Thursday, 11 February 2016

இயற்கை, தமிழ், இனிமை


சலசல வெனும் நதி யலைகள்
சரசர வெனவிழும் இலைகள்
கலகல வெனும் இனம் பட்சி
கடகட வெனும்நடை வண்டி
சிலுசிலு விழும்மழை சத்தம்
சிதறிடும் அலைகட லோசை
பலதிவை  ஒலிதரும் சந்தம்
பைந்தமிழ் கொண்டது மன்றோ
குலுங்கியும் தளம்பிடச் சுனைநீர்
குதிகின்ற சிறுகய லோசை
தளதள எழிற்தா மரைகள்
தாவிடும் தவளையின் சத்தம்
வளமுற இதழ் சுகம் தேடும்
வந்திடும் தும்பி ரீங்காரம்
துளையிடும் மூங்கிலில் வண்டு
தருமெழிற் சந்தங்க ளென்னே !
மலைகளில் எதிரொலி அதிரும்
மரமிருந் தொருகுயில் பாடும்
சிலை பொழி சிற்பிகள் உளியும்
சிறுவரின் அழுகுரல் ஒலியும்
வலையிழு மீனவர் சொல்லும்
வடிவெடு மாதரின் நடையில்
குலுங்கியே சிணுங்கிடும் மெட்டி
குவலய மிடைஇசை யன்றோ
தாய்மடி கருவினுள் சிசுவும்
தருமவள் இருதய ஒலியும்
சேயெனப் பூமியில் பிறந்து
சீருறத் கேட்கும் தாலாட்டும்
மாயவிண் வெளி தனின்ஓசை
மனிதனின் மாவுடல் மண்ணிற்
சாயவும் போடும் ஒப்பாரி
சகலதும் தமிழிசையன்றோ

Monday, 11 January 2016

தெய்வத்தைத் தேடு


      
தெய்வத்தைத் தேடியும் காணவில்லை - யெந்தத்
திக்கிலும் நல்லருள் தோன்றவில்லை
உய்வதற் கோர்வழி எங்குமில்லை - யெந்த 
ஊரினில் தேடியும் பாசமில்லை
செய்வினை சாபங்கள் கேடு தொல்லை - யிவை  
சேர்ந்து இடர் தரும் பார நிலை
மெய்வருத்தம் சாவு மேலும் வதை - யிவை
மீளப் பிடித்தெம்மை ஆட்டும்நிலை

கையைப் பிடித்தனல் கொண்ட உலை - தன்னில்’
காயம் எரிந்திடத் தள்ளும் நிலை
நெய்யை மொண்டு ஊற்றிமேலும் தீயை - ஊதி
நீள வளர்த்திடு தீயின் எல்லை
பொய்யைப் படைத்தயிப் பூமியிலே - ஏனோ
மெய்யைப் படைத்ததை வேக வைத்தே
தொய்யப் பையில்  காற்றும் போகவிட்டால் - அதில் 
தோன்றும் நிலையென்ன ஆனந்தமோ

செந்தமிழ்த் தேனடை பொற்தமிழோ - எங்கள்
தேவை உயிர் கொள்ளும் வாழ்வுடைமை
தந்தவளே, இனி உன்படைப்பைக் - காக்க
தாமதமின்றியே செய்கடமை
மந்த மாருதமும் வீசிவர - மாலை
மாந்தர் சுகமெண்ணிக்  கூடிவர
அந்தர வான்வெளி கண்டிருக்கு - மெங்கள் 
அன்னையே ஆனந்தமாக்கிவிடு

கன்னங்கருங் காக்கைக் கூட்டமென - இங்கு
காணுமெருதுக ளோட்டமென
பென்னம் பெருஞ்சோலைப் பூமரங்க - ளிவை 
பேசரும் நல்லுணர் வோவியங்கள்
உன்னத ஒற்றுமைக் காணயிவை - சொல்லல்
உன்னரும் வாழ்வினில் காணும்வகை
நன்னெறிகற்று நல்லொற்றுமையில் - மனம்
நாளுமுயர் வெண்ணி வாழ்வையெடு

ஒற்றுமை யற்றவர் வாழ்வினிலே - என்றும்
உண்மைச் சுகந்தன்னைக் காண்பதில்லை
பற்றுமிகக் கொள்ளும் சுற்றமெனில் - அது
பாரில் பிழைத்திடும் முன்னைநிலை
மற்றும் எதுவின்பம் சேர்ப்பதில்லை - ஒரு
மந்திரமில்லை உன் வாழ்வு முறை
கற்றறிவாய் கூடி ஒற்றுமையைக் - கொள்ளக்
காணும் வெற்றி எனும் சக்திநிலை

