Thursday 24 December 2015

என்ன செய்வது?

சக்கரத்தைப் பேய்கள் கண்டு சுற்றிச் சுற்றி ஆடியுமென்
சக்தி நீதி தெய்வசீலம் தானறிவாரோ
பக்தி கொள்ளும்கோவிலென்று பார்க்குமோ விலங்குவந்து
பாதிபூசை யில்நுழைந்தால் பட்டதுபாடே
விக்கிரத்தில் தெய்வம்கண்டு வீதிவலம் சுற்றிவந்தும்
வேண்டும்தமிழ் வாழ்வுகாண வில்லங்கம் ஏனோ
சக்திதெய்வம் எங்கள்வாழ்வு சார்ந்து நின்று காக்குமென்று
சற்று கண்கள் தூங்கிவிட்டோம் சஞ்சலம் ஏனோ

உக்கிரமென் றுள்ளேவந்து ஓடு சுவர் இல்லமெங்கும்
ஊழிவினைக் காற்றுடைத்து வீழ்த்திடலாமோ
அக்கா தம்பி தங்கை யென்று அத்தனையும் தெய்வமனை
ஆண்டுகளாய்க் கொண்டிருந்தோம் இன்றிலையேனோ
விக்கினத்தைச் செய்யவென்று வேண்டியவர் வந்துநிற்க
விட்டிருந்து வேடிக்கையும் பார்ப்பது உலகோ
சிக்கலுக்குத் தீர்வுஎன்ன, சுற்றுடை வாள் கொண்டவர்கள்
சத்திரத்தில் விட்டுப் பிச்சை யோடுதந்தாரோ

எக்கரத்தை தூக்குவதாம் இரந்திடவா எழுந்திடவா
ஏழரைமீ தேறிநின்றும் ஆடுது விதியே
விக்கிர மாதித்தனவர் வீரமார்பில் தொங்கிவினா
வேடிக்கைவே தாளம்கேட்க விடையுளதாமோ
மக்கனுக்கு  காதினிலே மந்திரத்தை ஓதியென்ன,
மறுபடியும் மறுபடியும் மறந்திடுவானே
சக்கைபோடுபோட்டவரைச் சந்தியிலே வைத்தழித்துச்
சாக்கில் கட்டி வீசுகிறார் சாய்ந்திடலாமோ

அக்கிரமம் காணுதென்றே ஆறுகுளம் தாண்டியெங்கும்
ஆனதேசம் காடுமலை கத்திவந்தோமே
விக்கினத்தைவேண்டிப் புவி வேண்டுமென்றே தூங்கிவிட்டால்
விட்டுமவர் கண்விழிக்கப் பார்த்திடல்வீணே
அக்கம்பக்கம் யார்துணைகாண் ஆற்றலெலாம் நாட்டிலன்றி
அத்துமீறீ வந்திடுவர் என்பது கனவே
சுக்கு மிளகு திப்பிலியா சுட்ட காய்சால்போக இது
சொட்டி இரத்தம் கீழ்வழியும் வேறிதுதானே

எத்தனை நாள் காத்திருக்க ஏடெழிதிப் பாட்டிசைத்து
இட்ட சுரவாத்தியங்கள் ஏந்திடுமுலகே
அத்தனைக்கும் பக்கஇசை அங்கிருந்து கேட்குதய்யா
ஆடழிக்க முன்னரெழும் இன்னிசை தானோ
சொத்து மண்ணை விட்டபின்பு சொர்க்கமெங்கு காணவென்று
சுற்றமுடன் சேர்ந்து மொன்றாய் சென்றிடலாமோ
சத்தமின்றி ஒன்றிணைந்து  சத்தியத்தின் சக்தியோடு
சட்டமிட்டு நம்பலத்தை காத்திடுவோமோ 

---------------------

No comments:

Post a Comment