விதிநீயே விளையாடும்போது
வேண்டுவதென் நாம் மனிதம்தானா
எதிலேயும் துன்பங்கள்தானா
இல்லை யுனக்கிரக்க குணம் ஏனோ
குதித்தாடி நீசெய்யும் மாயம்
குருடாக்கி எமை வீழ்த்தலென்ன
சதிசெய்யும் கலைபடித்த வல்லோன்
சகுனிக்கோ பாடம் சொன்ன ஆசான்
நதிஓடும் நடந்தாலும் சேரும்
நான்கு திசை கண்டும் கடல் கூடும்
புதிதாகப் பூத்த மலர் வண்டு
போதை கொளும் தேனை உண்ட பின்பு
பதியோடு சதிசேரும் வாழ்வும்
பனிபூத்த புல் வெளியின் காற்றும்
இதிலேயும் அதிலேயும் எங்கும்
இட்ட மகிழ் வேன் எமக்குத் துன்பம்
விதியென்று கட்டளை யிட்டாரோ
விந்தையுன்னில் எண்ண்மிட்டதாரோ
மதிதன்னை மயக்குவதில் மன்னன்
மாயவித்தை மகுடிஊதும் குள்ளன்
பொதியாக நாம்சுமக்கும் கூடு
போட்டுடைக்க செய்யும்வழிபார்த்து
அதிலேயும் ஆணவத்தைக் கொண்டு
அள்ளுமுடல் செய்வலிகள் தந்தே
கொதிக்கின்ற உள்ளமதை கொண்டோம்
கூடிச் செய்யும் வஞ்சனைக்குள் நில்லோம்
அதிகமென்று கொண்டதென்ன துன்பம்
அல்லலுற்று வேதனை கொள் இல்லம்
முதிர்வயலில் முற்றும் கதிர்வளையும்
முத்தமிழைப் பேசுமினம் நிமிரும்
சதி செய்துவாழ்வளிக்க முன்னே
சற்றுப் பொறு சதிமதியால் வெல்வோம்
No comments:
Post a Comment