**********

நானும் அரசன்தான்




நேரே நிமிர்ந்து நடப்பேனடா ஆனால்
நெஞ்சமோ  கூனலடா
பாரே புகழ்ந்திட ஆகுமடா ஆயின்
பாதி மடையனடா
ஊரேமனம் கொண்டு வாழ்த்திடினும்
இவனுள்ளம் சிறுமையடா
வேரே கிடக்குது வாடி யிவனொரு
வீழும் விருட்சமடா
தோல்வி யெனக் கென்றும் சொந்தமடா வெற்றி
தோள்களில் பாரமடா
கால்கள் இறங்கையில் ஓடுதடா மலை
ஏறத் தயங்குதடா
ஆலமரமென நான் வளர்ந்தால் புயல்
ஆட்டும் பின் வீழ்த்துமடா
கோலமதில் நானும் நாணலடா இனி
கொஞ்சமும் வீழேனடா
வேலைகள் செய்திடச் சோம்பலடா நானோ
வீதிக்கு ராசாவடா
மாலைதனில் மது வண்டெனவே மதி
கெட்டொரு மந்தியடா
சாலையில் சுற்றித் திரிவேனடா பல
சேட்டை புரிவேனடா
தோலை உரித்திட யாரும் வந்தால் பின்னே
தோப்புக் கரணமடா
கோவில்கள் வாசலில் பக்தனடா உள்ளே
கொள்கையில் நாத்திகன்டா
சேவைபுரிந்து வணங்கிடுவேன் தரும்
சாதம் வரைக்குமடா
நாவில் நற்கீத மிசைத்திடுவேன் அந்த
நல்லிசை ஞானம்கொண்டோன்
பாவினித்தோ குரல் தந்திடுவான் உதை
போடும் பொதி சுமப்போன்
நாளுமொரு போதும் பொய்யுரையேன் நானோ
நற்குண வேந்தனடா
ஏழுதனை இது எட்டு என்பேன் அது
எண்ணத்தின் மாற்றமடா
பாழுமுலக மெனைக்குறித்து இவன்
பைத்தியம் என்குதடா
ஊரை உலகேய்த்துப் பொய்சொன்னவன் மட்டும்
ஊருக்கு ராஜாவடா!
காதை அறுத்தவன், சங்கிலியைக் கொண்ட
கள்ளன் சிறையிலடா
மாதைக் கெடுத்தவன் மங்கை தீண்டஅந்தக்
மாயவன் உள்ளேயடா
தீதை இழைத் தில்லம் தீயிட் டெரித்தவன்
நீதியின் கையிலடா
ஈது அனைத்தையும் யாரொருவன் செய்தால்
நாட்டின் அரசானடா!

என் அன்னை, என்தேசம், என்கனவு

பகுதி 1
என்னோர் எழில்! நிலவோ ஏறிவான் வீதியிலே
மின்னும் தனதொளியை மேதினியி லூற்றுங்கால்
தன்னந் தனிநடந்து தங்கநில வொளிகுளித்து
முன்னே என்பாதையில் மேற்குவழி நடந்தேன்
வெண்மை நிலவொளியின் வீச்சினில் முன்னிருந்த
கண்முன் னெழில்தோற்றம் கைவரைந்த ஓவியமாய்
எண்ணக் கனவுகளில் எழுகின்ற மாயமெனும்
வண்ணம் கலந்திருக்க வழியில் அவள்கண்டேன்
மண்ணோடு தூசுபட மைவிழிகள் கோபமுற
விண்ணோ டெறித்தநிலா வீசுமொளி மின்னலிலே
பெண்ணின் திடமிழந்து பேசற்கரியவளாய்
திண்மை யிழந்து,வரும் தென்றல் உடல்சரிக்க
நின்றாள் துயர்பெருத்த நீள்விழிகள் நீர்சொரிய
தென்றல் தொடுந்தேகம் தீயெனவே வேகிவிட
கன்னம் எழில்சிதையக் கண்ணீரும் காய்ந்திருக்க
என்னோர் துயரடைந்தாள் ஏதறியேன் என்றதனால்
பெண்ணே பெருந்தகையே பெயரேது நானறியேன்
கண்ணீர் வழிவதுமென் காரணமும் தானறியேன்
மண்ணில்பெருவாழ்வு மாதுகொண்ட தாய்வதன
வண்ணம் தெரியுதம்மா வந்ததிங்கு ஏதென்றேன்
நெஞ்சம் அழுதுகொள நிர்க்கதியாய் ஏந்திழையோ
கொஞ்சம் எனதுகுரல் கொடுத்த மனத்துணிவில்
வஞ்சம் இழைத்தாரே வாழ்விலோர் சிங்கமகன்
நஞ்சின் நெஞ்சத்திரு நாட்டின் கொடியவனாம்
எந்தன் பெயரீழம் இன்பமுடன் தேன்தமிழைச்
சொந்தம் கொண்டே நிலத்தை சுற்றிவர மைந்தரவர்
வந்தோர் பகையறுத்து வாழ்வுதர வீரமுடன்
செந்தேன் தமிழ்வளர்த்து சீருடனே ஆண்டிருந்தேன்
பூவிரியப் புள்ளினங்கள் பொன்வானில் நீந்திவர
தாவிவிழுந் தோடும்நதி தமிழ்வாழ்த்தி இசைபாட
வாவிதனில் நீரோடி வட்டஅலைப் பூமலர
பூமிதனில் ஈழமெனும் பொன்நாட்டுக் கன்னையிவள்
என்னோர் அழகுடனே ஏற்றமுடன் நானிருக்க
வன்மை கொண்டேயுலகு வாழ்வை அழித்ததையோ
இன்னும் உயிர்களைந்து இதுபோதா ஊரழித்து
பொன்போலும் பூமிதனை பேய்வாழச் செய்தார்கள்
கொஞ்சங் குரல்நடுங்க கோதையுடல் தான்துடித்து
பஞ்சாம் முகில்நடுவே பாயுமிடி மின்னல்பட
நஞ்சின் கொடுமைகொண்ட நாகமொன்று தீண்டியதாய்
நெஞ்சம் துடிதுடித்து நினைவழிய மேலுரைத்தாள்

