்
. விடிந்ததும் பூக்கின்ற மலர்கள்
கண்ணெழிற் கற்பனை வாழ்வு - அது
. கசந்திடப் போம்சுடுகாடு
வண்ணக் குழைமொழி வனிதை - இவை
. வாழ்வினில் கற்பனை விம்பம்

எண்ணங்கள் பெருகிடுமிரவு - எமை
. ஏற்றி மயக்கிடும் இமயம்
வெண்பனி மறை மலை தோற்றம் அதில்
விழுந்திடும் கதிர் வரை வெண்மை
வண்ண மெழும் வான் ஒளித்தீ - அது
. வந்து கொளுத்திடும் பூந்திரி
உண்ண உருப்படும் மேனி - அதில்
. உணர்வெரி தணிவெனும் இன்பம்

எண்ணங்கள் விண்வழி பிறவி - அவை
. இருந்தெமை இயக்கிடும்கருவி
அண்ணளவில் பகல் இரவு - இவை
. அமைப்பது ஊறவெனும் புணர்வு
மண்ணிடை எதிர் மறை கவர்ச்சி - இவை
. மனதினில் சுகமெழ விரவி
கண்ணதில் மயங்கிட உருகி - மனக்
. காட்சியின் சூனிய வாழ்வாம்