என் அன்னை, என்தேசம், என்கனவு 2

பகுதி 2
அந்தோ படுந்துயரம் அத்தனையும் என்சொல்வேன்
நிந்தை புரிந்தவரோ நெஞ்சழவே கேடுசெய்தார்
இந்தோர் நிலையடைய இன்னலிட்ட எத்தர்தனை
வந்தே விரட்டிவிடு வாய்மை நிலைநாட்டிவிடு      .
எங்கே உலகநீதி எங்கே உரிமையென்று,
செங்கோல் பிடித்தவர்கள் செய்வதென்ன கேட்டுவிடு
பொங்கும் தமிழ்க்குரலை பேச்சை நெரித்தழித்து
சங்கை எடுத்தூதி சாவைஎமக் கீந்ததென்ன
பொன்னால் மணிமுடியும் பெற்றதோர் வாழ்வும்
தன்நேர் நிகரற்ற தமிழ்வாழும் தேசமென
மின்னேர் விளைபுயலின் வேகமெடு மைந்தர்களும்
முன்னே துணையிருக்க முத்தமிழின்மூச்செடுத்து
பன்நூற் கலைவளங்கள்; பண்ணிசைகள் நற்றமிழாம்
முன்னோர் செய்காவியங்கள் மூத்தோர் பழங்கலைகள்
என்னை மகிழ்வுசெய்ய எத்தனையோர் இன்பமுடன்
மன்னர் மணிமுடிகொள் மாவீர ஆட்சிகண்டோம்
அணிகொள் அழகோடு அறத்தின் வழிநடந்தோம்
பிணிகொள் அரசுசில போரென்று நீதிகொன்றார்
பணியா உளஉரமும் பாதையிலே நேர்நடையும்
துணிவோ டுயர்மறமும் துள்ளிவரும் போர்முடித்து
குனியா துணர்வுபொங்க கொள்கைவழி நீதியுடன்
தனியாய்அரசுகண்ட தாயின்நிலை இன்றறிவாய்
இனியேன் மௌனமடா இன்னலிடும் பாதகரை
தனியோர் இனமழிக்க தட்டிப்பதில் கேட்டிடடா
ஈழமகள் கண்களிலே எழுந்தோடும் நீராறு
ஆழமன துன்பமதை ஆற்றாமை தான்விளக்க
வீழுமீர் பூங்கரங்கள் வீரமகள் கால்கள்தனும்
பாழும் பகைபிணைத்து பாடுபெருந் துன்பமிட்டார்
கேழாயென் சின்னவனே கீழாம்நிலை யடைந்தோம்
நாளுமவர் திட்டமிட்டே நாட்டின் குடிகொன்றார்
மாளுமிந்த மக்களுயிர் மகனேநீ காத்திடடா
வாழுமிக் காலமதில் வாசல்வரை தள்ளிவைத்தார்
நாளைஎமை வீதியிலே நாட்டோரம் ஆழ்கடலில்
சூழைதனில் தள்ளியெமை சுற்றிவரத் தீயிடுவார்
மாளமுழு தாயெரித்து மண்ணதனை கொண்டிடுவார்
வாழவென நீஎழுந்து வையகத்தை கேட்டுவிடு
இல்லையெனில் நீயறிவாய் எமதழகுத் தமிழ்த்தேசம்
வல்லோர் அரசுகளின் வாயிலுண வாகிவிடும்
மெல்லத் தமிழழியும் மேதினியில் என்பதனை
பொல்லாப் பெரும்புழுகாய் பூமியிலே ஆக்கிவிடு
துள்ளியெழு உன்னுயிரும் துடிக்கத் துணிவுடனே
தெள்ளுதமிழ் வெல்லுமொரு திக்கைக் கருத்திலெடு
கள்ளினிமை பூமென்மை காற்றின் சுகம்யாவும்
உள்ளதமிழ் வாழஇனி உன்கடமை ஆற்றிவிடு
மங்கும் மதியொளியில் மங்கையவள் சொல்லிவிட
எங்கோ இருந்தெழுந்த  இடியோடு புயலெனவே
பொங்கும் பெருஞ்சுழலோ பூவையவள் முன்னுருள
தங்கஒளி தானுருக்க தலைமறைந்து போயினளாம்
--அன்புடன் கிரிகாசன்

யார் அழைப்பது?


தேவன் கோவில்மணி ஒலிகின்றது- ஒரு
தீபம் அசைவதங்கு தெரிகின்றது
பாவம் கணக்கெழுதி முடிக்கின்றது= ஒரு
பாலம் விழி எதிரில் பிறக்கின்றது
வாவென்றிரு கரங்கள் அழைக்கின்றது- ஒரு
வாசல் திறப்பதங்கு தெரிகின்றது
போவென் றெனைவாழ்வு சினக்கின்றது- நான்
போகும் பாதை விளக் கொளிர்கின்றது
பாசம் விழிகளினை மறைகின்றது- ஒரு
பாரம் மனதில் சுமை கனக்கின்றது
நேசம் இருந்துவிடக் கேட்கின்றது- என்
நெஞ்சம் போராடித் தோற்கின்றது
கூடி இருந்த உடல் துடிக்கின்றது -அதன்
கோலம் எதை நினைத்து சிரிகின்றது
ஏடும் கதை தொடரும் எழுதியதை- புள்ளி
இட்டு முழுதும் என முடிக்கின்றது
ஓடும்நதி கடலில் கலக்கின்றது- அதன்
ஓசைஅடங் கமைதி பிறக்கிறது
வாடும் மனது இனி வசந்தம்மென- தனை
வாட்டும் கடும்துயரைப் பழிக்கின்றது
சேரத் திரிந்தநிழல் பிரிகின்றது- தினம்
செய்யும் மணியொலியும் சிதைகின்றது
தேரும் வழியில் தடம் புரள்கின்றது- சென்ற
திக்கில் தெருமுடிந்து கிடக்கின்றது

கிரிகாசன்

நான் கண்ட ஆனந்தம்!

கோவிலோ கூடமோ மாளிகையோ -இது
 கொற்றவன் நிற்கவே மாடமதோ
மாவிலை கட்டிய தோரணமோ -இம்
 மன்னவன் சாயச் சிம் மாசனமோ
தேரிலே சுற்றிடும் ஆனந்தமோ -அது
  தென்றலே றிவிளை யாடிடுதோ
பூவிலே தொங்கும்பல் மாலைகளோ -இடை
  பூத்ததும் வானத்துத் தாரகையோ
ஏறியே ஓடவே மேகங்களோ -இந்த
   ஏழையை சுற்றியும் தேவர்களோ
கூறியே கொட்டினர் பூமழையோ -இவன்
    கொண்டது வாழ்வில்பெரி தல்லவோ
பேறிலே நல்லதோர் பேறிதுவோ -அவன்
   பிரம்மனும் எண்ணாப் பெருங்கொடையோ
மாறியே கொள்ளும் பகலிரவோ -இம்
   மாற்றம்மென் வாழ்வில் பெருங்கனவோ
அன்பினில் இனிய செந்தமிழே -என்
   ஆவி கலந்திட்ட பொன்மகளே
என்பிலும் ஊடேஓர் தீஎரிதே -இதில்
     இன்ப நினைவும் பெருகிடுதே
பொன்னெனும் வெண்ணிலா பூத்திருக்க -அயல்
    பொய்கையில் நீரலை ஆர்ப்பரிக்க
சின்னஇசை கொண்டு தென்றல்வர -அதில்
    செவ்விதழ் பூமணம் சேர்ந்துவர
மின்னும் மத்தாப்பென வண்ணவெடி எந்தன்
   மேனியில் இன்பமாம் பூச்சொரிய
கண்ணிலே ஆனந்த நீர் பெருக -இது
   கற்பனையென் றுள்ளம் கேலி செய்ய
தன்னிலே சொர்க்கம் தரைநழுவி..வந்து
   தாழுதே காலடி தாங்கிடுமோ
என்னிலேஅன்பு கொள் செந்தமிழே இனி
   இங்கிவன் உன்மடிப் பிள்ளையன்றோ!
மகி